Header Ads



இதைவிட வேறு என்ன வெட்கக்கேடு..?


பாரிய இலத்திரனியல் வீசா மோசடி தொடர்பில் இந்த அரசாங்கத்தின் அமைச்சரவைக்கும், சம்பந்தப்பட்டோருக்கும் எதிராக  உயர் நீதிமன்றத்தில் தாங்கள் தாக்கல் செய்த மனித உரிமை மீறல் வழக்கில் இன்று(13)வாதாடிவிட்டுத்தான் மூதூருக்கு    ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.


 வெள்ளிக்கிழமை(13) முதூரில்  ஐக்கிய மக்கள் கூட்டணியின்  ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.   


அங்கு,தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் மேலும் கூறியதாவது,

   

இந்த அரசாங்கம் வீசா தொடர்பில் 2400 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்டுள்ளது.இந்த மோசடி மத்திய வங்கி மோசடியையும் விட 100,150 வீதத்துக்கு மேற்பட்ட மோசடியாகும். இந்த மோசடி  தொடர்பில் நானும் சக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ சுமந்திரன் மற்றும் பாடலி சம்பிக ரணவக்க ஆகியோரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தோம்.அந்த வழக்கில் சட்டத்துக்கு அமைவாக கேள்விப்பத்திரம் கோரப்படாமல் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு கொந்தராத்து வழங்கப்பட்டதென்றும் குறிப்பிட்டு ,அதில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், அமைச்சின் செயலாளர், குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தோம். 


இந்த வழக்கு இரண்டாவது தடவையாக இன்று(13)விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது ,முன்னர் மூன்று    நீதியரசர்களும் புதிய வீசா நடைமுறைக்கு  இடைக்கால தடையை பிறப்பித்திருந்த நிலையில் ,நீதிமன்ற உத்தரவை மீறி முந்திய வீசா முறைக்கு திரும்பாது நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திற்கு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.


சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்த பின்னர் முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கும்  அதனுடைய எதிர்பார்ப்புகளுக்கும் அவருடன் இருக்கும்  முஸ்லிம் தலைமைகள் பொறுப்பேற்போம். 

 

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அளிக்கும் வாக்குகள் அறவே பயனற்றவை. 


சஜித் பிரேமதாசவின் நல்ல குணாம்சங்கள் பற்றி வெவ்வேறுவிதமாக ஒவ்வொருவரும்  விமர்சிப்பார்கள். முஸ்லிம் சமூகத்தின் அண்மைக்காலப் பிரச்சினைகளில் அவருடைய சிறப்பான நடத்தைகளைப் பார்த்தோம்.அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் நடத்தைகளையும் பார்த்தோம்.


 பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் யுத்தம் செய்து காஸாவிலுள்ள குழந்தைகள்,பெண்கள், முதியவர்களை படுகொலை செய்து, அவர்களின் உடைமைகளையெல்லாம் அழிக்கின்றது.யுத்த நிலைமையில்   காஸா மக்கள்  இஸ்ரேல் பண்ணைகளுக்கு வேலைக்குப் போவதில்லை. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு இலங்கையிலிருந்து வேலைக்கு ஆட்களை அனுப்புகின்றது. 


 நீதிமன்ற தீர்ப்புகளால்  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நீதிமன்றம் வெளியேற்றியுள்ளது. அதில் இஸ்ரேலுக்கு இங்கிருந்து ஆட்களை அனுப்பிய மனுஷ நாணயக்காரவும் ஒருவர் . அவரை ஆதரித்து இஸ்ரேலிய  இளைஞர் மன்றம் என்ற பெயரில் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு  காலியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.


 ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் எமன் நாட்டில் செங்கடலூடாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கு எதிராக ஏவுகணைத்தாக்குதல் நடத்தி  கப்பல்களை நிர்மூலமாக்கிய போது இந்த ரணில் விக்கிரமசிங்க இலங்கை கடற்படையை அங்கு அனுபபுகிறார் என்றால் இதைவிட வேறு என்ன வெட்கக்கேடு? என்றார்.

No comments

Powered by Blogger.