Header Ads



நான் சாகும் வரை ஜே.வி.பி. தான் - 29 ஆண்டுகளுக்கு பின் புதியவரிடம் பதவி


நான் சாகும் வரை ஜே.வி.பி. காரன்தான். இதில் மாற்றம் எதுவும் வராது. ஆனால் மரணிக்கும்வரை பதவியில் நீடிக்க வேண்டும் என்றில்லை. பொதுச் செயலாளர் பதவியை புதியவரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளேன்.” இவ்வாறு ஜே.வி.பி கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


பொதுத்தேர்தல் முடிந்ததும், அடுத்த வருடம் கட்சி மாநாட்டை நடத்தி இதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார்.


1978 ஆம் ஆண்டு ஜே.வி.பியில் இணைந்த ரில்வின் சில்வா, 1995 ஆம் ஆண்டு ஜே.வி.பியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.


அன்று முதல் இன்றுவரை 29 வருடங்களாக அப்பதவியில் அவர் நீடிக்கின்றார். கட்சி செயற்பாடுகள் காரணமாக சிறைவாசமும் அனுபவித்துள்ளார்.


ஜே.வி.பிக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, அக்கட்சியினர் ஜனநாயக வழிக்கு திரும்பிய பின்னர், கட்சியை மீளக் கட்டியெழுப்புவதில் ரில்வின் சில்வாவின் பங்களிப்பு அளப்பரியது.


ஜே.வி.பி. அரசியல் ரீதியாக பின்னடைவுகளை சந்தித்த வேளைகளில் எல்லாம் கட்சி தோழர்களை உற்சாகப்படுத்தி கட்சியை ஒரு கட்டுப்கோப்பாக வழிநடத்தியவர்களில் ரில்வின் சில்வா பிரதானமானவர்.


ஜே.வி.பிக்குள் உள்ளக மோதல்கள் வெடித்த சந்தர்ப்பங்களில் கட்சி கட்டமைப்பு சிதைவடையக் கூடாது என்பதற்காக பல தியாகங்களை செய்தவர்.


ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது . ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைவராகியுள்ளார்.


இந்நிலையில் அநுரவைபோலவே பலரும் ரில்வின் சில்வாவை பற்றியும் தேட ஆரம்பித்துள்ளனர். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் அவர் தனது கடந்த காலம் பற்றியும் விபரித்துள்ளார்.


இதன்போது இன்னும் எத்தனை வருடங்கள் ஜே.வி.பியின் பிரதான செயலாளராக இருக்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பட்டது,


இதற்கு பதிலளித்த அவர்,


“நான் சாகும்வரை ஜே.வி.பிகாரன்தான். உடலில் உயிர் இருக்கும்வரை அரசியலிலும் ஈடுபடுவேன். ஆனால் மரணிக்கும்வரை பதவி வகிக்க வேண்டும் என்றில்லை.


நீண்டகாலம் செயலாளர் பதவியில் இருந்துவிட்டேன், புதியவர் வரவேண்டும் எனக் கருதுகின்றேன். உடனடி மாற்றத்தை கட்சி தோழர்கள் விரும்பவில்லை.


பொதுத்தேர்தல் முடிந்த பிறகு, மாநாட்டை நடத்தி இதனை செய்யலாம். சிறப்பாக செயற்படக்கூடிய தோழர்கள் உள்ளனர் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.


மேலும், அரசாங்கத்தில் எவ்வித பதவியையும் தான் ஏற்கமாட்டார் எனவும் அவர் கூறியுள்ளதாக குறித்த தகவலை முகநூலில் ராமசந்திரன் சனத் என்பவர் பதிவிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.