அதிரடி காட்டிய SLMC, ஹரீஸ் என்ன செய்யப் போகிறார்..? (நிசாம் காரியப்பரின் மிரட்டல் கடிதம்)
இதற்கான கடிதத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், ஹரீஸ் எம் பிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் காரியாப்பார் தெரிவித்திருப்பதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்
சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அறிவுறுத்தியுள்ளபடி , அவருடைய உச்ச பீட உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கான கடிதம் என்னால் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக கூறப்பட்ட விடயம் , கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் ஒன்று கூடி, ஆழமாக பல விடயங்களைப் பற்றி கலந்துரையாடி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவரும் சமகி ஜன பலவேகய தலைவருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு எங்களுடைய முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று ஏகமனதாகத் தீர்மானித்தோம்.
அந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களும் கலந்து கொண்டார். அவரும் அவருடைய கருத்தை தெரிவித்திருந்தார். அனைவரின் கருத்தையும் கேட்டறிந்த பின்னரே அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் 2024 ஆகஸ்ட் 16ஆம் திகதி தலைவரின் தலைமையில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் அத்தியாவசியமாக கட்டாயமாக எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அதில் கலந்து கொள்ளவில்லை. அதுமாத்திரமல்ல, அன்றில் இருந்து இன்றுவரை சஜீத் பிரேமதாஸவின்
எந்தவொரு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவதை தொடர்ச்சியாக அவர் தவிர்த்து வந்தார். இவ்வாறான சூழ்நிலையில் அவர் கட்சியால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு முரணாகவும் மாற்றமாகவும் செயல்பட்டுவருவதாக தலைவர் எனக்கு அறிவித்திருக்கின்றார். தலைவர் மேலும் தொடர்ச்சியாக இப்படி பிரச்சார வேலைகளில் சஜீத் பிரேமதாஸவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் தன்னை தவிர்த்து கொள்வது பாராதூரமான கட்சி ஒழுக்காற்றை மீறும் விடயமாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் உடனடியாக கட்சியின் உயர் பீடத்தில் இருந்து இடைநிறுத்துவதற்கு தலைவர் தீர்மானித்து, அதனை அறிவிக்கும்படி எனக்கு சொல்லியிருந்தார்.
அதன் அடிப்படையில், கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதவியை உடனடியாக நிறுத்துவதற்கான கடிதத்தை நான் அவருக்கு அனுப்பியுள்ளேன்.அதன் பிரகாரம் அவர் பிரதி தலைவர் பதவியையும் இழக்கின்றார்.
முக்கியமாக இந்த விடயம் சம்பந்தமாக அவரிடம் நாங்கள் விளக்கம் கோரி இருக்கின்றோம். அவர் இது சம்பந்தமாக ஏதாவது குறிப்பிட வேண்டியிருந்தால் உடனடியாக ஒரு வாரத்துக்குள் கட்சியின் செயலாளர் என்ற முறையில் எனக்கு கடிதம் மூலமாகவோ,அவரது வட்ஸ்அப் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும். இந்த மாதத்துக்குள் இது சம்பந்தமாக உயர் பீடம் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும். ஆகவே ,எந்தவொரு காலக்கெடு நீடிப்பும் வழங்கப்பட மாட்டாது. அவசரமாக அவரது கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறோம்.
அவர் ஏற்கனவே சென்ற ஜூன் மாதம் 22 ஆம் திகதி நடாத்தப்பட்ட பேராளர் மாநாட்டில் தான் ஒரு பிரதித் தலைவராக தெரிவாகி இருந்த போது கட்சியின் சகல முடிவுக்கும் அடிபணிந்து தான் செயல்படுவதாக அளித்த அந்த வாக்குறுதியை சத்திய கடதாசியொன்றின் மூலமாக வழங்கியிருந்தார். அதன் பிரதியையும் நாங்கள் அவருக்கு அனுப்பியிருக்கின்றோம்.
Post a Comment