Header Ads



சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால்..?


மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும், பொருளாதார கணக்கு தெரியாத தலைவர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க, அதனை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.


மக்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் சலுகைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தமக்கும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் எனவும் சுட்டிக்காட்டினார்.


ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் (29) நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 


"ஹம்பாந்தோட்டைக்கு இதற்கு முன்னர் வந்த போது எனது மேடையில் இப்போதிருக்கும் அமைச்சர்கள் இருக்கவில்லை. எமக்கு ஆதரவளித்த பலரை அன்று ஜே.வி.பி.யினர் கொன்றுவிட்டனர்.  


2022 ஆம் ஆண்டில் நான் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். அனுர, சஜித்திடம் உதவி கேட்டேன். அவர்கள் அனைவரும் என்னை வீழ்த்திவிட்டு செல்ல முற்பட்டனர். நாம் ஏற்படுத்திய நிலைத்தன்மையைப் பாதுகாக்கவே மீண்டும் போட்டியிடுகிறேன். 


அன்று நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி முற்றாகச் சரிந்து கிடந்தது. அன்று விவசாயிகளுக்கு உரம் தேவைப்பட்டது. அதனைப் பெற்றுக்கொடுக்க வழி செய்தேன். சுற்றாலாவைப் பலப்படுத்தினோம். அதற்கு உதவிகளை வழங்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். 


அதனால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 'அஸ்வெசும', 'உறுமய' திட்டங்களையும் செயற்படுத்தி, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம். அரச ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரித்தோம். அதற்கான நிதியை விவசாயிகளே தேடித்தந்தனர். 


எதிர்காலத்தில் கரும்பு உற்பத்திக்கும் நாம் உர மானியம் வழங்குவோம். நாட்டில் நிதி இருந்தால் மட்டுமே சலுகை வழங்க முடியும். எண் கணிதம் அறியாதவர்கள் இன்று ஜனாதிபதியாக முயற்சிக்கின்றனர்.  நாம் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம்.


நான்கு வருடங்கள் இளையோருக்கு தொழில் கிடைக்கவில்லை. 50 ஆயிரம் பேருக்கு விருப்பமான தொழில் கல்வி பயிலவும் நிதி நிவாரணம் வழங்குவோம்.  இதனைப் பார்த்து 10 இலட்சம் பேருக்கு தொழில் தருவோம் என்று சஜித் அணியினர் பொய் சொல்லுவார்கள். 


செப்டெம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டருக்கும் இருக்காது, துறைமுகமும் இருக்காது. தொழிற்சாலைகளும் வராது." என்று தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.