தம்முடன் இணையுமாறு சஜித்திற்கு, ரணில் அழைப்பு - ஒரு பாடம் கற்றுத் தருவதாகவும் தெரிவிப்பு
ஜனாதிபதி போட்டியில் இருந்து நான் ஒதுங்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தான் சஜித் மற்றும் அனுரவைப் போன்று ராஜினாமா செய்யும் அல்லது ஓடிப்போகும் நபரல்ல என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பின்வாங்கி ஓடிச் செல்லாது துணிச்சலோடு முன்நோக்கிப் பயணிக்கும் பாடத்தை மட்டுமே சஜித்திற்கு கற்பிக்க முடியாமல் போனதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனை கற்பதற்காக தம்முடன் இணைந்து கொள்ளுமாறும் அவருக்கு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று (15) நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
சஜித்தும் அநுரவும் மாற்றம் பற்றி பேசினாலும், நாட்டிற்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டமே தேவை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் 5 வருடங்களில் இந்த நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக மக்களுக்கு உறுதியளித்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அனுஷ விமலவீர, தேசிய மக்கள் சக்தியின் குண்டசாலை தொகுதி அமைப்பாளர் சிசிர குமார செம்புவத்த மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகார செயலாளர் ஒ.கே. நவாஸ் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இணைந்து கொண்டனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
''இரண்டு ஆண்டுகளுக்கு முன், மக்கள் தேர்தல் நடத்தக் கேட்கவில்லை. தேர்தலொன்றை நடத்த முடியும் என்று மக்கள் நினைத்திருக்கவில்லை. ஆனால் இன்று மக்கள் பணம் சம்பாதிக்கின்றனர். இந்த நீண்ட வார இறுதியில் கண்டி, நுவரெலியா, பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கு வந்துள்ள மக்களைப் பார்க்கும் போது, நாடு அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தைக் காணலாம்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சியை ஏற்க அன்று இவர்கள் முன்வந்திருந்தால் நான் இங்கு வர வேண்டிய அவசியமே இருந்திருக்காது. பிரதான வேட்பாளர்களான நாங்கள் மூவரும் இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவர்கள். 1977இற்கு முன்னரே எனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தேன். ஜே.ஆர் ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க, லலித் அதுலத்முதலி, காமினி அத்துகோரள ஆகியோருடன் நானும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிபெறச் செய்தோம். அவர்களில் இன்று நான் மட்டும் எஞ்சியிருக்கிறேன். எனவே ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி மகாவலி திட்டத்தை ஆரம்பித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுரவை கோட்டேவை தலைநகராக மாற்றினார். ஜே.வி.பி பயங்கரவாதத்தால் அழிக்கப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பெரும் பங்களிப்பை செய்தார். அதன்போது சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி எமது தொழில் மூலோபாயங்களை முன்வைத்தோம். இந்தப் பணி இலங்கை வரலாற்றில் ஒரு சாதனை என்றே கூற வேண்டும். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்ட போது அவரைக் காப்பாற்றியது நான்தான். நான் அவரைக் காப்பாற்றவில்லை என்றால் சஜித் பிரேமதாச இன்று அரசியலில் ஈடுபட்டிருக்க முடியாது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்தின் போது, அந்தப் பொறுப்புகளை நான்தான் ஏற்றுக்கொண்டேன். அந்த சமயத்தில் எனது நண்பர்களான லலித், காமினி ஆகியோரை விட்டுவிட்டு கட்சியுடன் இருந்தேன். முன்னாள் ஜனாதிபதியின் ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் தனது தந்தையின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்தமைக்கு வருந்துகிறேன். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் அவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை.
2020 பாராளுமன்றத் தேர்தலின் போது இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படப் போகும் சேதத்தை நான் முன்கூட்டிக் குறிப்பிட்டேன். ஆனால் அதை யாரும் ஏற்கவில்லை. நாம் சொன்னது போல் இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது. 2022இல் பொருளாதாரம் சரிந்த போது நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கேட்டேன். சஜித் எனக்கு ஆதரவு வழங்கவில்லை. மாறாக ஜீ.எல்.பீரிஸுடன் இணைந்து டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்து சஜித் பிரதமராகத் தயாரானார். சஜித் என்னிடம் பிரதமர் பதவியை கேட்டிருந்தால் நான் அதனைப் பெற்றுக் கொடுத்திருப்பேன்.
இன்று முன்னாள் விவசாய அமைச்சர் அநுரவும் சஜித் பிரேமதாசவும் என்னுடன் போட்டியிடுகிறார்கள். அன்று நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மக்களை வாழ வைக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஏன் இந்தப் பொறுப்பை அவர்கள் ஏற்கவில்லை? இன்று அனைத்தையும் இலவசமாக தருவதாக உறுதியளிக்கின்றனர். அன்று ஏன் இவற்றைச் செய்யவில்லை என்று அவர்களிடம் கேட்கிறேன்.
அரசியல்வாதிகள் ஏன் சாதாரண மக்களை கைவிட்டார்கள் என அனுரகுமார கேட்கிறார். தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றி இவ்வளவு கவலை இருந்தால், பொருளாதார நெருக்கடியில் ஏன் அவர் நாட்டை ஏற்கவில்லை. நான் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய பிறகு, இப்போது நாட்டின் பொறுப்பை கேட்கின்றனர்.
நான் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகத் தயாராவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறி வருகிறது. நான் ராஜினாமா செய்பவன் அல்ல என்பதை அவர்களுக்கு கூறி வைக்கிறேன். அவர்களைப் போல் ஓடும் காலணி அணிந்தவர் அல்ல நான். ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவரையும் என்னுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கின்றேன். சஜித் பிரேமதாசாவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். தப்பி ஓடாமல் இருப்பது தொடர்பான பாடத்தை அவருக்குக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன்.
இக்கட்டான காலங்களில் இந்த நாட்டு மக்களை வாழ வைப்பதற்காக கடினமான முடிவுகளை எடுத்தேன். வைத்தியர் ஒருவர் விருப்பமின்றி அறுவை சிகிச்சை செய்வது போல அந்த முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.
பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், நாங்கள் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்குகிறோம். 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதே எனது பிரதான நோக்கமாகும்.
இப்போது சஜித்தும், அநுரவும் பொருட்களின் விலையைக் குறைப்பதாக சொல்கின்றனர். சலுகைகள் வழங்கப்படும் என கூறுகின்றனர். திசைகாட்டியின் விஞ்ஞாபனத்தில் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாக்குறுதி வழங்கியுள்ளவற்றைக் கொடுத்தால் அரசாங்கத்தின் செலவு உயரும்.
அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்துள்ளது. செப்டம்பர் 13 ஆம் திகதி IMF அறிவிப்பொன்றை வெளியிட்டது.
"இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பை வழங்குவதற்கு இந்த வேலைத் திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது" என்று அது கூறியுள்ளது. இந்த இலக்குகளை மாற்ற வேண்டாம் என்று IMF கூறியுள்ளது.
தற்போதைய சீர்திருத்தங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை மாற்ற முடியாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, உடன்பாடு எட்டப்பட்ட ஒப்பந்தங்களை தொடர வேண்டும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இவற்றை நான் கூறவில்லை. சர்வதேச நாணய நிதியம் தான் கூறுகிறது.
ஜனாதிபதி ஆசனத்தில் அமர தனக்கு வாய்ப்பொன்றை வழங்குமாறு அநுர கேட்கிறார். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி நாற்காலிக்கு கொண்டு வர ஜே.வி.பி. தான் பரிந்துரைத்தது. அவர்கள் முகத்தை மாற்ற முயல்கிறார்கள்.
நான் எதனையும் மாற்ற மாட்டேன். பாராளுமன்ற அதிகாரத்தைக் கொண்டு நாட்டை ஸ்திரப்படுத்தினேன். புரட்சியொன்றை மேற்கொள்வதற்கே மக்களிடம் ஆணையைக் கேட்கிறேன். மாற்றத்தைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. அதற்கு ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டம் தேவை. 5 வருடங்களுக்குள் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தி புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
மேலும், அஸ்வெசும, உறுமய ஆகிய திட்டங்களை செயல்படுத்தி சமூக புரட்சியை செய்து வருகிறேன். இந்தப் புரட்சியை யாரும் செய்யவில்லை. இந்தப் புரட்சியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கிறேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன உள்ளிட்ட நாம் அனைவரும் இணைந்து இந்தப் புரட்சியை செய்வோம். " என்றும் தெரிவித்தார்.
Post a Comment