Header Ads



சவூதியின் 94 வது தேசிய தினம் - தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியின் செய்தி


சவூதி அரேபியாவின் 94வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அவர்களின் செய்தி.

சவூதி அரேபியாவின் 94வது தேசிய தினத்தை நாம் கொண்டாடும் இவ்வேளையில், எமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், ஒளிமயமான எதிர்காலத்தையும், அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமைமிகு மற்றும் வளமான எதிர்காலத்தை சவூதி அரேபிய இராச்சியத்தின் தீர்க்கதரிசனம்மிக்க தலைமைத்துவத்தின் கீழ் கற்பனை செய்கிறோம்.


இன்று, சவூதி அரேபியா அதன் 94 ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்கள்  தொண்ணூற்று நான்குஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற ஒருநாளில்தான் சவூதி அரேபியாவை நிறுவினார். இந்நாளில் ஒவ்வொரு ஆண்டும், நிறுவனர் எடுத்த வீர நிலைப்பாடுகளை நாம் நினைவு கூறுகிறோம். அவர் இராச்சியத்தை ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து, அதனைக் கட்டியெழுப்பினார். பின்னர் அவர் ஆரம்பித்து வைத்த பயணத்தை, தொடர்ந்து  வந்த அனைத்து மன்னர்களும் தொடர்ந்தது மட்டுமல்லாது சவூதி அரேபிய இராச்சியத்தை, பிராந்திய மற்றும் உலக அளவில் உயர் பொருளாதார மற்றும்  வளர்ச்சி அடைந்த ஒரு நாடக மாற்றுவதில் பெரும் பங்களிப்புச் செய்தனர்.


இச்சந்தர்ப்பத்தில், இரண்டு புனிதத்தலங்களின்  பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அவர்களுக்கும், பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகம்மது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ்  அவர்களுக்கும், சவூதி அரேபிய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதய உயர் தலைமைகளின் கீழ் இராச்சியம் மேலும் முன்னேற்றமும்  மற்றும் அபிவிருத்தியும் அடைய வாழ்த்துகின்றேன்.


சவூதி அரேபிய இராச்சியம், இரண்டு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரி ஆகியோரின் வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டங்களின் கீழ், சவூதி அரேபிய இராச்சியத்தின் மூலோபாயத் திட்டமான "விஷன் 2030" ஊடாக பல்வேறு துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும், பாரிய வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. சவூதி அரேபிய இராச்சியத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நம்பிக்கையளிக்கும் எதிர்கால திட்டங்கள் மற்றும்  அதன் குடிமக்களை கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம், பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுவூட்டல் ஊடக முதலில் மனிதவள  அபிவிருத்தியில் முதலீடு செய்வது என அனைத்து மட்டங்களிலும் மேம்படுத்துதல் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்கள் என மிக முக்கிய திட்டங்களை  இம்மூலோபாயத் திட்டம் உள்ளடக்கியுள்ளது, 


உதாரணமாக: மன்னர் சல்மான் பூங்கா, நியோம், தி லைன், தி நியூ ஸ்கொயர் திட்டம், சவூதி அரேபிய பசுமை முன்னெடுப்பு , மத்திய கிழக்குபசுமை  முன்னெடுப்பு, திரியா கேட் திட்டம், கிடியா திட்டம், அல்-உலா மேம்பாட்டு திட்டம், ராஃபிக் உவர் நீர் சுத்திகரிப்புத்திட்டம், அமலா திட்டம், சகாகா சூரிய சக்தி மின் உற்பத்தித்திட்டம், செங்கடல் திட்டம் மற்றும் மன்னர் சல்மான் சக்திவள நகரத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும்.


சவூதி அரேபிய இராச்சியமானது உலக பாதுகாப்பையும் அமைதியையும் பேணுவதில் ஒரு இன்றியமையாத பங்காளியாக விளங்குகின்றது. சமீப காலங்களில், உலகளாவிய பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநிறுத்துவதற்காக பல உச்சிமாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் சந்திப்புக்களை சவூதி அரேபியா நடத்தி வந்துள்ளது. அத்துடன், காசா தொடர்பான கலந்துரையாடல்கள், உலக பொருளாதார மாநாடு, உலக செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு (Global AI Summit) மற்றும் இ-ஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை" போன்ற பொருளாதார, தொழில்நுட்ப, விளையாட்டு, மருத்துவ உச்சிமாநாடுகளை நடத்தி வந்துள்ளது. மேலும், பல்வேறு சர்வதேச துறைகளில், குறிப்பாக 2030 இல் தலைநகர் ரியாதில் எக்ஸ்போ 2030  என்ற நிகழ்வை நடத்துவதற்கான சந்தற்பத்தைப் பெற்றிருப்பதானது, சவூதி அரேபியா சர்வதேச அரங்கில் பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை அனைத்து நிலைகளிலும் உறுதிப்படுத்துகின்றது.


அவ்வாறே சவூதி அரேபியா இராச்சியமானது, உலகெங்கிலும் வாழும் மக்களின் துயரங்களை நீக்கும் பணியின்  முக்கியத்துவத்தை உணர்ந்து,  171க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 131 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பில் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. அந்தவகையில், 7,090க்கும் அதிகமான மனிதாபிமான, நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. உலகளவில் மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகவும் சவூதி அரேபியா இருந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 18 திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. 


மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பூமியைப் பாதுகாப்பதற்கும், காலநிலை அபாயங்களைக் குறைப்பதற்கும் சவூதி அரேபிய இராச்சியம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. சவூதி அரேபிய பசுமை முன்னெடுப்பு , மத்திய கிழக்குபசுமை  முன்னெடுப்பு,  ரியாத்தை தளமாகக் கொண்ட உலகளாவிய நீர் அமைப்பை நிறுவுவதற்கான பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி அவர்களின் அறிவிப்பு மற்றும் சுத்தமான சக்தி வளத்தில் தங்கியிருத்தல்  உட்பட பல முன்னெடுப்புகள் மூலம் இம்முயற்சியானது மேலும் மெருகூட்டப்பட்டது.


சவூதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசானது நீண்ட காலமாக மிக உன்னதமான இருதரப்பு உறவுகளை பேணி வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான இவ்வுறவுகள் பரஸ்பர  ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு நாடுகளுக்கிடையில் பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. 


சமீபத்தில், நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே, இரு நாடுகளின் உயர் அதிகாரிகளின் இரு நாடுகளுக்குமான பரஸ்பர விஜயங்கள் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வளர்ப்பதில் மேலும் பங்களிப்புச் செய்துள்ளன.


பொருளாதார ரீதியாக, சவூதி அரேபிய இராச்சியம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு இடையிலான வர்த்தக பரிமாற்றம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையிலான வதகப்பரிமாற்றமானது 400 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட அதிகரித்துள்ளது. 


சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் உலோகம், பிளாஸ்டிக், தோல் பதனிடும் பொருட்கள், நிறப்பூச்சுகள், காகிதம் மற்றும் அலுமினியம் ஆகியவை உள்ளடங்கும். அதேவேளை, இலங்கை சவூதி அரேபியாவுக்கு கோபி, தேயிலை, வாசனைத்திரவியங்கள், ஆடைகள், பழங்கள் மற்றும் மீன் போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. 2023 ஆம் ஆண்டு மே மாதம் சவூதி அரேபியாவின் ரியாதில் நடைபெற்ற சவூதி-இலங்கை கூட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம், சமூக மற்றும் சுற்றுலா துறைகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன் பயனாக, இலங்கை வர்த்தகர்கள் மற்றும் ரியாத் சவூதி அரேபிய வர்த்தக சம்மேளனத்தின்  அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்புகள் நடைபெற்றுள்ளன, மேலும் பிற சந்திப்புக்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


சவூதி அரேபிய இராச்சியமானது, இலங்கை குடியரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு முக்கிய பங்காளியாகக் கருதப்படுகிறது. இந்த வகையில் இத்திட்டங்களை முன்னெடுக்க சவூதி அரேபியா வழங்கிய மொத்த நிதியுதவி 455 மில்லியன் அமெரிக்க டொலர்களைவிட அதிகமாகும். இந்த நிதியானது, சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம், சாலை வலையமைப்பு ஆகிய அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள், தற்போது செயல்படுத்தப்படுகின்ற சபரகமுவா பல்கலைக்கழக மருத்துவ பீடம் அமைக்கும் திட்டம், வயம்ப பல்கலைக்கழகப் பகுதி மேம்பாட்டுத்திட்டம் மற்றும் "குறிஞ்சாகேர்னி" பாலம் அமைக்கும் திட்டம் ஆகியவையும் உள்ளடங்கும்.  மேலும், சவூதி அரேபியாவில் சுமார் இரண்டுலட்சம் இலங்கைப் பிரஜைகள் வேலை செய்து வருகின்றனர். 


இத்துடன், ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் உம்ரா, ஹஜ் மற்றும் சுற்றுலாவிற்காக சவூதிக்கு விஜயம் செய்கின்றனர் . இலங்கை மாணவர்கள் சவூதி பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் சவூதி அரசனால் வழங்கப்படுகிறது. இதுவரை 500 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் சவூதிப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியாகியுள்ளனர் . இதேவேளை, இலங்கை பல சவூதி பிரஜைகளுக்கு முக்கிய சுற்றுலா மற்றும் முதலீட்டு தலமாகவும் கருதப்படுகிறது. 


இறுதியாக,  எமது இரு நட்பு நாடுகளுக்கும் மற்றும் அதன் மக்களுக்கும் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தியை நல்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

No comments

Powered by Blogger.