Header Ads



சஜித்திற்கு ஏன் ஆதரவளிக்கிறோம், ரணிலுக்கு ஏன் ஆதரவளிக்கவில்லை..?


கறைபடியாத கரங்களை அதிகமாகக்கொண்ட அணியை, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமைத்துவம் ஏற்று வழிநடத்துவதாலேயே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக, அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

 

நேற்றையதினம் (19) முசலி, கொண்டச்சியில் இடம்பெற்ற “ரிஷாட் பதியுதீன் வெற்றிக்கிண்ண” கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

 

“சஜித் பிரமேதாசவுக்கு எமது கட்சியின் ஆதரவை நல்குவதாக அறிவித்த பின்னர், முதன்முதலாக ஒரு பொது நிகழ்வில் பங்கேற்று உரையாற்றக் கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் நாம் ஏமாந்துவிடக் கூடாது. எமக்குள் எத்தகைய கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் சமூகத்தின் நன்மைகருதி, புத்திசாலித்தனமாக வாக்குகளைப் பிரயோகிக்கும் தருணம் இது. நாம்  மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்.

 

நான்கு வேட்பாளர்களுக்கிடையே தீவிரப் போட்டி நிலவுகின்றது. மூவரை நிராகரித்து, நாம் சஜித்துக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தமைக்கான காரணங்கள் பல உண்டு. கடந்த காலங்களைப் போன்று, எதிர்காலத்தில் இனவதப் பிசாசு தலையெடுத்து, சிறுபான்மைச் சமூகத்தை துவம்சம் செய்யக் கூடாது.

 

ஜனாஸாக்களை எரிக்கும் அரசியல் கலாசாரம் மீண்டும் உருவெடுக்கக் கூடாது. சகல சமூகங்களையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவரையே நாம் தெரிவுசெய்துள்ளோம். மையத்துக்கள் எரிந்துகொண்டிருந்தபோது, அமைச்சரவையில் பக்கவாத்தியம் இசைத்துக்கொண்டிருந்தவர்கள் ரணிலுடன் சேர்ந்துள்ளனர்.

 

கோட்டாவின் 20வது திருத்தம் 3/2 பங்கினால் நிறைவேற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தபோது, நமது சமூகத்தைச் சார்ந்த 6 உறுப்பினர்கள் ஆதரவளித்து, 144 என்ற எண்ணிக்கையிலிருந்த கோட்டாவின் அரசுக்கு 150 என்ற எண்ணிக்கையை பெற்றுக்கொள்ளச் செய்தனர். அவர்களும் இப்போது ரணிலின் அணியில் இணைந்து நமது சமூகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

 

கள்வர்களின் கூடாரத்தில் இருந்த பல முன்னாள் அமைச்சர்கள் ரணிலுடன் தற்போது இணைந்து, இனிப்பான கதைகளைப் பேசி சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை வசீகரிக்க முற்படுகின்றனர். எனவே, இந்த அணிக்கு நாம் வாக்களிக்க முடியுமா?

 

ஆயுதக் கலாசாரத்தைக் கையிலெடுத்து, இந்த நாட்டிலே ஜனநாயகத்தைக் கொலை செய்தவர்கள், இப்போது ஜனயாகம் பற்றி வாய்கிழியக் கத்துகின்றனர். இவர்களை நம்ப முடியுமா?

 

அபிவிருத்திக்கும் அற்ப விடயங்களுக்காகவும் நாம் ஏமாந்துவிடக் கூடாது. இது மக்கள் பணம். ஆட்சியாளர்களின் பணம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

 

இன்று சிறுபான்மைச் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பாலான சமூகத் தலைவர்கள் சஜித் அணியுடன் கைகோர்த்துள்ளனர். பிரமேதாச, மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைச் சமூக வாக்குகளால் வெற்றிபெற்றது போன்று, இம்முறையும் சஜித் பிரேமதாசவின் வெற்றி, சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகளாலேயே ஈடேறும் என்பதை மனதில் நிறுத்தி ஒற்றுமையுடன் வாக்களியுங்கள்” என்று கூறினார்.

 

இந்நிகழ்வில், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

No comments

Powered by Blogger.