முஸ்லிம் நாடுகளுக்கு அடுத்தபடியாக, பலஸ்தீனத்திற்காக அதிகளவு குரல் கொடுத்தது இலங்கைதான்
''2019 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது முஸ்லிம் காங்கிரசும் மக்கள் காங்கிரசும் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தன. சமூக ஒற்றுமைக்காக நாம் அன்றை அரசுடன் இருந்தோம். முஸ்லிம்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்பட்ட போது அதற்கு எதிராக நாம் செயற்பட்ட போது ஹாபிஸ் நஸீர் அஹமடும் எம்முடன் இணைந்து செயற்பட்டார். அன்றைய பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் எமது நாட்டுக்கு வந்த போது அவருடன் கலந்துரையாடி தகனம் செய்வதை நிறுத்தி, 3000 பேரின் ஜனாசாக்களை உங்கள் பிரதேசத்தில அடங்கம் செய்து இந்த பிரச்சினையைத் தீர்க்க எம்மால் முடிந்தது.
நெருக்கடி நிலையில் நிதி அமைச்சைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில் 2022 இல் நிதி அமைச்சை நான் பொறுப்பேற்றேன். எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு ஜ.எம்.எப் அறிவித்த நிலையில் எதிர்க்கட்சி தலைவருடம் பேசி ஆட்சியை ஏற்குமாறு கோரும் படி அன்றைய ஜனாதிபதி கோட்டாபய என்னிடம் கேட்டார். சஜித் பிரேமதாஸவுடன் பேசிய போது, ஹர்ச டி சில்வாவுடன் பேசுமாறு சொன்னார். மத்திய வங்கி ஆளுநர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன் பேச வேண்டும் என்று ஹர்ஷ கோரியதற்கு அமைய அவர்களை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்க அனுப்பினேன். ஆட்சியை ஏற்பது மிகவும் கஷ்டமான விடயம் என்றும் இதனை ஏற்பவருக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவும் ஹர்ச டி சில்வா கூறினார். அவரது டுவிட்டர் தளத்திலும் இதனைப் பதிவிட்டிருந்தார். ஆனால் ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை தைரியமாக ஏற்றார். அது தான் தலைமைத்துவத்திற்கு அழகாகும். அதன் பின்னர் கேஸ், பெற்றோல் வரிசை முடிவுக்கு வந்தது. மருந்தை தடையின்றி வழங்கினோம். உரத்தை வழங்கினோம்.
2 வருடங்களில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதிக்கு நாம் வாக்களிக்க வேண்டுமா? இல்லையா? என்ற கேள்வி உங்கள் மத்தியில் இருக்கும்? முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதும் நாட்டைப் பற்றி சிந்தித்துச் செயற்படும் சமுதாயமாகும். நாட்டை கட்டியெழுப்பிய ஜனாதிபதிக்கு நாட்டை கையளிப்பதா? அல்லது அன்று ஏற்க மறுத்தவர்களுக்குப் பரீட்சார்த்தமாக கொடுப்பதா?
மலையகத்தில் உள்ள கட்சிகளில், ஒரு கட்சி அரசுடனும் ஒரு கட்சி எதிரணியடனும் இருக்கும். ஆனால் முஸ்லிம் கட்சிகளில் இரு கட்சிகளும் ஆளும் தரப்பில் தான் இருக்கும். மலையக அபிவிருத்திக்கான அமைச்சையோ கல்வி அமைச்சையோ மலையக கட்சிகள் கோருவார்கள். ஆனால் எமது முஸ்லிம் கட்சிகள் தமது நலனக்காக அமைச்சுப் பொறுப்பை கேட்பார்கள்.
கடந்த இரண்டு வருடங்களில் முஸ்லிம் நாடுகளுக்கு அடுத்தபடியாக பலஸ்தீன மக்களுக்கு அதிகளவு குரல் கொடுத்தது எமது நாடுதான். பலஸ்தீன மக்களுக்காக நிதியமொன்றை ஜனாதிபதி ஆரம்பித்தார். கடினமான நிலையிலும் கூட அந்த மக்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டிக் கொடுத்தோம். எதிர்காலத்தில் அங்கு ஒரு பாடசாலை கட்டுவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.'' என்றார்.
Post a Comment