Header Ads



முதுகெலும்புள்ள காதி நீதவான் - இலஞ்சம் வழங்க முற்பட்டவர் கைது.


 (எம். இஸட். ஷாஜஹான்)


நீர்கொழும்பு காதி நீதவானுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணை குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபரை கொழும்பு  நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


சிலாபத்தை சேர்ந்த 34 வயதுடைய  நபரே  இலஞ்சம் வழங்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டவராவார்.


சந்தேக நபர் நீர்கொழும்பு காதி நீதவான் எம்.எம். முஹாஜிரினின் வீட்டில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு வந்து, தான் தொடர்ந்துள்ள மனைவியுடனான விவாகரத்து வழக்கை (வழக்கு இலக்கம்  24844/1/24)  விரைவில் முடித்து, விவகாரத்து  (தலாக்) வழங்குமாறு கூறி, 5000 ரூபாய் பணத்தை நீதவானின் மேசையில் வைத்துள்ளார். 


சந்தேக நபர் இதற்கு முன்னர் இரண்டு தடவை இலஞ்சம் வழங்க முயற்சித்தபோது காதி நீதவான் சந்தேக நபரை எச்சரித்ததோடு, அறிவுரை கூறி திருப்பி அனுப்பி உள்ளார்.


இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி  சந்தேக நபர் மீண்டும் நீதவானின் அலுவலகத்திற்கு வந்து 5000 ரூபாய் பணத்தை நீதவானின் மேசை இலாச்சியில்  வைத்துள்ளார். இதன்போது  இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகரிகள் அவரை கைது செய்துள்ளனர்.


இந்நிலையில் 14 ஆம் திகதி  கொழும்பு நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போது , எதிர்வரும் 23 ஆம் திகதி (23-8-2024) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


காதி நீதவான் எம்.எம். முஹாஜிரின் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு நகரில் பணியாற்றி வருகிறார்.  இவர் அக்குரணையை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வாசிப்பிடமாகவும் கொண்டவராவார். தனது கடமைக்கு மேலதிகமாக கம்பஹா காதிநீதிமன்றத்தில் பதில் காதி நீதவானாக இரண்டரை வருட காலம் பணியாற்றியுள்ளார். தற்போது புத்தளம் பதில் காதி நீதவானாகவும் கடந்த ஐந்து மாதங்களாக பணியாற்றி வருகிறார்.


காதி நீதவான் எம்.எம். முஹாஜிரின் கொழும்பு இஹ்ஸானியா அரபிக் கல்லூரியின் பழைய மாணவரும், அந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் ஆவார்.


காதி நீதவான் ஒருவருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட வேளையில், சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.