Header Ads



10 ஆவது அகவையில் பலகத்துறை கலை இலக்கிய வட்டம் - நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்க ஏற்பாடு


- எம்.ஜே. எம். தாஜுதீன் -


கடல் வளம், கல்வி வளம் மற்றும் கவிதை வளம் என சகல வளங்களும் சிறப்பாகப் பெற்ற ஊர் கம்மல்துறை.


நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு கடல் வளம் சோறு போடுகிறது.


தென்கிழக்கு ஆசியாவின் தலைசிறந்த கல்விமான்களில் ஒருவர் எமதூர் அறிஞர் மர்ஹூம் யூ.எம். தாஸீன் நத்வி, அல்-அஸ்ஹரி என்பது இந்த ஊரின் கல்வி வளத்துக்கு ஒரு பதச்சோறு.



பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்காதவர்கள் கூட கவிதை பாடும் அதிசயமான ஊர் இந்தப் பலகத்துறை.


பத்திரிகைகளுக்கு தனித்தனியாக கவிதை எழுதிக் கொண்டிருந்தவர்களை ‘பலகத்துறை கலை இலக்கிய வட்டம்’ என்ற அமைப்புக்குள் கட்டிப் போட்டவர் மர்ஹூம் எம். எஸ். எம். றிஸ்மி ஆசான் அவர்கள்.


இந்தக் கலை இலக்கிய வட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் திகதி பலகத்துறை மத்ரஸத்துல் சுலைமானியா மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


அன்று முதல் இன்று வரை கடந்த பத்து வருட காலமாக காலத்துக்கேற்ற கலை இலக்கியப் பணிகளை இந்த வட்டம் தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறது.


இவ்வமைப்பின் ஆயுட்காலத் தலைவராக மர்ஹூம் யூ. எம். பகுருத்தீன் ஆசிரியர் பணியாற்றினார்.


அவரது மறைவுக்குப் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலா பூஷணம் எம். ஜே. எம்  தாஜுதீன்  தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டார்.


வெறும் வாய்ப்பேச்சளவில் இருந்து வந்த பலகத்துறை வரலாற்றை ‘பலகத்துறை வரலாறும் வாழ்வியலும்’ என்ற நூலின் மூலம் எழுத்து வடிவில் ஆவணப்படுத்திய பெருமை இந்த இந்த இலக்கிய வட்டத்தையே சாரும்.


சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம். ஜே. எம். தாஜுதீன் எழுதிய இந்த நூலே பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் கன்னி வெளியீடாகும்.


பலகத்துறை ஜலால்தீன் பவுண்டேஷன் வழங்கிய  இணை அனுசரணையுடன் இந்த நூல் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்டது.


பலகத்துறையில் உள்ள இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக இலக்கிய வட்டத்தின் ‘வட்ஸ்அப்’ குழுமத்தில் மாதாந்த புகைப்படக் கவிதை போட்டியை இந்த இலக்கிய வட்டம் நடாத்தியது. 


இலங்கையில் உள்ள தலைசிறந்த கவிஞர்கள் இப்போட்டிக்கு நடுவராக நியமிக்கப்பட்டனர். போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு இலக்கிய வட்டம் பணப்பரிசுகளை வழங்கியது.


இப் போட்டிகள் மூலம் கிடைத்த நல்ல கவிதைகளை ஒன்று திரட்டி ‘புலனம்’ என்ற பெயரில் ஒரு கவிதை நூல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி வெளியிடப்பட்டது.


பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் இரண்டாவது பிரசுரம் இது.


இந்த ஊக்குவிப்பு காரணமாக உறங்கு நிலையில் இருந்த திறமைசாலிகளும் இலை மறை காயாக இருந்த கவிஞர்களும் கவிதை எழுத ஆரம்பித்தார்கள்.


இதன் காரணமாக பலகத்துறை மண்ணில் ஆயிரம் கவிதைகளை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எம்முள் துளிர்விட்டது.


இத்திட்டத்தின் முதற்கட்டமாக நூறு கவிதைகளை முதலில் வெளியிட இலக்கிய வட்டம் தீர்மானித்தது.

இதன் பெறுபேறாக  கம்மல்துறை கவிஞர்கள் 24 பேர் எழுதிய நூறு கவிதைகள் ‘தூண்டில்கள் துடிக்கின்றன’  என்ற கவிதை நூலாக கடந்த 14.07.24 அன்று வெளியிடப்பட்டது.


எமது இலக்கிய வட்டத்தின் இளம் ஊடகவியலாளர் அனஸ் அப்பாஸ் எழுதி  ‘மீள்பார்வை’ பத்திரிகை வெளியிட்ட ‘தேசிய சாதனை மடல்’ நூல் வெளியீட்டு விழாவை பலத்துறை கலை இலக்கிய வட்டம் கொழும்பில் மிக விமர்சையாக நடத்தி சாதனை புரிந்தது.


மர்ஹூம் றிஸ்மி ஆசானின் அயராத முயற்சி காரணமாக 

வலம்புரி கவிதா வட்டத்தின் 77 ஆவது கவியரங்கை பலகத்துறை கலை இலக்கிய வட்டம் பலகத்துறையில் அறிஞர் யூ.எம்.தாஸீன் அரங்கமைத்து மிகச் சிறப்பாக நடாத்தியது.


இதன் காரணமாக பலகத்துறை இளம் கவிஞர்கள் மத்தியில் கவிதையாக்க உத்வேகம் பிறந்தது.


கடந்த காலங்களில் கம்மல்துறை அல்-பலாஹ் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கவிதை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வந்தோம். அந்த செயற்பாட்டை மீண்டும் தொடர்வது என கலை இலக்கிய வட்டம் தீர்மானித்துள்ளது.


மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த காலங்களில் செயலிழந்துபோன வாசிகசாலை, அதாவது பொது நூலகத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


பத்தாவது அகவையில் பயணித்துக் கொண்டிருக்கும் எமது கலை இலக்கிய வட்டத்தின் எதிர்கால திட்டங்களில் முக்கியமானது- 

எமது சொத்து, பலகத்துறை ஈன்றெடுத்த முத்து அறிஞர் யூ.எம்.தாஸீன் அவர்களது ஆளுமைகள் தொடர்பான  அரிய தகவல்களை ஒன்று திரட்டி நூலூருவில் கொண்டு வருவதாகும்.


அதற்காக அன்னாரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எம்மோடு கைகோர்த்து இப்பணியை சிறப்பாக நிறைவேற்ற உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


அத்துடன் பலகத்துறை கலை இலக்கிய வட்ட அமைப்பினை அகில இலங்கை ரீதியில் விஸ்தரித்து தமிழ் பேசும், தமிழ் வளர்க்கும் சகல இன கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கவும் தீர்மானித்துள்ளோம்.


அதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அகில இலங்கை ரீதியில் கவிதைப் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.


இவ்வாறு பத்தாவது அகவையில் பல கனவுகளைச் சுமந்து பல சவால்களைச் சமாளித்து வீறுநடை போடும் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்துக்கு பக்கபலமாக நின்று ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.







No comments

Powered by Blogger.