Header Ads



ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான, தேசிய ஷூரா சபையின் மகஜர்


தேசிய அளவிலான பல முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பொது அமைப்பான தேசிய ஷூரா சபை, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபத் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பின்வரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கிறது:- 


1. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்துதல்.  


தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, பொதுத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல்களையும் மிகக் குறுகிய காலத்திற்குள் நடாத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சித் தேர்தலை ஒரு வருட காலத்திற்குள்  வேண்டும்.  


2. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிப்பும் அதனுடன் தொடர்பான திட்டமும்:


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் பட்சத்தில், இரு அவைகள் கொண்ட பாராளுமன்றக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கீழ் சபை/மன்றம் (Lower Council/Chamber(LC)) தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை(MPs) கொண்டதாக இருக்கும் அதேவேளை, மேல் சபை/மன்றம் (Upper Council/Chamber (UC)) அனைத்து சமூகங்களிலிருந்தும் நியமிக்கப்பட்ட சம எண்ணிக்கை கொண்ட  பிரதிநிதிகளால் அமைக்கப்பட வேண்டும். எந்தவொரு சட்டமும் ஒழுங்குவிதியும் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அனைத்து சமூகங்களினதும் நலன்களும் பரிசீலிக்கப்பட்டு கவனிக்கப்படுவதை இது உறுதி செய்யும்.


3. விரைவான பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுதல்:-


பின்வரும் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக முதலிரண்டு வருடங்களில் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்:-


a) மக்களின் அத்தியாவசிய உணவுத் தேவைகள் அனைத்திலும் தன்னிறைவை அடைய,நாட்டிற்குள் உற்பத்திகளை மேம்படுத்துதல்.


b) நாட்டின் பாரம்பரிய மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய மற்றும் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களது ஏற்றுமதியில் 30% அதிகரிப்பை ஏற்படுத்துதல், ஏற்றுமதி திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நாட்டிற்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணியைப் பெறும் போது ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்க ஏற்பாடு செய்தல். 


c) வங்குரோத்து நிலைமையினால் ஏற்கனவே பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கஷ்டங்களை காலாண்டு அடிப்படையில் குறைத்தல் மற்றும் குடிமக்கள் மீதான அதன் மோசமான விளைவுகளை நீக்க நடவடிக்கை எடுத்தல்.


4. தேசிய ஒற்றுமை, அமைதி, சகவாழ்வு என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்குதல்: 


இலங்கையர்களை இன-மத அடிப்படையில் பிளவுபடுத்தும் உள்நாட்டு, வெளிநாட்டு முயற்சிகளைத் தோற்கடித்து மக்களை இலங்கையர்களாக ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமை வழங்குதல். தற்போதுள்ள அரசியலமைப்பின் (16(i) ஆம் பிரிவின்) கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள உரிமைகளையும் அதன் மூலம் இலங்கையில் சமாதானமும், நல்லிணக்கமும் பொருளாதார அபிவிருத்தியும் ஏற்படுவதை உறுதிப்படுத்துதல்.அனைத்து இனத்தவர்களது தனியார் மற்றும் இடம்சார் சட்டங்களும் வழக்காற்றுச் சட்டங்களும் பாதுகாக்கப்பட்டு அவை சார்ந்துள்ள கலாசாரத்திற்கு இணங்க அவற்றை மேம்படுத்துதல்.


5. விரிவான மற்றும் புத்தாக்க கல்விச் சீர்திருத்த முறை:


தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்துவதனூடாக அனைத்துப் பிரஜைகளும் பயனடையக்கூடிய  ஒரு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குதல். இதன் மூலம் கீழ் மட்டத்திலுள்ள பிரஜைகளும் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்யும் ஆற்றலைப் பெறுவர்.


6. மனித உரிமைகளைப் பாதுகாத்தல்:-

 

a) அதிகார துஷ்பிரயோகம், வெறுப்புப் பேச்சு, பாரபட்ச நடவடிக்கைகள், துன்புறுத்தல்கள், இலஞ்சம், ஊழல், சித்திரவதை அல்லது பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற நடத்தை, அவமானப்படுத்தல், தன்னிச்சையான தண்டனை முறை ஆகியவற்றை நீக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்தல்.


b) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் அதன் ஊழியர்களினதும் பல்லினக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம், மேற்குறிப்பிடப்பட்ட மற்றும் இதேபோன்ற விவகாரங்களினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.


c) நீதிமன்றங்களின் முறையான செயல்முறைக்கு உதவுவதற்காக நடைமுறையில் முடிந்தவரை பரவலாக்கப்பட்ட நிர்வாகத்துடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மேம்படுத்த வேண்டும்.


d) இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தேசத்தின் திறனை அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்வது அவசியமாகும்.


7. அரச சொத்துக்களின் முறைகேடான பயன்பாடு: 


a) கடந்த காலங்களில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் முறைகேடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் மீட்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குதல்.


b) அரச மற்றும் பொதுச் சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுமிடத்து, பொறுப்புக் கூற வேண்டியவர்களின் பதவியை அல்லது அந்தஸ்தை பொருட்படுத்தாது வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது.


8. வெளிநாட்டுத் தொடர்புகள், சுற்றுலா மற்றும் வர்த்தகம்


a) சுற்றுலா மற்றும் வர்த்தகம் பெயரைப் பயன்படுத்தி வெளிநாட்டு பிரஜைகள் நாட்டுக்குள் ஊடுருவதை அடையாளம் காண ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். இது, நாட்டின் தேசிய, சமூக பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இது தொடர்பில் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை முறையானதும் வெளிப்படையானதுமான விசாரணையின் மூலம் கண்டறிந்து, இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான முறைமை வகுக்கப்பட வேண்டும்.


b) அனைத்து இலங்கையர்களினும் பன்மைத்துவ கலாசாரங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து, உலகின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள ஆபத்தற்ற பங்காளிகளுடன் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை தொடங்க வேண்டும்.


c) அதேநேரத்தில், சீரான மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த எமது நாட்டின் வெளிநாட்டுத் தொடர்புகள், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகியவை ஊக்குவிக்கப்பட வேண்டும்.  


d) அனைத்து இலங்கையர்களினதும் பன்மைத்துவ கலாசாரங்களுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் மதிப்பளித்து, நாட்டின் பின்தங்கிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், வீதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட முறையான உட்கட்டமைப்பு வசதிகளின் நிர்மாணப் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.


e) தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இல்லாத வகையில்,  மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கின்ற வெளிநாட்டுச் செலாவணியின் திரவத்தன்மையினை முகாமை செய்யவும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் சரியான திட்டமும் கொள்கையும் உருவாக்கப்பட வேண்டும்.


f) மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக, பிராந்தியத்தில் போர் நிகழலாம் என்ற பீதி சுமார் 6,000 மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் சுமார் இரண்டு மில்லியன் இலங்கை பணியாளர்களின் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இதேபோன்றதொரு சூழ்நிலை கொவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்டது. இதன் போது, பெரும்பாலான தொழிலாளர்கள் தவிர்க்க முடியாமல் நாட்டிற்கு திரும்ப நேர்ந்தது, இந்நிலை அந்நிய செலாவணி இழப்புக்கு வழிவகுத்தது மட்டுமன்றி நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியதோடு, பொருளாதார நெருக்கடிக்கும் வழிகோலியது.அதனைத் தொடர்ந்து நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.


9. முறைப்பாடு செய்வதற்கும், பரிகாரம் கோருவதற்குமான உரிமை

முறைப்பாடு செய்வதற்கும் பரிகாரம் கோருவதற்குமான பொதுமக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும். 


a) முறைப்பாடுகளைக் கையாள்வதற்கும் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தெளிவான முறைமைகளை வகுப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை இந்தச் சட்டம், மேம்படுத்த வேண்டும். இந்தச் சட்டமானது, முறைப்பாடுகளைத் தீர்ப்பதற்கும்  பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு நீதி வழங்குவதற்கும் ஒரு தெளிவான கட்டமைப்பை வழங்குவதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டும்.


b) இந்தச் செயன்முறையை மிகவும் பயனுள்ளதாக்க, அரச துறையிலும் தனியார் துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கு ஒரு பிரத்தியேக அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். மேலும் முறைப்பாடுகளை வெளிப்படையாகப் பதிவுசெய்து, பயனுள்ள தீர்வுகளை உறுதிசெய்யும் ஒரு முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டும். 


10.மனித உரிமைகள் மற்றும் பாகுபாட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள்:


a) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) ஒழித்தல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தை பாரபட்சமின்றி செயல்படுத்துதல், ஒன்லைன் பாதுகாப்புச் சட்ட வரைபின் கீழ் முறைகேடுகள் நிகழ்வதை,  பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.


b) மனித உரிமை மீறல்களுக்கும் பாகுபாடுகளுக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.  


c) சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையை (ICCPR) பாரபட்சமின்றி முழுமையாக செயல்படுத்துவது அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு இன்றியமையாததாகும்.


d) மேலும், ஒன்லைன் பாதுகாப்புச் சட்டவரைவின் கீழ் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது, டிஜிட்டல் இடைவெளிகளில் துஷ்பிரயோகம் மற்றும் பழிவாங்கல் இடம்பெறுவதை தடுக்க அவசியமானதாகும்.


11. கொவிட்-19 மரணித்தவர்களின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்தமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நீதி வழங்குதல். இதற்காக நேர்மையான முறையில் உண்மையைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, குறித்த குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடும் நீதியும் வழங்கப்பட வேண்டும்.  


இதுபோன்ற பாரபட்சமான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.


12. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சுயாதீன ஆணைக்குழு:


அப்போதைய அரசாங்கங்களால் முன்னெடுகப்பட்ட விசாரணைகள் நீதியின் நலன்களுக்கு உதவாததால், அனைத்து இன-மத குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும். 


a)ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்கவும், வரவிருக்கும் தாக்குதல்கள் தொடர்ப்பில் விழிப்போடு இருக்கவும், பல நம்பகமான, நியாயமான, துல்லியமான தகவல்களை அரசு பெற்ற பிறகும், தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியவர்களை அடையாளம் காணவும், சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான ஒரு விசாரணையை மேற்கொள்வது அவசியமாகும்.

 

b)அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த பாதிக்கப்பட்ட, மனித உரிமைகள் மீறப்பட்ட அனைத்து நபர்களுக்கும், நீதியும் நியாயமான இழப்பீடு வழங்கும் அதிகாரங்களை குறித்த ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். 


c) குறித்த சில நபர்களை குறிவைத்து துன்புறுத்துவதற்கு ஈஸ்டர் தாக்குதல்கள் வழிவகுத்தனவா?, அல்லது ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான குற்றச் செயல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு நியமிக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டனவா? என்பது தொடர்பில் தீர்மானிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


d) தாக்குதல்களின் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தி அனைவருக்கும் நீதி வழங்க வேண்டும்.


e) குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களை  சட்ட ரீதியாக தண்டிக்க நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க வேண்டும். 


13. இனக்கலவரங்கள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு 


a) அளுத்கமை, திகனை,கிந்தோட்டை, அம்பாறை, மினுவாங்கொடை , குருநாகல் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கும் உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கும் ஒரு தனியான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தல்.


b) வடக்கு-கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கிளர்ச்சிகள் மற்றும் பிரிவினைவாதப் போர்களின் போது (1970 முதல்) கொல்லப்பட்டவர்கள், வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்தல்.


14. மத நிறுவனங்களின் நிர்வாகம்

 

மதம் அல்லது கலாசாரம் தொடர்பாக அரசாங்கத்தின் கீழ் வரும் விவகாரங்கள் அந்தந்த மதம் சார்ந்த சமூகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும். அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும். 


15. முஸ்லிம் தனியார் சட்டங்கள் 


a. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் (MMDA) மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் அல்லது வக்ஃ சட்டம் என்பன முஸ்லிம் சமுதாயத்தின் தேவைகளைக் கவனத்தில் எடுத்து பொருத்தமான முறையில் திருத்தப்பட்டு இஸ்லாமிய மூலாதாரங்களுக்கு இணங்க நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும்.


b. காதி நீதிபதிகள் மேலதிக நீதவான்களாகத் தரமுயர்த்தப்பட்டு நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் - இது பராமரிப்பு, ஆணைகள், ஜீவனாம்சம் போன்றவற்றை நடைமுறைப்படுத்தவும் தாமதங்களையும் ஊழல்களையும் இல்லாதொழிப்பதற்கும் உதவும்.


c. முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் போன்று வக்ஃப் சொத்துக்கள் விடயத்தில் காலவிதிப்புரிமை பிரயோகிக்கப்படக்கூடாது என்பதுடன் அது பின்னோக்கிய விளைவு கொண்டதாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


d. அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள மத மற்றும் கலாசார உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்கக்கூடிய வகையில் ஒரு குறிப்பான சட்டம் உருவாக்கப்பட வேண்டும். (உதாரணம்: ஆடை முறை மற்றும் தாடி வளர்ப்பது போன்றவை) (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16 (i) ஐப் பார்க்கவும்)


16. உட்கட்டமைப்பு அபிவிருத்தி:


a) இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக உள்ளூராட்சி வரவுசெலவுத்திட்டங்கள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிப்படுத்துதல். 


b) வீடுகளுக்கும் விவசாயப் பயன்பாட்டிற்கும்  சமமானதும் சீரானதுமான முறையில் நீர் விநியோகம் இடம்பெறும் என்பதற்கு உத்தரவாதமளித்தல். 


c) நாடு முழுவதும் ஒவ்வொரு நகரத்திலும் துப்புரவு மற்றும் வடிகால் அமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல். அனைத்துப் பிரதேசங்களுக்கும் கனரக நில நகர்த்தல் உபகரணங்களையும் விவசாய இயந்திரங்களையும் போதியளவில் வழங்குதல். 


d) இயந்திரங்கள், பட்டறைகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவற்றைக் கொண்ட கூட்டுறவு சங்கங்களை நிறுவி, விவசாய விளைபொருட்களை பெரிய அளவில் திரட்டி, உற்பத்தி செய்வதை ஊக்குவித்தல்.


17. அனைத்து சமூகங்களினதும் ஆரோக்கியம் மற்றும் நலன்கள்:


அனைத்துச் சமுதாயங்களினதும் சுகாதார உரிமைகளும் நலன்களும் பொருத்தமான பொறிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். 


சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, சமூக ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட தரமான சுகாதாரப் பாதுகாப்பிற்கான இலகுவான அணுகுமுறை இலங்கையில் கட்டாய சுகாதாரக் கொள்கையின் ஒரு பகுதியாக மாற வேண்டும். 


தேசிய சுகாதாரக் காப்புறுதித் திட்டம் முன்னுரிமப்படுத்தி செயல்படுத்தப்பட வேண்டும்.


18. யூனானி மருத்துவத்தின் தரத்தை மேம்படுத்துதல்


a. யூனானி மருத்துவ உத்தியோகத்தர்களின் நியமன செயன்முறையை மேம்படுத்துவதன் மூலமூம் யூனானித் துறையின் தரத்தை பல்கலைக்கழகப் பீடங்களின் மட்டத்திற்கு உயர்த்துவதன் மூலமும் யூனானி மருத்துவ முறையை மேம்படுத்துதல். ஆயுர்வேத மருத்துவக் குழு, கவுன்சில் மற்றும் சபைகளில் யூனானி பட்டதாரிகள் போதியளவில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதை உறுதி செய்தல்.


b. யூனானி மருத்துவ நிபுணர்கள் மற்றும் யூனானி மருத்துவமனைகள் கல்விப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஒவ்வொரு மருத்துவமனை வார்டிலும் குறைந்தது 20 படுக்கைகள் இருப்பதையும் உறுதி செய்தல்.


19. காணிப் பிரச்சினைகள்


a. வடக்கு கிழக்கிலும் மற்றும் நாட்டின் ஏனைய எல்லாப் பாகங்களிலுமுள்ள வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்ட அனைத்துக் காணிகளும் சொத்துக்களும் அவற்றின் சட்டரீியான உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். காணிப் பிரச்சினைகளை ஆராய்வதற்காக பிராந்திய அடிப்படையிலான ஆணைக்குழுக்கள் துரிதமாக நியமிக்கப்பட வேண்டும்.


b. கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளை, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவுக்கு மீளவழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்ற 2000 ஆம் ஆண்டின் பன்னம்பலான ஆணைக்குழுவின் பரிந்துரை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துதல். 


c. நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடுகளை, அத்திட்டம் தொடங்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் உடனடியாக ஒதுக்கீடு செய்தல்.


d. தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவில்  தற்போதுள்ள உப பிரதேச அலுவலகத்திற்குப் பதிலாக 1994 ஆம் ஆண்டு அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டவாறு தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவை நடைமுறைப்படுத்தி தோப்பூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கான தனியான உள்ளூராட்சி மன்றமொன்றை உருவாக்குவதற்கு உதவுதல்.


e. உத்தியோகபூர்வ பிரகடனமின்றி 1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கல்முனையில் உருவாக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத கல்முனை தமிழ் உப பிரதேச செயலாளர் பிரிவைக் கலைத்தல். இந்த உபபிரிவு தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் உருவாக்கப்பட்டதாகும். அதேவேளை இதனை ஒரு முழுமையான பிரதேச செயலாளர் பிரிவாகத் தரமுயர்த்துவதற்கு முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் கல்முனை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் காணிகளை அநியாயமான முறையில் பறிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


f. கல்முனை நகரத்தில் காணி உறுதிகளை உறுமய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.


20. சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகள்:


a. நாடு முழுவதும் நிகழும் கடல் அரிப்பு:

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகப் பகுதி, உனவட்டுனை, வாத்துவை, பொல்ஹேனை போன்ற பிரதேசங்களில் நிகழும் கடல் அரிப்பைத் தடுப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்துதல்.


b. மீள்காடாக்கம் மற்றும் தாவரங்களைப் பாதுகாத்தல்

வனப்பகுதியை மேம்படுத்த புதிய தாவரங்கள் மற்றும் பசுமைத் தாவரங்களை நடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து நேர்மறையான காபன் கிரெடிட்டை (ஒத்த காடாக்கம் மூலம்) பெறுவதற்கான நோக்கத்துடன் பூச்சிய காபன் உமிழ்வை உறுதி செய்தல். 


21. குறிப்பான சட்டங்கள் மற்றும் கலாசார உரிமைகள்:


மத மற்றும் கலாசார மரபுகளைப் உரியவர்கள் பின்பற்றுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், அவை நிறுவப்பட்ட சட்டங்களுக்கு இசைவானதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தெளிவான நியதிச் சட்ட ஏற்பாடுகளை உருவாக்குதல்.


சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்தச் சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் மீறும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான தண்டனைகளையும் தடைகளையும் விதித்தல். இந்த ஒழுங்குவிதியானது இது போன்ற விடயங்களை விளக்குகின்ற அரசியலமைப்பின் 16(1) ஆம் பிரிவுடன் ஒத்துப்போவதாக இருக்கும் வேண்டும்.


22. நிர்வாகப் பிரச்சினைகள்:


a. அரசாங்க அதிபர் நியமனங்கள்:


எந்தவொரு சமுதாயத்தினது நலன்களும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்து நீதியானதும் சமத்துவமானதுமான கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான மாவட்ட செயலாளர்களை/அரசாங்க அதிபர்களை நியமித்தல். இந்த நியமனங்கள் சிறுபான்மையினர் உட்பட பல்வேறுபட்ட சமுதாயங்களிலுள்ள தனிநபர்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான பிரதிநிதித்துவத்தை வழங்குவதாக அமைய வேண்டும். இந்த அணுகுமுறையானது சிங்கப்பூரின் சமத்துவ உரிமைகள் சட்டவரைவுகளைப் உள்ள கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.


b. விகிதாசார அடிப்படையிலான நியமனங்கள்:


சமத்துவம் மற்றும் சமூக நீதிக் கோட்பாட்டின் கீழ் நட்டு மக்களது பல்லினத் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதி பொலிஸ் மாஅதிபர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், தவிசாளர்கள் போன்ற முக்கிய பதவிகளுக்கான நியமனங்களில் இன விகிதாசாரங்கள் பேணப்படுவதை உறுதி செய்தல்.


c. பாகுபாடான நியமனங்களை அகற்றுதல்:


இலங்கையில் சிரேஷ்ட நிர்வாகப் பதவிகள் பாகுபாடான முறையில் மறுக்கப்படுவது சமத்துவ அடிப்படையிலும் முற்றிலும் திறமையின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும். 


d. பணியிடங்களில் மத சடங்குகளைக் கடைபிடித்தல்: 


பொலிஸ், இராணுவம், கடற்படை போன்றவற்றிலுள்ள முஸ்லிம்களுக்கு தமது மதக் கடமைகளைப் செய்வவதற்கான உரிமை இருப்பதையும் அதற்குத் தேவையான பொருத்தமான வசதிகள் வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்துதல்.


23. சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான பொறிமுறை:


a. சமூகப் பொலிஸ் அமைப்பு:


ஒவ்வொரு பொலிஸ் பிரிவுடன் தொடர்புடையதாக இன விகிதாரசத்தைப் பிரதிபலிக்கக்கூடிய,  சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யக்கூடிய சமூகப் பொலிஸ் முறையொன்றை உருவாக்குதல். அனைத்து மாவட்டங்களுக்கும் இன விகிதாசார அடிப்படையிலான நியமனங்களைக் கொண்ட ஒரு தனியான  சமூகப் பொலிஸ் முறைமை உருவாக்கப்பட வேண்டும். 


b. பிராந்திய பொலிஸ் அமைப்பு:

இனரீதியான பிரதிநிதித்துவத்தைச் சமநிலைப்படுத்தி சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் பிராந்திய பொலிஸ் அமைப்பு ஒன்றை உருவாக்குதல்.


c. தேவையான சட்டங்களை இயற்றுதல்

அனைத்துச் சமுதாயங்களினதும் விடயங்களிலும் பிரச்சினைகளை சிறப்பான முறையில் தீர்க்கக்கூடியதாக சட்டத்தில் எந்தவொரு இடைவெளியும் இல்லாத விதத்தில் நியதிச் சட்ட இடவெளியை நிரப்புவதற்குத் தேவையான ஒரு முறையான சட்டமுறையை உருவாக்குதல். 


24. தேர்தல் அளவுகோல்கள்:


வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக பாராளுமன்ற, மாகாண மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவான, நீதியான மற்றும் சமத்துவமான அளவுகோள்களை உருவாக்குதல். உதாரணமாக அபிவிருத்தியடைந்த நாடுகளிலுள்ளது போன்று, குறைந்த பட்ச கல்வித் தகைமை, சிறந்த நடத்தை, செயலாற்றுகைச் சான்றிதழ்.


25. நியாயமான பிரதிநிதித்துவம்


a) சமுதாய நலன்களையும் இனங்களது இயல்புகளையும் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள், பாராளுமன்ற என்பவற்றில் போதுமான அளவு விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்.


b) எல்லை நிர்ணயம், எல்லை குறித்தல் மற்றும் பக்கச்சார்பான தொகுதி பிரிப்பு தொடர்பான சிக்கல்களைத் தீர்த்து, பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 5% பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல். இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கும்,பாலினப் பிரதிநிதித்துவத்தைக் கருத்தில் கொண்டு, நியாயமான எண்ணிக்கையிலான கிராம அலுவலர் (GN) பிரிவுகளை உறுதிப்படுத்த உள்ளூராட்சி மன்ற முறைகளில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். 


26. ஊடகப் பாகுபாடு மற்றும் வகுப்புவாதம்:


ஊடகப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும், சமநிலையான ஊடக தர்மத்திற்குமாக அமைப்புகளை உருவாக்குதல்.


27. ஆராய்ச்சி அடிப்படையிலான தீர்வுகள் 


ஒரு விவகாரம் தொடர்பான சர்ச்சை எழும் பட்சத்தில் அந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட  அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுசேர்த்து அறிவியில் முறைப்படி ஆராய்ச்சியின் அடிப்படையிலான பொறிமுறைகளின் ஊடாக  அவை அணுகப்பட்டு அனைத்து சிக்கல்களும் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். 

No comments

Powered by Blogger.