Header Ads



ஹசீனாவுக்கு ஏற்பட்டது, ரணிலுக்கு சிறந்த பாடமாகும் -ஜனாதிபதித் தேர்தலில் தக்க பதிலடியைக் கொடுத்தேயாகவேண்டும். - ஹக்கீம்


"தேர்தவொன்று இடம் பெறவிருந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவின்  காலத்தில், பாரிய மத்திய வங்கிக் கொள்ளை இடம்பெற்றது. இப்பொழுது அதை விட நூறு மடங்கு அதிகமான E- வீசா மோசடி 
போன்ற பாரிய கொள்ளைச் சம்பவங்களுக்கு இடமளித்திருக்கும்   ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் தக்க பதிலடியைக் கொடுத்தேயாகவேண்டும். இந்த மோசடி தொடர்பில் எந்தவொரு இலத்திரனியல் ஊடகத்திலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்".


இவ்வாறு காட்டமாகக் கூறினார்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம். 


ஐக்கிய மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு வியாழக்கிழமை ( 8 ) கொழும்பில்,சுகததாசஉள்ளரங்கில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


 அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


சில நாட்களுக்கு முன்னர், இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் எடுக்கும் தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்துரையாடியிருந்தோம். நாட்டின் நாலாப் புறங்களிலும் இருந்து எமது கட்சியில் உயர்பீட உறுப்பினர்கள் அந்த கலந்துரையாடலில் பங்குபற்றி அவர்களின் நிலைப்பாடுகளை முன்வைத்திருந்தார்கள்.


அந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் சஜித் பிரேமதாச வெற்றியடைவதற்கான போக்கை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாக அவர்களில் அனேகமானோர் கூறினார்கள். ஒரு சிலர் ரணில் பற்றியும்  கூறினார்கள் . மக்கள் விடுதலை முன்னணி தொடர்பிலும் ஓரிருவர் பேசினார்கள். 


கருத்துத் தெரிவிப்புகள் நிறைவடைந்ததும் கட்சித் தலைவர் எடுக்கும் இறுதித் தீர்மானத்திற்கு சகலரும் இணக்குவதாக, ஏற்றுக்கொள்வோம் என்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எமது உறுப்பினர்கள், செயற்பாட்டு அரசியல்வாதிகள் என சகலரும் ஒன்றிணைந்து அறிவிக்க வேண்டுமென்று எமது உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.


அதன் பின்னர் நான் பேசும்போது, நாம் இந்த தேர்தலில் எங்களின் தெரிவை அவசியமின்றி, காலதாமதப்படுத்தி எமது வேட்பாளரை பலவீனப்படுத்துவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்றும், உடனடியாக இன்றே(8) சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக எமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கூறினேன்.


 மிகவும் கீழ்த்தரமாக ,எம்.பிக்களை கைப்பற்றிக்கொண்டு தன்னால் வெற்றியடைய முடியும் என்ற புதிய கருத்தியலில் செயற்படும் ஜனாதிபதிக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்பதே அந்தத் தீர்மானத்தின் உண்மையான நோக்கமாகும்.


இந்தக் காலப்பகுதியில், பொருளாதார ரீதியாக தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் அடிமட்டத்திலிருந்த நாடான எமது நாட்டிலும் முன்னைய ஜனாதிபதியைத் துரத்தியடித்தார்கள். தெற்காசியாவில் அதிக பொருளாதார வளர்ச்சி கண்ட பங்களாதேஷிலும் ஷேக் ஹசீனாவை மக்களே துரத்தியடித்துள்ளனர். இதிலுள்ள வேறுபாடு என்ன? ஷேக் ஹசீனா அனுபவமுள்ள தலைவிதான். ஆனால் நீண்டகாலமாக ஜனநாயகத்தை சீரழித்து, தேர்தலையை நடத்துவதற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்களை தம்முடன் இணைத்துக்கொள்வதனுடாக தனது சர்வாதிகார அரசாங்க முறையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றமையினாலேயே அவருக்கு அந்த நிலைமை ஏற்பட்டது.


இது ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறந்த பாடமாகும். வரிசை(போலின்) யுகத்தை நிறைவுக்கு கொண்டுவந்துவிட்டதாகக் கூறி அதனூடாக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்காக அவர் வெட்கப்பட வேண்டும்.


 திறமையான விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலும், வர்ணனையாளர்கள் "வரிசை" யுகத்தை இல்லாமலாக்கிய தலைவர்கள் பற்றி பேசுகிறார்கள்.


இவ்வாறே, அரச பொறிமுறையை தவறாகக் கையாளுகின்றார்கள்.


நாம் ஊழல், மோசடிகளை ஒழிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளோம். 


இந்த நாட்டில் அரசத் தலைவர்களாக கூறிக்கொள்பவர்களுக்கும் பஸ்ஸில் ஏறி திருடுபவர்களுக்கும்(Pick pocket) கூட "துறை" சார்ந்த அனுபவம் இருக்கிறது. பஸ்ஸில் திருடும்போது, எவருக்கும் தெரியாமல் பக்குமாகத் திருட வேண்டும். மத்திய வங்கி கொள்ளைச் சம்பவமும் அவ்வாறானதொரு கொள்ளைச் சம்பவம்தான். சுற்றியிருந்த எங்களுக்கு கூட தெரியாமல் கொள்ளையடித்தார்கள். 


தேர்தவொன்று இடம் பெறவிருந்த நிலையிலேயே அது இடம்பெற்றது. தற்போதும், தேர்தலொன்று இடம்பெறவுள்ள நிலையில் விசா மோசடியும் இடம்பெற்றுள்ளது. மக்கள் வங்கி கொள்ளையை விட 100 மடங்கும் அதிகமாக கொள்ளையடித்திருக்கிறார்கள் மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் அமைச்சரவையில் இருந்த நாங்கள் அறிந்திருக்கவில்லை.


ஆனால், இந்த விசா மோசடி பட்டப்பகலில் அமைச்சரவை பத்திரத்தினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இடமளித்த ஜனாதிபதிக்கு நாட்டை ஒப்படைப்பதா, இல்லையா என்ற தீர்மானத்தை எடுக்கவேண்டும். நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவினூடாக அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் பாடம் புகட்டியுள்ளோம்.


பாராளுமன்ற உறுப்பினர்களான நானும், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சம்பிக்க ரணவக்க ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாதாடினோம். .தனிப்பட்ட ரீதியில் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகவும் மிரட்டினார்கள்


 இது தொடர்பில் என்னுடன் விவாதிக்க மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பாராளுமன்றத்தில் சவால் விடுத்தேன். அதற்கு  நான் தயாராக இருக்கிறேன்.


கலாநிதி  ஹர்ஷ டீ சில்வா.கபீர்  ஹாஷிம், இரான் ஆகிய பொருளாதார நிபுணத்துவர்களுடன் இரவு பகல்  என்று பாராமல் மக்களுக்காக பணிபுரியும் மக்கள் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கும் இந்த நிகழ்ச்சி நிரலில் முன்னின்று செயலாற்றுவோம் என்று வாக்குறுதி வழங்குகிறேன்.


மறைந்த ரணசிங்க பிரேமதாசவவை சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி ஆவதற்கு எங்களது மறைந்த தலைவர் எம்.எச் .எம் . ஒத்துழைத்தார் அவ்வாறே அவரது புதல்வர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வருவதற்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்றார்.

No comments

Powered by Blogger.