அனைவருடனும் இணைந்து செயல்பட, நாங்கள் தயாராக இருக்கிறோம் - ஜனாதிபதி
தேர்தல் முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் டிஜிட்டல் தேர்தல் முறையை பரீட்சிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று (22) நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார்.
“நாட்டின் எதிர்கால குறியீடு” என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மாநாட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்ட “பெப்பர்” என்ற ரோபோ வரவேற்றமை சிறப்பம்சமாகும்.
உலக வங்கியின் டிஜிட்டல் மேம்பாட்டு நிபுணர் சித்தார்த்த ராஜா இந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:
"இலங்கையில் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும். எவ்வாறாயினும், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் நடுப்பகுதி வரை இந்த இலக்கை அடைய தொழில்நுட்பம் தேவைப்படும்.
இன்றைய உலகில், தொழில் அல்லது நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் இன்றியமையாதது. அது உறுதியாவிட்டது. அதன்படி, ஆசியாவிலேயே தலைசிறந்து விளங்கும் நோக்கில், "தொழில் நுட்பத்தை" நமது பொருளாதாரத்தின் அடிப்படை அங்கமாக இணைக்க முடிவு செய்துள்ளோம்.
இது தவிர விவசாயம் போன்ற நவீனமயமாக்கல் செய்யப்பட வேண்டிய துறைகளையும் அடையாளம் கண்டிருக்கிறோம். தற்போதும் நாட்டில் மில்லியன் கணக்கான ஏக்கரில் நாட்டுக்குள் வாழ்வாதார விவசாயம் செய்யப்படுகிறது. மேலும் 300,000 ஏக்கரில் விவசாயம் செய்வதற்கான சாத்தியமும் உள்ளது.
விவசாயத்தை நவீனமயமாக்கி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக நாம் மாறலாம். சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நமது பரந்த டிஜிட்டல் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை பொருளாதாரம் என்ற இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. இவை இரண்டும் கைகோர்த்துள்ளன. அற்கான மாற்றத்தை நாம் எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும், எங்கிருந்து நகர்வுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். முன்னைய அரசாங்கங்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய வரையறுக்கப்பட்ட பலன்களை பெறக்கூடிய திட்டங்களில் தொடர்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது.
இந்த அணுகுமுறையிலிருந்து விலகி, சந்தை அடிப்படையிலான மற்றும் தனியார் துறை தலைமையிலான திட்டங்களை நோக்கி நாங்கள் நகர்கிறோம். தேசிய விஞ்ஞான மன்றத்தின் மூலம், அரசாங்கம் தூய அறிவியலில் ஆராய்ச்சிகளுக்கு தேவையான நிதியை சரியான முறையில் நிர்வகிக்கிறது.
வணிக ரீதியான ஆராய்ச்சிகளுக்காக புதிதாக நிறுவப்பட்ட சபை, நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கும். இந்த ஒத்துழைப்புகளுக்கான பலன்களும் கிட்டும்.
அதேபோல், டிஜிட்டல் மாற்றத்துக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையம் ஆகியவை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும், நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதும், சட்டங்களை உருவாக்குவதும், தேவையான மனித வளத்தை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சிலர் வெளிநாடு செல்வார்கள். ஆனால், அதிக சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளை நாட்டில் இன்னும் அதிகமாக தக்கவைக்க வேண்டும். தொழில் திறமை மிக்கவர்களை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
2030 மற்றும் 2040 ஆம் ஆண்டுகளுக்கு ஏற்ற கல்வியை வழங்கக்கூடிய வகையில் பாடசாலைகளை நவீனமயமாக்க வேண்டும். அதற்கு சிறிது காலம் எடுக்கும். எவ்வாறாயினும், இலங்கை தொழிற் பயிற்சி முகவர் நிலையத்தின் கீழ் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை இணைத்து தொழிற்கல்வியை புரட்சிகரமான முறையில் மறுசீரமைக்க எதிர்பார்க்கிறோம்.
வேலைவாய்ப்பு சார்ந்த "இணை பட்டங்களை" வழங்குதல், தற்போதுள்ள அரசாங்கப் பல்கலைக்கழகங்களை விரிவுபடுத்துதல் மற்றும் அரச சார்பற்ற பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளோம். தொழில்நுட்பத்தை மேம்படுத்த தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ பல்கலைக் கழகங்களை நிறுவவும் எதிர்பார்க்கிறோம்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக, கண்டியின் கலஹா பகுதியில் சென்னை ஐஐடி வளாகத்தை நிறுவுவதற்கும், குருநாகல், சீதாவக்க மற்றும் சியனே உள்ளிட்ட நான்கு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அத்தோடு, இலங்கையில் மேலும் பல தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாகும் என எதிர்பார்க்கிறோம்.
இந்த உட்கட்டமைப்பு மற்றும் திறமை மூலம், புத்தாக்கங்களுக்கு நிதி வழங்குவதன் மூலம் அந்த துறையை விரிவுபடுத்த முடியும். தற்போதுள்ள கட்டமைப்பை மறுசீரமைப்பதை விடவும், வெற்றிகரமான திட்டங்களை செயற்படுத்தி முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, இந்தியாவின் ஆதரவுடன் நாட்டை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம்.
நாட்டின் தற்போதைய 85 பில்லியன் டொலர்களுக்காக உள்ள மொத்தத் தேசிய உற்பத்திக்காக எம்மால் முன்னெடுக்கப்படும் விரிவான நோக்கின் ஒரு பகுதியாக 15 பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்காகும்.
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள், இந்நாட்டை 350 பில்லியன் டொலர்கள் அல்லது அதற்கும் அதிகமான பொருளாதாரமாக மாற்றுவது எங்கள் இலக்காகும்.
தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய பல மாநிலங்கள் உள்ள தென்னிந்தியாவிற்கு அருகில் நாங்கள் அமைந்துள்ளோம். இந்த அருகாமையை நாம் பயன்படுத்திக் கொண்டு ஒன்றாக முன்னேற வேண்டும்.
நாம் நிகழ்காலத்தில் வாழ்வதுடன், தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பல்வேறு துறைகளில், நாம் தலைமையிலோ அல்லது குறைந்தபட்சம் முன்னணியில் இருப்பவர்களாகவோ இருக்க நாம் முயற்சிக்க வேண்டும். பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உங்கள் அனைவருடனும் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்" எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment