Header Ads



நாட்டு மக்கள் நீர்கொழும்பு பற்றி, நினைப்பது என்ன..? அநுரகுமார கூறிய விசயம்


- இஸ்மதுல் றஹுமான் -


    பழைய பாதையில் செல்வதா புதிய பாதைக்கு திரும்புவதா என்பதை செப்டம்பர் 21 ம் திகதிக்கு முடிவு செய்ய வேண்டும். அன்றைய தினம் முதல் முறையாக அரசாங்கத்தை அமைக்க நாம் தயாராகவுள்ளோம் என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நீர்கொழும்பு நகரில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது  தெரிவித்தார்.     அனுரகுமார அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 


தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக தேசிய நிரைவேற்றுக் குழுவை அமைத்து மாவட்டம், தொகுதி,வட்டாரம் என சபைகளை உருவாக்கி பல்வேறு துறை சார்ந்தவர்களை ஒன்றிணைத்து  கலந்துரையாடல்களை நடாத்தி கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிக்கான பாதையை நோக்கிச் செல்கிறோம்.


    நாம்  செப்டம்பர் 21ல்  முதல் முதலாக அரசாங்கத்தை அமைக்க தயாராகவுள்ளோம். ஏன் அப்படிச் சொல்வது இதற்கு முன்பு அமைக்கப்பட்டது அரசாங்கமல்ல. மஹிந்த, கோத்தா ஜனாதிபதி சகோதர்களான பசில், சமல் அமைச்சர், மகன் நாமல் உறவு மகன் சசேந்திர அமைச்சர்.நிபுன எம்பி, மைத்துனர் எயாலங்கா தலைவர் இன்னுமொரு மைத்துனர் சீசல் தலைவர், உறவினர் ரஷ்யா தூதுவர் இன்னொருவர் அமெரிக்கா தூதுவர். அரச பதவிகளை குடும்பத்தில் பகிர்ந்துகொண்டனர். அது அரசல்ல குடும்பம்.


   ரணில் ஜனாதிபதியானார். அவருக்கு பாராளுமன்றத்தில் யாருமில்லை. அவர் ஆலோசகர் பதவியை உருவாக்கினார். ருவன்,சாகல, அகில, ஆசு மாரசிங்க, ஹரீன், மனுஷ எல்லோரும் ஆலோசகர்கள். அரச வாகணம்,சம்பளம், பாதுகாப்பு மற்றும் சலுகைகள். இவர்களிடம் ஆலோசனை பெற ரணில் மடையனா?. ஆலோசனை பெற தன்னை விட அந்தந்த துறைகளில் அனுபவம் விவேகம் முதிர்ச்சி உள்ளவர்கள் நியமிக்க வேண்டும். அதுவும் அரசல்ல கும்பல். எமது நாட்டில் உருவானது ஒன்றோ குடும்பம் அல்லது கும்பல்.


    நாம் 21 திகதி முதன்முதலாக அரசாங்கம் ஒன்றை அமைக்கிறோம். அதில் அமைச்சர்கள் 25 பிரதி அமைச்சர்கள் 25. இராஜாங்க அமைச்சர்கள் இல்லை. ஒரே துறையுடன் தொடர்புடையவற்றை ஒன்றினைத்து அமைச்சை உருவாக்குவோம். விவசாயம் என்றால் அதில் காணி,நீர்பாசனம், கால்நடை எல்லாம் உட்படுத்தப்படும். விஞ்ஞான பூர்வமாக ஒன்றுசேர்க்கப்படும். இதற்குத்தான் அரசாங்கம் என்று சொல்வது.


    எனவே பழைய பாதையில் பயணிப்பதா? புதிய பாதைக்கு திரும்புவதா என்பதை முடிவு செய்யவேண்டும். இங்கு வந்திருப்பவர்கள் அதனையே உறுதிப்படுத்துகின்றன.


    அரச நிறுவனங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அன்றி அந்தந்த துறையில் நிபுனத்துவம் பெற்ற ஊழல் மோசடி அற்ற பொறுப்புக்கொடுக்கும் வேலையை கைவிடமாட்டார் கள் என்ற நம்பிக்கையுள்ள தைரியமானவர்களையே நியமிப்போம். அதுதான் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள முதலாவது வித்தியாசம்.


    நாட்டை கட்டம் கட்டமாக சீர்செய்ய முற்படும்போது எம்மை சாதாரண விமர்சனம் செய்ய முடியாதவர்கள் பொய்யான, தவறான, விகாரமடைந்த தகவல்களை கூறித் திரிகின்றனர்.


      புனிதத் தன்மையான ஆட்சியை வழிநடாத்தி நாட்டை செல்வந்த நாடாக மாற்றுவோம். எமது நாட்டை உலகில் எந்த நாடும் கணக்கெடுப்பதில்லை. கடனை செலுத்த முடியாத நாடு. உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த முடியாத ஜனாதபதி. குற்றச் செயல்களில் ஈடுபாடுள்ள நாடு.


      எம்மை சந்திக்க வரும் வெளிநாட்டு தூதுவர்கள் தொடர்பாக நாம் கூகலில் தேடிப்பார்த்து தகவல்களை பெற்றுக்கொண்டே பேச்சுவார்த்தைக்கு அமர்வோம். 


     எமது நாட்டு நகர அபிவிருத்தி அமைசசர் பிரசன்ன இங்கிலாந்து சென்று அங்குள்ள அமைச்சரை சந்திக்கும் போது அவர்கள் கூகலில் பார்த்தால்  4 வருடங்களுக்கு சரீர பிணை,25 கோடி அபராதம், 2 கோடி நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்பதைக் கண்டுகொள்வார்கள். அப்போது  அந்த நாட்டு அமைச்சர் சிந்திப்பார் பேச்சுவார்த்தையின் பின்னர் எப்படி உயிரை பாதுகாபபது என்று. எமது தலைவர்களை வெளிநாடுகள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொள்வதற்கு நம்பிக்கை வேண்டும்.


    தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ஜனாதிபதி குற்றவாளியானார். சந்திரிகா, மைத்திரி, மஹிந்த ஆகியோர்களும்  நீதிமன்றில் தண்டனைக்கு உள்ளானவர்கள். அப்படி என்றால் எந்த நாடுகள் எமது நாட்டை ஏற்றுக்கொள்ளும்.


     நாடு முன்னேற வேண்டுமானால் மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். எமது ஆட்சியாளர்கள் சட்டத்திற்குப் பயமில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியபோது ஜனாதிபதி கதிரையில் அமர முடியுமானால் யார் சட்டத்திற்கு பயப்படுவது. பாரிய மோசடி செய்து மத்திய வங்கியை கொள்ளையிட்டவர் ஜனாதபதி கதிரையில் உட்கார முடியுமானால் ஏன் சட்டத்திற்கு பயப்பட வேண்டும். குற்றம் செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.


      இலங்கையில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்வதுடன் விஷேடமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை சட்டத்திற்கு முன்பாக கொண்டுவந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திலாகும்.


   குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும்  அதனை செய்ய எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் சட்டதில் தப்ப முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.


    போதைப் பொருள் வியாபாரம் பாரியளவில் உள்ளன. நீர்கொழும்பு மக்கள் நீர்கொழும்பை பற்றி தெரிந்திருந்தாலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்கள் நிணைப்பது நீர்கொழும்பு "குடு புரம்" என்று.


    பிள்ளைகள் பிறந்த போது அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் போது மகிழ்ச்சி அடைந்த தாய்மார் பிள்ளைகள் குடு போதை பாவிப்பதனால் கண்ணீர் வடிக்கின்றனர்.


   போதைப்பொருளும் பாதல உலகமும் ஒன்றாக உள்ளன. அவர்கள் சுதந்திரமாக குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அமைப்பு ரீதியான குற்றச் செயல்களை நடாத்துகிறார்கள். 80 க்கு முன் குற்றம் செய்தவர்கள் துப்பாக்கிகளை அவர்களே தேடிக்கொண்டார்கள். முன்கோபம், வைராக்கியம் என்பதற்காக குற்றங்கள் இடம்பெற்றன. இன்று டுபாய் நாட்டிலிருந்து குற்றச் செயல்களை அமைப்பு ரீதியாக வழிநடாத்துகிறார்கள். சிறையில் இருந்துகொண்டு போதைப் பொருள் வியாபாரம் செய்கிறார்கள்.


    கோனவள சுனிலை ஜே ஆர் வழிநடாத்தினார். பிரேமதாஸவின் நிறைவேற்றுக் குழுவில் சொத்தி உபாலி இருந்தார். சந்திக்காவுடன் பெந்தகான சஞ்சீவ, சூரியவெவ வம்பட்டா மஹிந்தவுடன் சூலாபிட்டிய அமரே நாமலுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். குடு, பாதால உலகம் அரசியலுடன் தொடர்புபட்டுள்ளன.


   எமது பிள்ளைகளை மேலும் போதைக்கு உள்ளாக்குவதா?, இளைஞர்கள் பாதால கும்பலின் கொலையாளிகளாக மாற வேண்டுமா? எந்த ஒருவருக்கும் இந்த நிலை ஏற்பட இடமளிக்கக் கூடாது.


 எமது அரசில் போதைபொருள், பாதால உலகம் என்பவற்றை கட்டுப்படுத்துவோம் என்றார்.

No comments

Powered by Blogger.