டுபாயில் திட்டமிடப்பட்ட கொலை
கிளப் வசந்த கொலை விவகாரம் தொடர்பில் பாணந்துறை பகுதியில் இருவர் நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
பாணந்துறை, பின்வத்த பிரதேசத்தில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருவரும் தங்கியிருப்பதாக பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன் தினம் (28) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், கிளப் வசந்த கொலை செய்யப்பட்ட தினத்தன்று, டுபாயில் உள்ள ஒருவரின் ஒருங்கிணைப்பின் பேரில், அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு தாங்கள் மற்றும் குழுவினர் வந்ததாகவும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து மறுநாள் காலை அந்த வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் கொல்லப்படவிருந்த நபரின் புகைப்படத்தை காண்பித்ததாகவும், அந்த புகைப்படத்தில் இருப்பவர் கிளப் வசந்த என தமக்கு அடையாளம் தெரியாது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், கேபிஐ என குறிக்கப்பட்டிருந்த இரண்டு டி.56 துப்பாக்கிகளை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டுச்சென்றதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஜூலை 8ம் திகதி காலை அத்துருகிரியில் உள்ள பச்சைக்குத்தும் நிலையத்திற்கு காரில் சென்று தோட்டாக்கள் தீரும் வரை கிளப் வசந்தவை சுட்டுவிட்டு, காரில் தப்பிச்சென்று அதனை நிறுத்திவிட்டு வானொன்றில் ஏறி கடவத்தைக்கு சென்று அங்கிருந்து பேருந்தில் மாத்தறைக்கு தப்பிச்சென்றதாகவும் கூறியுள்ளனர்.
இதன்போது மாத்தறையில் வைத்து இருவர் வந்து தம்மிடமிருந்த துப்பாக்கிகளை எடுத்துச்சென்றதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து கதிர்காமம் பகுதியில் பதுங்கியிருந்த போது 'லொகு பட்டி' டுபாயில் இருந்து அழைப்பினை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்ததாகவும், கதிர்காமத்தில் வைத்து செய்திகளை பார்த்த போதே கொல்லப்பட்டவர் கிளப் வசந்த என்பது தெரியவந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலைக்காக சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பணத்தினை வழங்கி மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவின் வீட்டில் தங்குமாறு டுபாயில் இருந்து பணிப்புரைகள் கிடைத்ததாக அவர்கள் பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த உத்தரவிற்கமைய 20 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்ததாகவும், அமல் சில்வா தனது பாவனைக்காக தொலைபேசியொன்றை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா, மேல்மாகாண தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், 'ஜூட்' என்ற ஒருவர் தன்னை அழைத்து கஞ்சிபானை இம்ரான் இரண்டு பேரை அனுப்புவார் என்று கூறியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அத்துரிகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் விசாரணைகளின் பின்னர் கொலைக்கு முன்னர் அவர்கள் தங்கியிருந்த அத்துரகிரிய வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9mm கைத்துப்பாக்கி மற்றும் KPI என குறிப்பிடப்பட்ட T-56 தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண தெற்குப் பொறுப்பதிகாரி கயங்க மாரப்பனவின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகின்றன.
Post a Comment