Header Ads



லெபனான் நிலவரம் - ஜம்இய்யத்துல் உலமாவின் அறிக்கை


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


கடந்த சில நாட்களாக இஸ்ரேல் லெபனானின் சில பகுதிகளில் பயங்கரமான தாக்குதல் நடாத்தி வருவதை நாம் அறிவோம். இத்தாக்குதலில் இதுவரைக்கும் சுமார் 50 குழந்தைகள், 95 பெண்கள் உட்பட 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,835க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்தத் தாக்குதல் உடன் நிறுத்தப்பட்டு, அமைதியான சூழல் உருவாக வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு அவசரமாக சுகத்தையும் கொடுத்தருள்வானாக!


இவ்வாறான நெருக்கடியான நிலைகள் ஏற்படும் பொழுது, அவை நீங்குவதற்கு அல்லாஹ்வின் அடியார்களாகிய நாம் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா, இஸ்திஃபார் மற்றும் துஆ போன்ற நல்லமல்கள் மூலம் அவன் பக்கம் நெருங்குவதே ஸுன்னத்தான முறையாகும்.


ஆகவே, லெபனான், பலஸ்தீன் பகுதிகளில் இடம்பெற்றுவரும் இம்மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலைநாட்டப்படுவதற்கும் ஃபஜ்ருடைய தொழுகையில் ஓதப்படும் குனூத்திலும் ஐவேளைத் தொழுகைகளுக்குப் பின்னரும் தஹஜ்ஜுத், வித்ர் போன்ற நபிலான தொழுகைகளுக்குப் பின்னரும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்கின்றது.


பிரார்த்தனை செய்யும் பொழுது ஓர் அடியான், தான் அல்லாஹ்வின் அடியான் என்பதையும், தன் தேவைகளை நிறைவேற்றும் சக்தி அவனுக்கு மாத்திரமே உள்ளது என்றும் உறுதியோடு பிரார்த்தனை செய்ய வேண்டும். தனது துஆவுக்கு விடையளிப்பவன் அல்லாஹ்தான் என்ற நம்பிக்கையோடு கையேந்துபவரின் துஆக்கள் திட்டவட்டமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறு ஓர் அடியான் கேட்கும் துஆவுக்கு அல்லாஹு தஆலா விடையளிப்பதாகவும் வாக்களித்திருக்கிறான்.


ஓர் அடியான் அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது 'எனது பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்' என்ற நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அவ்வாறு பிரார்த்தனை செய்யும் பொழுது அதற்கான பதிலை சிலவேளை அல்லாஹு தஆலா உடனடியாக அல்லது தாமதித்துக் கொடுக்கின்றான். அல்லது அது போன்ற ஒரு கெடுதியை அந்த அடியானை விட்டும் அகற்றிவிடுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


இவ்வாறான நெருக்கடியான சூழ்நிலைகள் நீங்க மேற்சொல்லப்பட்ட நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.


முஃப்தி எம்.ஐ.எம் ரிழ்வி

தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

பதில் பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.