சஜித் மீது அபார நம்பிக்கை வைத்து, அவரை ஜனாதிபதியாக்குவதுதான் சாணக்கியமானது - ஹக்கீம்
"புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான தகுந்த தலைவராக சஜித் பிரேமதாச மீது அபார நம்பிக்கை வைத்து, கடந்த பல வருடங்களாக அவரோடு ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். பெரும்பான்மை மக்களுடன் சிறுபான்மை சமூத்தினரும் ஒற்றுமைப்பட்டு அவரை ஜனாதிபதியாக்குவதென்ற தெரிவைச் செய்துகொள்வதுதான் சாணக்கியமான விடயமாகும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அட்டாளைச்சேனையில்,செவ்வாய்க்கிழமை (27) இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் முன்கூட்டியே ஐக்கிய மக்கள் கூட்டமைப்போடு ஒன்றிணைந்திருக்கின்றோம். கடந்த தடவையும் சஜித் பிரேமதாசவுடைய ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் ஒன்றாக இருந்தோம். இந்தத் தேர்தலிலும் ஒன்றாக இருக்கின்றோம். அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தை நாங்கள் எங்களுடைய கைகளில் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியில் அந்தவியூகம் அமைய வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகின்றோம்.
இந்த அடிப்படையில் இவற்றையெல்லாம் சாதித்துக்;கொள்ளும் சந்தர்ப்பம் இது.
இந்த சந்தர்ப்பத்தில் சமத்துவத்துடன் இந்த மண்ணில் வாழ்கின்ற நமது மக்களுக்காக ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு தகுந்த ஒரு தலைவராக சஜித் பிரேமதாச மீது அபார நம்பிக்கை வைத்து,இந்த முயற்சியில் கடந்த பல வருடங்களாக அவரோடு ஒன்றிணைந்தது செயற்படுகின்றோம்.
தற்போதைய ஜனாதிபதியின் அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு தன்னுடைய வெற்றியில் நம்பிக்கை இல்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றன. அதற்கு ஏராளமான முன்னுதாரங்களை பார்த்திருக்கின்றோம்.
கடந்த மூன்று நான்கு மாதங்களாக அவருடைய சார்பில் பிறர் சொல்லுகின்ற விடயங்களும், அவராகப் பேசுகின்ற விடயங்களும், நீதிமன்றங்களில் வழக்குகளின் தீர்ப்புகளும் எல்லாமே அவருடைய அந்த ஜனாதிபதி கனவுக்கு எதிரான விடயங்களாகவே காணப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற முடியாதென்ற விடயம் துலாம்பரமாகத் தெரிகின்ற போது
அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது.
2005இல் அவரை வெற்றிபெற வைக்கவேண்டமென்ற பாரிய முயற்சியில் எல்லோருமாகச் சேர்ந்து ஈடுபட்டோம்.ஆனால், அது சாத்தியமாகவில்லை. அதற்குப்பிறகு எந்தத் தேர்தலிலும் அவர் வெற்றிபெறவில்லை.
தோற்றுப் போயிருந்த இப்படிப்பபட்ட ஒருவருக்கு லொத்தர் சீட்டு விழுந்தது போல்
எம்.பியாகி, பின்னர் ஜனாதிபதியாகும் வாய்ப்புக் கிடைத்தது.
இதேவேளை,மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது முன்னைய ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ,பொது ஜன பெரமுனை ஆட்சியாளர்கள் இவரை ஒரு கை பொம்மையாக வைத்து ஆட்சி செய்யலாம் என்ற நம்பிக்கையில் கொடுத்தபோது இப்பொழுது அவர்களது எம்.பிகளைக் கைப்பற்றி அவர்களுக்கும் அவர் துரோகம் இழைத்துள்ளார்.
தற்போது அவர்கள் தனியாகப் பயணிக்கின்றார்கள் . அவர்களின் தோல்வியும் மிக வெளிப்படையாகவே தெரிகின்றது.
ஆனால், ரணிலுக்குப் பின்னால் ஏனைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், குறிப்பாக பக்கத்து ஊரில் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் போயுள்ளார்.
அக்கரைப்பற்று மிக முக்கியமான படித்தவர்கள் இருக்கின்ற ஒர் ஊர். இந்த விஷயத்தை நுணுக்கமாகப் பார்க்கக் கூடிய ஊர். அவர்களும் இந்த விடயத்தில் மிகவும் கவனமாகத் தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார்.
Post a Comment