Header Ads



நாம் வெல்வது உறுதி - ரணில்


'இயலும் ஸ்ரீலங்கா' வேலைத் திட்டம் 2025 - 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும்  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அனைத்தையும் இலவசமாக தருவதாக கூறும் சஜித் நாட்டின் பொருளாதாரத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அனுர திஸாநாயக்க அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


கம்பளையில் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.


இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தான் ராஜபக்ஷாக்களைப் பாதுகாப்பதாக சஜித்தும் அனுரவும் குற்றம் சுமத்தினாலும்,   தாம் ஜனாதிபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது மக்களைப் பாதுகாப்பதற்காகவே அன்றி, ராஜபக்ஷவைப் பாதுகாப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்தார்.


அந்தப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றிய தான், நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில்  கோருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் 'இயலும்  ஸ்ரீலங்கா' வேலைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:


''கம்பளையில் நான் கண்ட மிகப் பெரிய மக்கள் கூட்டம் இது தான். நாம் வெல்வது உறுதி. உங்களுக்கு பெற்றோல், டீசல், மருந்து வழங்கவும், உணவு வழங்கவும் நாட்டைக் கட்டியெழுப்பவும் தான் நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். 2 வருடங்கள் முன்னெடுத்த திட்டத்தால் கஷ்டத்துடனேனும் அனைவரும் வாழக் கூடியதாக உள்ளது. சஜித்தும் அநுரவும் மக்களை தனிமைப்படுத்திவிட்டு ஓடினார்கள்.


என்னை ரணில் - ராஷபக்‌ஷ என்கின்றனர். ராஜபக்ஷவினரைப் பாதுகாப்பதாக சொன்னார்கள். நான் மக்களைப் பாதுகாப்பதற்குத்தான் வந்தேன். ராஜபக்ஷவினரை நான் பாதூகாத்திருந்தால் அவர்கள் எனது மேடையில் இருந்திருக்க வேண்டும். மக்களை வாழ வைக்க ஒத்துழைக்குமாறு கோரியபோது  தேர்தல் வேண்டும் என்றனர். எமக்கு ஒத்துழைப்பு வழங்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் தான்  இன்று நாட்டைக் கோருகின்றனர். அவர்களை துரத்தியடிக்க வேண்டும். நாம் பொறுப்பேற்ற போது நாட்டிற்கு எதிர்காலம் இருக்கவில்லை. மக்கள் கடன் பட்டிருந்தனர், நகைகளை ஈடுவைத்தனர். வரியை விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்தக் கஷ்டங்களை நான் அறிவேன். வாழ்க்கைச் செலவு ஓரளவு குறைந்துள்ளது. அதனை இன்னும் குறைக்க வேண்டும். மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளன. 


எம்மால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். வரிச்சுமையை குறைக்கவும் நிவாரணங்கள் வழங்கவும் எம்மால் முடியும். இவற்றை நாம் இணைந்து  மேற்கொள்வோம்.


2025-26 ஆம் ஆண்டாகும் போது சுமூக நிலையை ஏற்படுத்துவேன். அதற்கான வாய்ப்பை எனக்குத் தாருங்கள். அடுத்த வருடம் முதல் தொழில்வாய்ப்பு, விவாசாய நவீனமயமாக்கல், அஸ்வெசும, உறுமய திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். லயன் அறைகளை கிராமங்களாக்கி அந்த காணி உரிமையையும் தோட்ட மக்களுக்கு வழங்க இருக்கிறோம்.


சஜித் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாக சொல்கிறார். அவரின் பொருளாதாரம் பற்றி பேசிப் பயனில்லை. திசைகாட்டியின் விஞ்ஞாபனத்தில் உள்ளது போன்று நான் ஜனாதிபதியானால் 'வளமான நாடு : அழகான வாழ்க்கை' உருவாகும். அதிலுள்ளவாறு வரவு செலவுத் திட்டம் தயாரித்தால் 400 முதல் 425 ரூபாவாக டொலர் உயரும்.


எமக்கு செலவு 6,800 பில்லியனாக உள்ளதோடு 5100 பில்லியனாக வருமானம் காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய சந்தையில் இருந்து 5 வீத வட்டிக்குக் குறைவாகப் பணம் பெற இருக்கிறோம். அதன் ஊடாக வரவு செலவுத்திட்ட குறைபாடு தீரும். திசைகாட்டியிலுள்ளவற்றை நிறைவேற்ற 8900 பில்லியன் அவசியம்.  வரி குறைத்தால் 4900 பில்லியன் வருமானம் குறையும். மொதத் தேசிய உற்பத்தியில் 12 வீதமாக துண்டுவிழும் தொகை இருக்கும். அதாவது 4000 பில்லியன் குறைவாக இருக்கும். பணம் அச்சிட்டால் வெளிநாட்டு உதவி கிடைக்காது. இந்த நிலையில் டொலரின் பெறுமதி 500 டொலர்களாகும். நான் தவறு எனின் தமது புள்ளிவிபரங்களை வௌியிடுங்கள்.


பொருளாதார திட்டம் எதுவும் அநுரவிடம் கிடையாது. கோட்டாபய காலத்தை விட மோசமான நெருக்கடி நிலையை முன்னாள் விவசாய அமைச்சர் ஏற்படுத்துவார். எனவே புத்திசாலித்தனமாக சிந்தித்து முடிவெடுங்கள்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.