என்னிடம் நாட்டை ஒப்படையுங்கள், சிறந்த எதிர்காலத்தை வழங்குவேன் - ரணில்
சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் பாதுகாத்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் வரிகளைக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என்றும், ஏற்றுமதித் துறையினருடன் பேச்சு நடத்தி, கிரமமாக இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே, சஜித்தும் அநுரவும் இன்று மக்களுக்கு அரசியல் வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும், பிள்ளைகளினதும், தங்களதும்எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
ஜா-எல நகரில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,
''நெருக்கடியான நேரத்தில் சஜித் பிரேமதாசவிற்கும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் நாட்டைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வரவில்லை. நாடும், பொருளாதாரமும் வீழ்ந்துவிட்டது. நாட்டை மீட்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நாம் அதனை மீட்டோம். கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. வட் வரியை அதிகரிக்கும் போது இது மிகவும் கடினமான தீர்மானம் என்பதை மக்களுக்கு கூறினோம். எம்மைத் திட்டினார்கள். ஆனால் மக்கள் பொறுத்துக் கொண்டனர். அது எனக்குப்போதும். இந்த கடினமான தீர்மானங்களை எடுத்தால் பொருளாதாரத்தை மீட்க முடியும் என்பதை அறிந்திருந்தோம். பொருளாதாரம் வலுப்படும் போது ரூபா வலுப்பெறும். ரூபா வலுப்பெறும் போது உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தக் காலத்தில் எடுத்த கடினமான தீர்மானங்களை எடுத்ததால் நாம் மீண்டு வந்தோம். இதனால் மக்களுக்கு அஸ்வெசும மூலம் நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்தது. இன்னும் எங்களிடம் பணம் இருப்பதால் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 ரூபாவாக வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அத்துடன் அடிப்படைச் சம்பளத்தை 55,000 ரூபாவாக நிர்ணயிக்கவும் தீர்மானித்துள்ளோம். பொருளாதாரம் வலுப்பெற்றுவருவதால் இவற்றை செய்ய முடிகின்றது. இதனை முன்னெடுத்துச் செல்ல ரூபாவை மேலும் வலுப்படுத்த வேண்டும். ரூபா வலுபெறும்போது எங்களுக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும். டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும். இதனைவிட குறைத்தால் ஏற்றுமதி துறையினருடன் நாம் பேச்சு நடத்த வேண்டும். இதனைக் கிரமாக குறைக்குமாறு சிலர் கூறுகின்றனர். தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஏனையோர் கூறுகின்றனர். ஏற்றுமதித்துறை பாதிக்காத வகையில் இதனை செய்ய வேண்டும். இவற்றையும் பாதுகாத்துக் கொண்டு நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டும்.
விவசாயத்தையும், மீன்பிடித்துறையும் மேம்படுத்த நிவாரணம் வழங்குவோம். நாட்டில் பிரச்சினை இருந்தால் நாம் பொருட்களின் விலையைக் குறைப்போம் என்று சிலர் கூறுகின்றனர். நிவாரணம் வழங்குவதாக கூறுகின்றனர். நான் அவ்வாறு கூறவில்லை. நாம் நிவாரணம் வழங்குவோம். அந்த நிவாரணங்கள் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். உற்பத்தியை அதிகரிக்கவே நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். சாதித்துக் காட்டியவர்கள் என்னுடன் இருக்கின்றனர். முடியாது என்றவர்கள் எதிரணியில் இருக்கின்றனர். அவர்கள் எங்களைத் திட்டுகின்றனர். வருமானத்தை அதிகரிப்பதைப் போலவே தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும். எமது திட்டத்தின்படி ஒரு லட்சம் சுய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோம். பணத்தைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் வழியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம். எங்களுக்கு சிறந்த திட்டமொன்று இருக்கிறது.
ஏனையோரின் வேலைத் திட்டத்தையும் ஆராய்ந்து பாருங்கள். 21ஆம் திகதி தேர்தல் முடிவுகளின்படி, 22ஆம் திகதி முதல் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறேன். அதன்பின்னர் நிறுத்த முடியாது. நான் பணியாற்ற ஆரம்பித்த பின்னர் எனது அமைச்சர்கள் இரவு பகல் பாராது பணியாற்ற வேண்டும். வரி வலையில் சிக்காத பலர் இருக்கின்றனர். அவர்கள் உள்வாங்கப்படுவார்கள். அதன்பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்த பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அடுத்த இரண்டு வருடங்களில் வரிச் சுமை குறைக்க முடியும். இந்த நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். ஆனால் இவற்றை செய்ய 5 - 10 வருடங்கள் செல்லும். நான் பொய்களைக் கூற தயார் இல்லை. தொலைக்காட்சியில் சஜித் பிரேமதாச கதைப்பதைப் பார்த்தேன். 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அவர் ஸ்மார்ட் வகுப்பறைகளைக் கொண்டுவருவதாக கூறுகிறார். உலகில் உள்ள 10 ஆயிரம் கோடிஸ்வரர்களை சந்தித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடசாலையை பொறுப்புக் கொடுப்பேன் என்கிறார். ருமேனியாவில் உள்ள கோடீஸ்வரர் ராகமயில் உள்ள பாடசாலையைப் பொறுப்பேற்பாரா என்று கேட்க விரும்புகிறேன். வீழ்ந்துகிடக்கும் ஆர்ஜன்டீனவில் உள்ள கோடிஸ்வரர் ஒருவர் இங்குள்ள பாடசாலையொன்றை பொறுப்பேற்பாரா? இவற்றை செய்ய முடியுமா? 10 ஆயிரம் பாடசாலைகளில் எத்தனை வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு இலட்சம் வகுப்பறைகள் என்று வைத்துக் கொண்டால் கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்கு சுமார் 20 லட்சம் ரூபாசெலவாகும். இதனை ஒருஈலட்சத்தால் பெருக்கி பாருங்கள். சஜித் பிரேமதாச சொன்னவுடன் உலகில் உள்ள பணக்காரர்கள் இங்கு படையெடுப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறான சிறுபிள்ளைத் தனமானவர்களுக்கு வாக்களிக்க முடியுமா? தூதரங்கள் ஊடாக இவற்றைக் கொண்டுவருவதாகக் கூறுகிறார். இல்லையெனில் தூதுவர்களை பதவி விலக்குவதாக கூறுகிறார். எங்களுக்கு 50 தூதரகங்கள்கூட இல்லை. இவ்வாறான நபர்களிடம் எப்படி நாட்டை நிர்வகிக்க முடியும். 2022ஆம் ஆண்டு ஏன் நாட்டைப் பொறுப்பேற்காது தப்பியோடியது ஏன் என்று தற்போது தெரிகிறது. அதனால் யார் உண்மையைப் பேசுகிறார்கள். யார் செயல்கள் மூலம் நிருபித்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.
இது எனது எதிர்காலம் அல்ல. இது உங்களின் எதிர்காலம். காலையில், எழுந்து வரிகளுக்குச் செல்வதா, நடக்கச் செல்வதா என்பதை தீர்மானியுங்கள். உரிய நேரத்தில் மருந்துகளை எடுப்பதா, மருந்துகள் இன்றி மரணிப்பதா என்பதை தீர்மானியுங்கள். மீண்டும் அந்த யுகத்திற்குச் செல்வதா என்பதை மட்டுமே கேட்கிறேன். எனவே, உங்களின் எதிர்காலம் குறித்தும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்தியுங்கள். என்னிடம் நாட்டை ஒப்படையுங்கள். நான் சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு வழங்குவேன். எனவே, செம்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.''என்றார்.
Post a Comment