Header Ads



Dr ஷாபி வீட்டில் சாதாரண சம்பவம் - இனவாத கோர முகத்தை காட்டிய ஹிரு


இலங்கையின் ஊடகங்கள் இனவாதத்தைப் பரப்புவது  ஒரு புதிய நிகழ்வு அல்ல. 


கடந்த காலங்களில் இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சிங்கள ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு பாரிய அழிவுகளுக்கு வித்திட்டன. 


இலங்கையை ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களும், இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இந்த ஊடகங்களின் நாசகார வேலைகளுக்கு துணைபோயிருக்கின்றன. 


இந்த இனவாத அரசியல் சக்திகளின்  ஆதரவுடன் செயற்படும் இந்த ஊடகங்களின்  நோக்கம்  முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வெறுப்பரசியலை அரங்கேற்றுவதேயாகும்.


கடந்த காலங்களில் முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பேரழிவை ஏற்படுத்திய அனைத்து இனக் கலவரங்களின் பின்னணியிலும் இந்த ஊடகங்களே இருந்தன.


இந்த ஊடகங்கள் அரங்கேற்றும் இனவாதச் செயல்கள் தொடர்பில் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் எந்த  அரசாங்கமும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வேதனையுடன் குறிப்பிட வேண்டிய விடயமாகும். 


இந்த ஊடகங்கள் பயன்படுத்தும் அலைக்கற்றைகள் ஊடக முதலாளிகளின் ஏகபோக சொத்தல்ல. அவை இந்த நாட்டு மக்களின் இறைமையுள்ள அரச சொத்தாகும். இந்நாட்டு மக்களின் சொத்தான இந்த அலைக்கற்றைகளை இனவாதத்தை தூண்டி நாட்டைத் துண்டாடி தமது இனவாத அரசியலை அரங்கேற்ற அனுமதிக்க முடியாது. 


இந்த நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும்,  அவர்களின் ஏஜன்ட்களான ஊடக முதலாளிகளும் இந்த  அலைக்கற்றைகளைப் பயன்படுத்தி இனவாதத்தை பரப்பும் தங்கள் இனவாத அரசியலை  தயக்கமின்றி அரங்கேற்றி வருகின்றனர். 


அண்மையில் ஹிரு இனவாத ஊடகம் டொக்டர் ஷாபி பற்றி  ஒரு  செய்தியை திரிபு படுத்தி பெரும்பான்மை மக்களை திசை திருப்ப முயற்சி செய்தது. 


டொக்டர் ஷாபிக்கு சொந்தமான வீடு ஒன்றில் இடம்பெற்ற ஒரு சாதாரண மரணத்தை வைத்து, சந்தேகத்தை உருவாக்கும்  பாணியில் அந்த செய்தியை  வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஹிரு ஊடகம்  மீண்டும் ஒரு முறை தனது இனவாத கோர முகத்தை இந்நாட்டு மக்களுக்குக் காட்டியுள்ளது. 


2019 ஆம் ஆண்டு, இந்த  இனவாத  ஊடகங்கள் சிசேரியன் அறுவை சிகிச்சைகளின் போது சிங்கள தாய்மார்களை திட்டமிட்டு டொக்டர் ஷாபி மலடாக்கியதாக மிகப்பெரிய பொய்யை பரப்பின.

 

இனவாதத்தையும், வெறுப்புப் பேச்சையும் கக்கிய இந்த செய்திகள் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒற்றுமையை சீர்குலைத்தது. இரண்டு சமூகங்களிடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. 


கடந்த காலங்களில் இந்த இனவாத ஊடகங்களின் வெறுப்புப் பிரசாரத்தினால் கலவரங்கள் ஏற்பட்டு முஸ்லிம்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. 


இந்நாட்டு முஸ்லிம்கள் பற்றி இந்த இனவாத ஊடகங்களால் புனையப்பட்ட செய்திகள் அனைத்தும் அப்பட்டமான பொய்கள் என  விசாரணைகளில் நிரூபிக்கப்பட்டன. 


என்ற போதிலும், மக்களின் இறைமையுள்ள அரச சொத்தான இந்த அலைக்கற்றைகளை தமது இனவாத அரசியலுக்காக தவறாக பயன்படுத்தும்  இந்த ஊடகங்கள் மீது இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.


 Azeez Nizaruddeen


No comments

Powered by Blogger.