Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு நன்றி கூறவேண்டும் - ஹக்கீம்


"நாங்கள் ஆதரிக்கின்ற சஜித் பிரேமதாச என்ற தலைமையோடு தமிழ் மக்களும் கைகோர்க்க வேண்டும். முஸ்லிம்கள் மாத்திரமல்ல, தமிழர்களும்,சிங்களவர்களும் இணைந்து ,அவரின் வெற்றியின் பங்காளிகளாக வேண்டும்"

இவ்வாறுவேண்டுகோள் விடுத்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் .


சம்மாந்துறையில்,செவ்வாய்கிழமை (26) நடைபெற்ற, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட, ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை வினயமாக விடுப்பதாகக் கூறினார். 


 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,


 புதிய யுகத்துக்கு மக்களை அழைத்துச்செல்வதற்கான தலைமையொன்றை நமது நாடு நாடி நிற்கின்றது. இதற்கான தெரிவின்போது ஆரம்பத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் மிகத்  தெளிவாக சஜித் பிரேமதாசவுக்கு  ஆதரவளிக்க முன்வந்தது.


 அத்துடன், ஆதரவளித்த அன்றிலிருந்து இடையிடையே இந்த மாவட்டத்தில்  முஸ்லிம் காங்கிரஸ் அணி பிரிந்து, உள்ளகப் பிரச்சினை உருவாகிவிடும் என்றெல்லாம் கதையளந்து கொண்டிருந்தார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளுக்கு நன்றி கூறவேண்டும். அவர்களின்  மன உறுதி காரணமாக, சக கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எங்களது முடிவுடன் இணைந்து வந்துள்ளார்கள்.


 கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நான் போகும் போதும் குறிப்பாக சிங்கள பிரதேசங்களில் சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயப்படுத்தப்பட்டதாகவே தென்படுகின்றது.


இவ்வாறிருக்க, எமது தமிழ் சகோதரர்கள் கடந்த முறை அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற  பிரதிநிதித்துவத்தை இழந்தார்கள்.


 அதற்கான ஆசனத்தை அவர்கள் பெறவேண்டும். அதேவேளை, தமிழ் முஸ்லிம் மக்களிடமுள்ள முரண்பாடுகளைப் பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும். வெறும் இனவாதம் பேசி அல்லது கிறுக்குத்தனமாகப் பேசி அல்லது சவால் விடுத்துக் கொள்வதால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வைப்பெற்றுக் கொள்ள முடியாது. 


நாங்கள் ஆதரிக்கின்ற  தலைமையோடு தமிழ் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்ற வினயமான வேண்டுகோளை சம்மாந்துறை மண்ணிலிருந்து  விடுக்க விரும்புகின்றேன்.


 மட்டக்களப்பில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். அம்பாறையில் முஸ்லிம்களாகிய நாங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றோம். எங்கெங்கெல்லாம் பெரும்பான்மையாக வாழ்கின்றோமோ, அங்கெல்லாம் பெருந்தன்மையாகவும்  ,விட்டுக் கொடுப்புகளுடனும்  வாழ வேண்டும். குறிப்பாக சேதமில்லாத விட்டுக் கொடுப்புகளுக்கு முன்வரவேண்டும்.


 அதேநேரம் எல்லோரையும் சமத்துவமாக நடத்துகின்ற தேசிய தலைமையை ஒன்றிணைந்து தெரிவு செய்யவேண்டும். ஒன்றிணைந்த அந்த தெரிவு சஜித் பிரேமதாசவாக இருக்கவேண்டும்.  


 சஜித்தின் வெற்றியில் முஸ்லிம்கள் மாத்திரமல்ல, தமிழர்களும்,சிங்களவர்களும் இணைந்து ,அவரின் வெற்றியின் பங்காளிகளாக வேண்டும்.


இந்த மண்ணில் சமத்துவம், நீதி ,நேர்மையான அரசியல் தொடரவேண்டும். ஆளுக்காள்  பழிவாங்கும், குதர்க்கமாகப் பேசும் அரசியலைச் செய்யவேண்டிய அவசியமில்லை என்றார்.

No comments

Powered by Blogger.