Header Ads



முஸ்லிம்களுடைய உரிமையை பாதுகாக்க நான் செயற்பட்டேன், தவளை அரசியலை முடிவுக்கு கொண்டு வருவேன்



மக்கள் அபிப்ராயத்துடன் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு ஒவ்வொரு பக்கமும் தாவிக் கொண்டிருக்கின்ற தவளை அரசியல்   முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டத்தை  கொண்டு வருவோம்.  


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 


சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர்  மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது. சிலர் மக்களின்  வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு  நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது, கோட்டாபய ராஜபக்சவுக்கு கையை உயர்த்தினார்கள்.  முஸ்லிம் மக்களுடைய கலாச்சார மற்றும்  மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர்   செயற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்தார்.


மதுபான சாலை அனுமதி பத்திரங்களுக்காகவும், வைன் ஸ்டோர்ஸ்களுக்காகவும் மக்கள் கொடுத்த வரங்களை விற்பனை செய்திருக்கின்றார்கள்.  ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம்  தாவுகின்ற  தவளை அரசியலுக்கு  முற்றுப்புள்ளி வைப்போம். தற்பொழுது காணப்படுகின்ற சட்டங்களை மேலும் வலுப்படுத்தி தமக்கான ஆதாயத்திற்காக,  கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு  முற்றுப்புள்ளி வைக்கப்படும்  என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் 21  ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில்   இன்று(27) மாலை அம்பாறை பொத்துவிலில் பெருந்திரளான  மக்கள் கூட்டத்தோடு வெற்றிகரமாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். 


எமது நாடு சுதந்திர நாடு என்றாலும்  மக்களுக்கான பொருளாதார சுதந்திரம்  இல்லாமல் போயிருக்கின்றது. எமது நாடு   இன மத ரீதியாக பிரிந்து காணப்பட்டாலும்  நாட்டு மக்கள் இன, மத, வகுப்பு வாதங்கள் இன்றி  21 ஆம் திகதியாகும் போது ஒன்றாக இணைந்து, தேசிய இனக்கத்தோடும்,  நல்லிணக்கத்தோடும், நட்புறவோடும்  ஒன்றுபட்ட  தாய் நாட்டைக் கட்டி எழுப்புவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார். 


🟩 தீர்மானம் மிக்க காலம் உருவாகி இருக்கிறது. 


நாடு பொருளாதாரப் பிடியில் சிக்கி மக்களின்  பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், தீர்மானமிக்க இந்நேரத்தில்  நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான  பொருளாதார நோக்கு  என்னிடம் இருக்கின்றது. திறமையானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியோடு இருப்பதனால், பாரிய வேலை திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். 


🟩காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு  காணி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை தாபிப்போம்.


பொத்துவில் மக்களின் காணி பிரச்சினைகளுக்கு நிச்சயமாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.  பால்  பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் நிலங்கள்  பெற்றுக் கொடுக்கப்படும். அதற்காக  ஜனாதிபதி காணி ஆணை குழு ஊடாக காணி பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சிக்தலைவர் தெரிவித்தார். 


🟩 ஹெட ஓயா திட்டத்தை ஆரம்பிப்போம்.


ஹெட ஓயா திட்டம் ஆரம்பிக்கப்படுவதோடு  அதன் ஊடாக ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் இந்தத் திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


🟩 மீண்டும் கம்உதாவ திட்டம் 


செப்டம்பர் 21 ஆம் திகதி வெற்றியின் பின்னர்  காணி இல்லாதவர்களுக்கு, காணி வழங்கி  வீடில்லாதவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் கம்உதாவ திட்டத்தை மீண்டும்  உருவாக்கும் யுகத்தை ஆரம்பிப்போம்.  வறுமையில் இருக்கிற மக்களை  வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான  வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.   அஸ்வெசும, ஜனசவிய, சமூர்த்தி ஆகிய திட்டங்களில் உள்ள சிறந்த விடயங்களை  உள்ளடக்கிய புதிய திட்டம் ஒன்றை  உள்வாங்கி, அதன் ஊடாக வறுமையை போக்குகின்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்து, 24 மாதங்களுக்கு 20000 ரூபா வீதம் வழங்கி வறுமையை ஒழிப்போம் என்று  எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.


பாலஸ்தீன மக்களுக்காக தாம்  முன் நிற்பதோடு, நல்லடக்கமா எரிப்பதா எனும் பிரச்சினையில் அழுத்தங்களை கொடுத்து செயற்பட்டவர்கள் முஸ்லிம் மக்களுக்கு   அதற்கான நஷ்ட ஈட்டை வழங்க வேண்டிய  சந்தர்ப்பம் ஏற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.