யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான விடியல், எப்போது நிகழும்..?
அநீதியையும் ஊழலையும் திருட்டையும் ஒழிக்க தூய ஆட்சி ஒன்றை வேண்டி நின்ற இலங்கை மக்களுக்கு ஒரு புதிய ஆட்சி மலர்ந்து இருக்கிறது. புதியதோர் தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவில் திளைத்திருந்த இளைய தலைமுறை இப்போது உருவாக்கப்பட்ட அரசியல் பாதையில் காலடி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை இத்தேர்தல் கட்டியம் கூறிச் சென்றுள்ளது.
ஜனநாயகத்தை பேணுவதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் சமூகத்தின் விடிவுக்காகவும் அரசியல் செய்ய வந்த தலைவர்கள் சுயநலத்துக்காகவும் கோடிகளுக்காகவும் விலைபோன துரோகத்தை அடையாளம் கண்டு கொண்டு பொது மக்களின் எழுச்சியும் விழிப்புணர்ச்சியும் அனுரகுமார திசாநாயக் அவர்களை ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைத்துள்ளது.
அரசியலை சேவையாகக் கொண்டு நிலை மாறி அரசியலை தொழிலாகக் கொண்ட பல அரசியல்வாதிகளின் சுய ரூபங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்ட போது உயரிய கொள்கைகளுடனும் வேகமான செயற்பாட்டுடனும் புயல் என புறப்பட்டு வந்த அனுரவின் பின் மக்கள் அணி திரண்டனர். தேச குழந்தையை பாதுகாப்பதற்காக இந்நாட்டை பொறுப்பெடுப்பதாகக் கூறிக்கொண்டு தேசத்தின் சொத்துக்களை சூறையாடியவர்களையும் மக்களால் விரட்டப்பட்டவர்களையும் பாதுகாத்தவர்களும் மக்களால் புறக்கணிக்கப்பட்டனர். தேசம் அடைந்த பின்னடைவுகளாலும் சமூகத்துக்கு ஏற்பட்ட நஷ்டங்களாலும் ஏற்பட்ட வலி புதிய மாற்றத்தை கொண்டு வந்தது.
காலம் ஒரு மிகச் சிறந்த ஆசிரியர். வரலாற்றின் ஊடாக எமது எதிர்காலத்தை நிர்ணயிக்கவும் நிகழ்காலத்தை அமைக்கவும் கற்றுத் தருகிறது. அனுபவங்களாலும் தவறுகளாலும் எம்மை கூர்மையாக்குகிறது. அல்லாமா இக்பாலின் வரலாறு பற்றிய பின்வரும் கவி வரிகள் வரலாற்றின் மகிமையை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.
"வரலாறு - உனது
வாழ்வின் நோக்கத்தை தெளிவு படுத்துகிறது.
உன் சாதனைக்கான பாதையை அமைத்துத் தருகிறது.
அது வாளைப் போன்றது.
உன்னை கூர்மையாக்குகிறது.
பின்னர் அது உன்னை உலகத்துடன் போராட வைக்கிறது.
இறந்த காலத்தை வாசித்து உனக்கு முன்னால் சமர்ப்பிக்கிறது.
உன் கடந்த காலம் உன் நிகழ்காலமாய் வெடித்து அதில் இருந்து உன் எதிர்காலம் உருவாகிறது.
நித்திய வாழ்க்கை நீ வாழ விரும்பினால் உன் இறந்த காலத்தை நிகழ்காலத்தில் இருந்தும் எதிர்காலத்தில் இருந்தும் துண்டித்து விடாதே!
இராணுவத்தால் தேடித்தேடி அளிக்கப்பட்ட ஜேவிபி இயக்கத்தின் ஒரு போராளி அனுர இன்று தேசத்தின் மிக உயர்ந்த கௌரவ ஜனாதிபதியாக உயர்ந்திருக்கிறார். அவரது கட்டளையை நிறைவேற்ற இராணுவம் காத்திருக்கிறது. காலம் எவ்வளவு வலிமையானது. இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியது போல விழித்துக் கொண்டே காணும் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் மேலும் அதை நிறைவேற்றும் காலம் எப்போதும் வரலாம். கனவுகள் எப்போதும் நனவாகலாம் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்...
மக்கள் விரும்பிய மாற்றம் இப்போது நிறைவேறி இருக்கிறது. காலம் நேர்மையான தூய சிந்தனை உடன் நல்லது செய்ய புறப்பட்ட ஒரு போராளியை ஜனாதிபதியாக மாற்றி இருக்கிறது.
இவற்றை எடுத்துரைப்பதன் நோக்கம் யாதெனில் ஏற்பட்டுள்ள இந்த புதிய புரட்சிகரமான மாற்றத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த போகிறோம்? என்பது பற்றிய ஆழமான அர்த்தபுஷ்டியான கலந்துரையாடல்கள் ஆக்கபூர்வமான சிந்தனையாக செயற்றிட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் எமது சுபிட்சமான வாழ்க்கைக்கும் எமக்குள்ள பிரச்சினைகளை அடையாளப்படுத்தி அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராயப்படுவதும் திட்டமிடுவதுமாகும்.
யாழ் முஸ்லிம்கள் ஆகிய நாம் எமது தாயக மண்ணிலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 34 வது வருடத்தை அடைந்துள்ளோம்.யாழ் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட கொடுமையை சர்வதேசமும் அறிந்திருந்தும் அரசசார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமை நிறுவனங்களும் UNHCR போன்ற ஐ.நா அகதிகள் அமைப்பும் கூட எமது விடயத்தில் ஒரு தலைப்பட்சமாகவே நடந்து கொள்கின்றமை சில அரசியல்வாதிகளும் இனவாத சிந்தனை மிக்க அதிகாரிகளும் கூட எமது மீள்குடியேற்ற விடயத்தில் இறுக்கமான நிபந்தனைகளை விதித்து தடை ஏற்படுத்தி வருகின்றனர்.
வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்ட போதும் அவை இன்றுவரை நிராகரிக்கப்பட்டு வருகின்றனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் "2005 ஆம் ஆண்டில் ஆணைக் குழு அமைக்கப்படும்" என வாக்குறுதி அளித்த போதும் அது நிறைவேற்றப்படவில்லை.
எனவே தற்போது உண்மை, நேர்மை, நீதி, கண்ணியம் மற்றும் தலைமைத்துவ பண்புகள் கொண்ட இனவாத சிந்தனை அற்ற தூய அரசியல் கொள்கையுடன் பதவியேற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்கள் சமூகத்துக்கு யாழ் முஸ்லிம்களாகிய எமக்கு இனச் சுத்திகரிப்பால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் மீள் குடியேற்ற விடயத்தில் புறக்கணிக்கப்படுவதையும் தெரிவித்து ஜனாதிபதி ஆணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள்விடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.
மேலும் இனச் சுத்திகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள எமது கல்வி, வியாபாரம், வேலைவாய்ப்பு, மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை, வீடமைப்பு திட்டம், சுகாதாரம், நஷ்ட ஈடு போன்ற விவரங்கள் யாவும் புள்ளி விவரங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டு கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி அவர்களின் பதவியேற்பு வைபவத்தின் போது ஆற்றிய அவரது இனவாதம் அற்ற நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்ட உரையும் மாற்றத்திற்கான அவரது முன்னெடுப்புக்களும் அவர் எமது வேண்டுகோளை நிறைவேற்றுவார் என்ற பூரண நம்பிக்கையைத் தருகிறது.
அத்துடன் எமக்குள் ஏற்பட வேண்டிய மாற்றத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் போது ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்தவர்களும் தமக்குள்ளே பல முரண்பாடுகளைக் கொண்டிருந்தனர். வேண்டாத விவாதங்கள், வசை பாடுதல், மோசமான வார்த்தை பிரயோகம், பிறர் குறை தேடுதல், புறம் பேசுதல் போன்ற தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தோம். தற்போது ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னும் தவறான செயற்பாடுகளை தொடர வேண்டிய அவசியமில்லை. சமூக நலனில் அக்கறை கொண்ட எவரும் இதனை விரும்ப மாட்டார்கள்.
எனவே ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கும் விடயத்தில் எம்மிடையே உள்ள முரண்பாடுகளை தவிர்த்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டியது யாழ் மண்ணில் பிறந்த நலன் விரும்பிகள் ஒவ்வொருவரதும் கட்டாயக் கடமையாகும். கட்சி அரசியலுக்கு அப்பால் சமூக நலனுக்காக எம் கரங்களையும் பிணைத்து ஒற்றுமைப்பட வேண்டியது எம்மிடையே ஏற்பட வேண்டிய மாற்றமாகும்.
நாம் ஒன்றுபட வேண்டிய மாற்றம் நிகழவில்லையெனில் எமக்கான விடியல் எவ்வாறு நிகழும்? எப்போது நிகழும்?
✍️ யாழ் அஸீம்
இவ்வளவு காலமும் இல்லாத முஸ்லிம் விடிவு புதிய அரசாங்கம் வந்த சில மணி நேரங்களில் எங்கிருந்து வந்தது. புதிய அரசாங்கம் நிலைபெற்று சற்று அதன் அடிப்படை பணிகள் நிறைவேறும் வரை சற்று பொறுத்திரு அப்பா.
ReplyDelete