15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் JVP பெறாது - சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்த
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியானது என்றும், இந்த நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுக்காமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் பங்குகொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்தார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்த இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணி இரண்டு முறை ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்பு என்பதை நினைவுகூர்ந்த எம்.பி., அவர்கள் ஓரளவு வளர்ச்சியைக் காட்டினாலும் 10-15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி. தொலவத்த,
“சஜித் பிரேமதாசவிடம் 28 இலட்சம் வாக்குகளே உள்ளன. அவரது மொத்த வாக்குகள் 55 இலட்சம் என்று யாராவது நினைத்தால், அவர்கள் தங்கள் கணித அறிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சஜித் பிரேமதாச 28 இலட்சத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது. எனவே, எங்களின் வெற்றி உறுதியான வெற்றி என்றே கூற வேண்டும்.
மக்கள் விடுதலை முன்னணி ஒரு பயங்கரவாத அமைப்பு. ஏற்கனவே இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக இரண்டு முறை ஆயுதம் ஏந்தி சாமானிய மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் அழித்த அமைப்பு. இன்றும், சாம்பலுக்கு அடியில் உள்ள நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது. உண்மை என்னவெனில், அவர்கள் மூன்று சதவீதத்தில் இருந்து ஓரளவுக்கு முன்னேறினாலும் உண்மை அதுவல்ல. அவர்களுக்கு 10-15 இலட்சம் வாக்குகள் மாத்திரமே கிடைக்கும். அதைவிட அதிக வாக்குகளை அவர்களால் பெற முடியாது.
நாம் கடந்து வந்த மிகக் கடினமான காலக்கட்டத்தில் இருந்து தற்போது அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையின் மூலம், இன்று நாம் முன்னேறும் திறனைப் பெற்றுள்ளோம். மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. தேர்தலுக்காக இதை நாங்கள் கூறவில்லை. குறிப்பிட்ட அளவிலான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னரே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் வெற்றியின் காரணமாகவே அரச ஊழியர்களுக்கு 24% – 50% இற்கும் அதிகமான சம்பள உயர்வை வழங்க முடிந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறி சிலர் போலியான செய்திகளை உருவாக்க முற்பட்டுள்ளனர். நேற்று, தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்து, இதுகுறித்து கலந்துரையாடியபோது, வேறு எந்த தரப்பினருடனும், இது குறித்து கலந்துரையாடவில்லை என உறுதியாக தெரிவித்தனர்.
எனவே, தற்போது எமது நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க வேண்டாம் எனவும், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களது பூரண ஆதரவை வழங்குமாறும் மக்களை கேட்டுக்கொள்கின்றேன்” என்று தெரிவித்தார்.
Post a Comment