ஜனாதிபதி தேர்தல் 2024: ஓர் இலங்கை முஸ்லிமாக சிந்தித்தல்
அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)
நாட்டின் தேசிய அரசியல் தலைமையை இலங்கை பிரஜைகளாகிய நாம் தெரிவு செய்யப் போகிறோம். எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை விட்டுச் செல்வதற்காக இலங்கை சோஷலிச குடியரசை வழிநடத்தும் நிர்வகிக்கும் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம். 1990கள் தொடக்கம் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது சிங்கள சமூகத்தின் கொடிய எதிரிகளாக கட்டமைக்கப்பட்டு வந்த தமிழ் பிரிவினைவாதம் மற்றும் 2019 இல் முன்வைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதம் போன்ற கோஷங்கள் பிரசார மேடைகளிலிருந்து தலைமறைவாகியிருக்கிறது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் முதலாவது தேர்தலாக இது மாறியிருக்கிறது.
இம்முறை ஜனாதிபதி தேர்தல் இலங்கை மக்களுக்கு பல காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. அவை
1. நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள்: இலங்கை 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது, பொதுமக்கள் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இந்த தேர்தல் பொருளாதார மறு சீரமைப்பு மற்றும் பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2. அரசியல் ஸ்தீரத்தன்மை: அரசியல் அமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். புதிய ஜனாதிபதி, நாட்டின் அரசியல் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதில் முக்கியமான பாத்திரமாக இருக்க முடியும்.
3. சர்வதேச உறவுகள்: இலங்கையின் சர்வதேச உறவுகள், குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் தொடர்புகள் மிக முக்கியமான நிலையில் உள்ளன. புதிய ஜனாதிபதி, சர்வதேச ரீதியில் தந்திரோபாய சூழல்களில் இலங்கை எவ்வாறு முன்னேறுகிறது என்பதிலும் தாக்கம் செலுத்தலாம்.
4. எதிர்காலத் திட்டங்கள்: நாட்டின் எதிர்கால வளர்ச்சி, விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில்நுட்ப மேம்பாடு போன்ற முக்கியமான துறைகளில் புதிய திட்டங்கள், நாட்டின் மீட்சிக்கு வழிவகுக்கும்.
ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை ரணில், சஜித், அநுர எனும் முத்தரப்பு போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ஷ களமிறங்கியதுடன் தேர்தல் களத்தில் நான்கு முனைப் போட்டியை தோற்றுவித்த நிலையில் சிங்கள மக்களின் வாக்குகள் மேற்படி நான்கு பிரதான வேட்பாளர்களுக்கும் பிரிந்து செல்லும் நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தும் என்பதை மறுதலிக்கமுடியாது. இந்நிலையில்தான், இலங்கை முஸ்லிம்கள் காலங்காலமாக மேற்கொண்டுவரும் சந்தர்ப்பவாத அரசியலையே தொடர்ந்து மேற்கொள்வதா இல்லை ஜனநாயக உரிமைகளுடனும், சமத்துவத்துடனும், கெளரவத்துடனும் வாழ்வதா என்பதை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாக இது மாறியுள்ளது.
ஒரு தேர்தல் என்று வருகின்ற போது அதுவும் எம்மைப்போன்ற அரசியல் அறிவு குறைந்த, ஜனநாயகம் வளர்ச்சியடையாத நாடொன்றில் அரசியல் தலைமைகளை தெரிவு செய்வதில் பங்களிப்பு செய்யும் காரணிகளை பின்வருமாறு நோக்கலாம்.
வாக்களிக்கும் போது மக்கள் பெரும்பாலும் நேர்மையானவரோ இல்லையோ, தகுதியானவரோ, தகுதியற்றவரோ தம் இன மக்களையே தெரிவு செய்கிறார்கள்.
நாட்டின் பொது நன்மைக்காக உழைப்பது பின் தள்ளப்பட்டு ஒவ்வொரு சமூகமும் தங்கள் அரசியல் தலைமைகள், கட்சிகள் ஊடாக தமது இன நலனை மையப்படுத்தியே செயற்படுகிறார்கள்.
நாட்டில் காணப்படும் பொதுத் தீமைகளுக்கெதிராகப் போராட அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்தல் சாத்தியமற்றதாகவே உள்ளது.
இந்நிலையில்தான், முஸ்லிம் தரப்பு இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கிறது. அதே நேரம் SLMC, ACMC ஆகிய முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கைகோர்த்து செயற்படுகின்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி பல்வேறு விசேட சலுகைகளை வழங்கி வருகிறார். தத்தமது பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கென பல மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வழக்கம் போல முஸ்லிம் எம்பிக்கள் சலுகைகளுக்கும், சுய நலன்களுக்கும் அடிபணிய ஆரம்பித்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது.
SLMC, ACMC கட்சியினர் தாம் எதிர்க்கட்சி தலைவர் சஜித்தை நிபந்தனைகளுடனே ஆதரிப்பதாக கூறிய போதும் அந்த நிபந்தனைகள் என்ன என்பது பற்றி இதுவரை மக்களுக்கு பகிரங்கப்படுத்தவில்லை. வழக்கம் போல இம்முறையும் இந்த நிபந்தனை பூச்சாண்டி வெறும் கண் துடைப்பாகவே அமையப்போகிறதா அல்லது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கை முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் கிடப்பில் உண்டு. முஸ்லிம் சமூகத்துக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டிய பல்வேறு விடயங்கள் நம்முன் உண்டு. ஆனால் இத்தகைய பிரச்சினைகளை வேட்பாளர்களிடம் முன்வைத்து அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து அவர்களை ஆதரிக்கும் போக்குகளை காணவில்லை. முஸ்லிம் கட்சி தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் தமது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் மற்றும் கட்சியின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுத்து செயற்படுகிறார்கள் என்பது இப்போது வெளிப்படையாக தெரிகிறது.
இம்முறை தேர்தல் பிரசாரங்களில் இனவாத கருத்துகள் ஓரளவு தணிந்திருப்பதாக கூறப்பட்டாலும் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த கலாசாரத்தை இம்முறை தமது கைகளில் குத்தகைக்கு எடுத்து இருக்கிறார்கள் என்பது போல அவர்களது தேர்தல் பிரசார மேடைகளில் ஆற்றப்படும் உரைகள் அமைந்திருப்பதை காண முடிகிறது. இது அவர்களின் அரசியல் எதிர்காலம் ஜீவமரணப் போராட்டத்திற்கான களமாக மாறியுள்ளது என்பதை அனுமானிக்க முடிகிறது.
இந்த தேர்தல் பிரசாரங்களின் போக்குகளை உன்னிப்பாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக பிரசாரங்களில் வேட்பாளரின் கருத்துகள் வாக்குறுதிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பன முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. ஒரு வேட்பாளர் தனது கொள்கை நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் குறித்து பேச வேண்டும். அதன் பிரதான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரைகள் பெரும்பாலும் அவருடைய கடந்த இரண்டு வருட கால சேவை மற்றும் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்த கருத்தையே முன்வைக்கிறார். தமிழர் மற்றும் சிங்களவர்களுக்கு மத்தியிலும் இந்த கருத்தையே தொடர்ந்தும் முன்வைத்து வருகிறார். தான் நாட்டின் பொருளாதாரத்தை சுபீட்சமானதொரு நிலையை நோக்கி முன்கொண்டு செல்ல தயாராக இருப்பதாகவும் இதனை கடந்த காலங்களில் நடைமுறைச்சாத்தியமாக காட்டி இருப்பதாகவும் கூறி தன்னை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான காரணத்தை முன்வைத்து வருகிறார்.
சஜித் பிரேமதாஸவின் உரைகளில் தன்னிடம் சிறந்த எதிர்கால திட்டம் இருப்பதாக குறிப்பிடுகிறார். தனது தந்தை இந்நாட்டில் மேற்கொண்ட மக்கள் நலன் வேலைத்திட்டங்களை தானும் மேற்கொள்வேன் எனக் கூறி தந்தையின் பெயரால் இந்நாட்டை ஆள்வதற்கான மக்கள் ஆணையை கோருகிறார். அதேபோன்று நாட்டை முன்னேற்றகரமான பாதையை நோக்கி முற்கொண்டு செல்ல தன்னிடம் நல்லதொரு அணி இருப்பதாகவும், அதற்கான பல்துறைசார் நிபுணத்துவகுழுவின் வழிகாட்டல் இருப்பதாகவும் மக்கள் மத்தியில் தனது கருத்தை முன்வைத்துவருகிறார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் உரையானது ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையாக இருக்கிறது. அத்தோடு நாட்டிற்கு ஏற்புடைய பொருளாதார கொள்கையை அமுல்படுத்தி முன்னேற்றத்தின் பாதையில் இட்டுச் செல்வதற்கான செயற்றிறன் மிக்க குழுவொன்று தன்னிடம் இருப்பதாகவும் 76 வருடமாக படு பாதாளத்தில் தள்ளப்பட்ட இந்நாட்டை மீட்டெடுக்க தன்னோடு இணையுமாறு வலியுறுத்துகிறார்.
இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இன, மத ரீதியிலான வெறுப்பு பேச்சுகள் இல்லாது காணப்படுவது ஆரோக்கியமானதாகவே உள்ளது. ஆனால், சஜித் பிரேமதாஸ ஜனாஸா எரிப்பு விவகாரத்தை தொடர்ந்து சந்தைப்படுத்தி முஸ்லிம்களின் வாக்குகளை கவர்தற்கு எத்தனிக்கிறார். அநுரகுமார திஸாநாயக்க கண்டி திகன கலவரத்தையும் பேருவளை அழுத்கம தர்காநகர் வன்முறைகளையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதை காண முடிகிறது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரைகளில் பெரும்பாலும் இவை தவிர்க்கப்பட்டலும் ஜனாஸா எரிப்புக்கு நட்ட ஈடு வழங்குவதற்கும் இனி இவ்வாறு நடக்காமல் இருப்பதற்கு தான் கொண்டுவந்துள்ள சட்ட ஏற்பாடுகள் பற்றியும் சில மேடைகளில் பேசி இருந்தார்.
2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை யாருக்கு வழங்க வேண்டும் என்ற கேள்வி, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படும். முஸ்லிம் சமுதாயம் ஏற்கனவே சந்தித்துவரும் சமூக, அரசியல், மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதற்கான சில முக்கிய அம்சங்கள் உள்ளன:
1. சமூக பாதுகாப்பு:
இலங்கை முஸ்லிம்கள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக 2019 குண்டு தாக்குதலுக்குப் பிறகு பல்வேறு இனப் பாகுபாடு மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளை சந்தித்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி சம்பவங்களும், அரசியல் ரீதியாக புறக்கணிப்பும் கூட நடந்துள்ளன. எனவே, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வழிநடத்தக்கூடிய வேட்பாளரைக் கொண்டுவருதல் முக்கியம் பெறுகிறுது.
2. முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகள் மற்றும் அடையாளம்:
முஸ்லிம்கள் தங்கள் மத, கலாச்சார மற்றும் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஒரு நம்பகமான அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களின் அடையாளம் மற்றும் மத உரிமைகளை மதிக்கும் மற்றும் இவற்றுக்கு முழு ஆதரவளிக்கக்கூடிய கொள்கைகளைக் கொண்ட வேட்பாளர் முக்கியம் பெறுகிறது.
3. அரசியல் சீர்திருத்தங்கள்:
முஸ்லிம் சமுதாயம் அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாக திகழ்கின்றனர். ஆனால், பல சமயங்களில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். புதிய ஜனாதிபதி, முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, அவர்களது கருத்துக்களையும் தேவைகளையும் அரசியல் பொறுப்பாளர்கள் கவனிக்க வேண்டும் என்பதையும் முன்னெடுக்கும் சீர்திருத்தங்களை கொண்டிருப்பது அவசியம்.
4. பொருளாதார முன்னேற்றம்:
பல முஸ்லிம் தொழிலாளர்கள், சிறு வணிகத்துறையில் ஈடுபட்டு, அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை தூண்டக்கூடிய, SME (Small and Medium Enterprises) மற்றும் தொழில்துறையை ஆதரிக்கும் பொருளாதார கொள்கைகளை கொண்ட வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.
5. சர்வதேச உறவுகள்:
முஸ்லிம் சமுதாயம் சர்வதேச ரீதியிலான தொடர்புகளை முக்கியமாகக் கருதுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார, சமூக தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான வேட்பாளரின் ஆட்சி அவர்களுக்கு நல்ல விளைவுகளை தரும்.
6. முஸ்லிம் தலைவர்களின் ஆதரவு:
முஸ்லிம் தலைவர்கள் எந்த வேட்பாளரின் பின்னணியையும், கொள்கைகளையும், செயல்பாடுகளையும் ஆராய்ந்து, அவர்களுக்கு யார் சிறந்தது என்பதற்கான பொதுத்தீர்மானத்தை உருவாக்க முடியும். முஸ்லிம் சமுதாயம் பொதுவாக இது போன்ற தலைவர்களின் பரிந்துரைகளை மதிப்பதற்கும், சமூக நலனில் செயல்படக்கூடியவர்களை ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த தேர்தல் நடைபெற்று முடியும் பட்சத்தில் அதன் முடிவு இந்த நாட்டை புதிய சகாப்தத்துக்குள் உள் நுழைவிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தலாம். அல்லது பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு காலாவதியான அரசியற் கலாசாரத்தினுள் தொடர்ந்தும் இயங்க வைக்கலாம். இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் இந்தளவு பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் வாழவேண்டியதற்கு அடிப்படைக் காரணம் இந்த அரசியற் கலாசாரம் என்பதை இளம் சந்ததியொன்று தெளிவாக உணர்ந்தமையே 2022 இல் நடந்த அரகலய மக்கள் எழுச்சி போராட்டம் உலகுக்கு உணர்த்தியது. அந்த எழுச்சியின் அடுத்த கட்ட நகர்வாக அமையப் போகிறது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பதை மனங்கொள்வோம்.!- Vidivelli
Post a Comment