Header Ads



பல்டியடிப்புக்கு காரணம் கூறும் ரோஹித


தனது தாய் கூறியதன் காரணமாகவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவெடுத்தாக மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றனர்.


இவ்வாறான பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள பிரதான வேட்பாளர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.


எவ்வாறாயினும், நாடாளுமன்றில் பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளது.


கட்சியின் தீர்மானத்தை மீறும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.


எனினும், அந்தக் கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணிலை சந்தித்து, தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.


அதில் ஒருவரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பதாக நேற்று அறிவித்திருந்தார்.


தனது இந்த முடிவுக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


“என் அம்மாவுக்கு 87 வயது. மகனே, மிஸ்டர் மஹிந்தவை விட்டுவிட்டு வீட்டுக்கு வராதே என்று 2015ஆம் ஆண்டு அவர் சொல்லியிருந்தார்.


ஆனால் இந்த முறை, மகனே, போய் ரணிலை ஜனாதிபதியாக வெற்றிபெற செய்வதற்கான வேலையைச் செய்யுமாறு கூறினார். அதனால்தான் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.