Header Ads



அல்ஹம்துலில்லாஹ் எனது ஒரே அன்பு மகன் ஷஹீதாகி விட்டான்


- Mohamed Bin Ameen -

  

2004/5/14 வெள்ளியன்று அதிகாலை பஜ்ருடைய அதானில் "அல்லாஹூ அக்பர்" எனும் வார்த்தை ஒலிக்கும் போது இறைவன் எனக்கு ஓர் ஆண் குழந்தையை பரிசாக தந்தான்.


அவனை பெற்றெடுத்ததும் என் உள்ளத்தில் பயம் ஒன்று ஒட்டிக் கொண்டது எங்கே என் குழந்தையை தாதியர்கள் மாற்றி வைத்து விடுவார்களோ என்பதுதான். எனது குழந்தையை எனது குடும்ப உறவினரிடம் ஒப்படைக்குமாறு தாதியிடம் வேண்டிக் கொண்டேன் அவரும் எனது செயற்பாடுகளை சிறப்புடன் பார்த்தார்.


தற்போது முஹம்மத் கொஞ்சம் பெரியவனாக ஆகிவிட்டான். ஏனைய பிள்ளைகளுடன் சேர்ந்து பாதைகளில் அவனை விளையாட விட எனக்கு அச்சமாக இருந்தது. அதனால் அவனை வீட்டிலேயே வைத்திருந்தேன். ஆனாலும் அவனை தொடர்ச்சியாக வீட்டில் வைத்திருந்தால் என்ன நடக்குமோ என்றும் ஒரு பயம் எனது உள்ளத்தில் இருந்தது அதனால் அவனை பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட அனுமதித்தேன். எப்பொழுது அவன் வெளியில் சென்றாலும் மீண்டும் அவனை வீட்டுக்கு அழைத்து வருவேன். 


சிறிது நாட்களில் முஹம்மத் பாடசாலை செல்ல ஆரம்பித்துவிட்டான் மீண்டும் பயம் என்னை தொற்றிக் கொண்டது. அங்கு மோசமான பழக்கம் உள்ள பிள்ளைகளுடன் சேர்ந்து அவனும் கெட்டுப் போய்விடுவானோ என்ற பயம். அதே நேரம் சிசேரியன் சிகிச்சை மூலம் அவனுக்கு ஒரு சகோதரியும் பிறந்தாள். அவள் பிறந்து நாலாம் நாள் அவனது பாடசாலை பரீட்சையும் வருகிறது. எனது வலியெல்லாம் மறந்து அவனது பரீட்சைக்காக கற்றுக் கொடுத்தேன்.


அல்ஹம்துலில்லாஹ் முஹம்மத் தற்போது பெரியவன் ஆகிவிட்டான் பல்கலைக்கழகத்தில் நுழைந்து விட்டான். ஒவ்வொரு கட்டத்தையும் நல்ல முறையில் கற்றுத் தேர்ந்து தாண்டி வருகிறான்.


அவனின் மீதிருந்த அதீத அன்பினால் அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏழு மணிக்கு பல்கலைக்கழகம் செல்வதற்காக வெளியேறுகின்ற பொழுதும் கதவருகே வந்து நிற்பேன் அவன் அந்த இடத்தில் இருந்து மறையும் வரைக்கும் பார்த்துக் கொண்டு இருப்பேன். 


நல்ல பெறுபேற்றுடன் பல்கலைக்கழக முதல் வருடத்தை முடித்து விட்டான். இரண்டாம் வருடத்தில் இதை விட நல்ல பெறுபேறுகளை பெறுவேன் என்றும் கூறினான்.


ஆனாலும் என்னுடைய அன்பை விட இறைவன் அவன் மீது அதிக வைத்திருந்தான் போலும்  அவன் பக்கம் அழைத்துக் கொண்டான், ஷஹீதாக அவனை எடுத்துக் கொண்டான். இறுதி நாட்களில் அடிக்கடி ஒரு ஹதீதை சொல்லிக் கொண்டே இருப்பான் "யார் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறானோ அவனை அல்லாஹ்வும் சந்திக்க விரும்புகிறான்".


இறைவா நீ தந்த அருட்கொடையை நல்ல முறையில் பாதுகாத்து நீ விரும்புகின்ற முறையில் உன்னிடம் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.


அல்ஹம்துலில்லாஹ் எனது ஒரே அன்பு மகன் ஷஹீதாகி விட்டான். 💔💔💔


முஸ்னா ஜிப்ரீல்

கா* *ஸா வில் இருந்து

No comments

Powered by Blogger.