அநுரகுமார இஸ்ரேலுடனும் தேனிலவு கொண்டாடமாட்டார் என எப்படி நம்புவது..?
- ஹஸ்பர் -
மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் அனுரவின் இந்தியா விஜயம் இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
முஸ்லிம்களையும் சிறுபான்மை மக்களையும் வஞ்சிக்கும் மோடி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அநுரவும் அவரது சகாக்களும் இந்தியா சென்றனர்.
இந்தியாவின் அழைப்பில்தான் அநுர இந்தியாவுக்கு சென்றார்.மோடி அரசின் நிகழ்ச்சி நிரலில் தான் அந்த விஜயம் அமைந்திருந்தது. அங்கு யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்தது மோடி அரசாங்கம்தான்.
புல்டோஷரை கொண்டு முஸ்லிம்களின் வீட்டை உடைத்து நொறுக்கும் குஜராத் மாநில முதலமைச்சரை சந்தித்தார் அநுர.அதானி குழுமத்தை சந்தித்தார்.
குஜராத் முதலமைச்சருடன் என்ன ஒப்பந்தம் செய்தார். அதானி குழுமத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார், மோடி அரசாங்கத்துடன் என்ன ஒப்பந்தம் செய்தார் என்பது இதுவரைக் காலமும் அவர் வெளிப்படுத்தப்பட வில்லை.
வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிராக எப்பொழுதும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் அனுர இந்திய விஜயத்தின் பின் இந்தியாவின் முதலீடுகளுக்கு எதிராக இதுவரை எந்த ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.
இது தவிர இவர்கள் அடுத்தடுத்து மேற்கு நாடுகளுக்கு விஜயத்தை மேற்கொண்டனர். இவர்களின் கொள்கைகத்தான் என்ன?இன்று இஸ்ரேலை எதிர்ககும் அநுரவும் சஹாக்களும் நாளை இஸ்ரேலுடனும் தேனிலவு கொண்டாடமாட்டார்கள் என எப்படி நம்புவது?
எனவே நாங்கள் இந்த அநுர விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். அநுர யார்? அவர்களின் கொள்கை என்ன? எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பதையெல்லாம் அவர்களின் திசைக்காட்டியே எமக்கு காட்டிவிட்டது. அவர்களின் அந்த மோசமான திசை நோக்கி நீங்கள் சென்று நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிவிட வேண்டாம்.
Post a Comment