கிளப் வசந்த படுகொலை - புதிய பல தகவல்கள் வெளியாகின
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட இருவர் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை கௌடான பிரதேசத்தில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளப் வசந்த கொல்லப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கேபிஐ என அடையாளம் காணப்பட்ட தோட்டாக்கள் போன்றே சந்தேகநபர்களிடம் இருந்து 12 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் வைத்து கிளப் வசந்த உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொலைச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும், இலங்கையிலிருந்து கொலைக்கு தலைமை தாங்கிய இருவரையும் பொலிஸாரால் கைது செய்ய முடியாத நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன தலைமையில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கிளப் வசந்தவைக் கொல்ல வந்த துப்பாக்கிச் சூடு நடத்திய சண்டி என்ற அஜித் ரோஹனவும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் அஹுங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சண்டி, முன்னாள் ராணுவ வீரர் என்பதுடன் 14வது லயன் படைப்பிரிவில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் முன்பு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
இதேவேளை, அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வீடு ஒன்றை வாடகைக்கு கொடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பேருந்தில் கதிர்காமத்திற்கு அழைத்துச் சென்றவர் என கூறப்படும் 29 வயதான வருண இந்திக்கடி சில்வா என்ற சங்கா என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவருக்கு தெஹிவளை கௌடான பிரதேசத்தில் தங்குமிடத்தை வழங்கிய 40 வயதுடைய மொஹமட் இக்பால் மொஹமட் இம்ரான் என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் 165, டி56 தோட்டாக்கள், 77, 9 மிமீ தோட்டாக்கள், 17 வகையான தோட்டாக்கள், 38 புள்ளி 8 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
T-56 துப்பாக்கி, ஒரு துப்பாக்கி, 1 பிஸ்டல் மகசீன், 9MM தோட்டாக்கள் மகசீன், 1 கைவிலங்கு, 2 சினோட் கேப்சூல்கள் மற்றும் 03 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Post a Comment