அங்கஜன் பல்டியடிப்பு - சு.க. பதில் பொதுச் செயலாளரும் தாவினார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்களது ஆதரவினை வழங்கினர் .
சற்று முன்னர் ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யவுள்ளனர் .
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், 2013 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ,2015 இல் தேசியப் பட்டியல் உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றி வருகின்றார். அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளராகவும் செயலாற்றி வருகின்றார் .
சாரதி துஷ்மந்த மித்ரபால அவர்கள் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment