தனது மரணத்தை அறிந்தது போல, அந்த பிஞ்சு மனசு சொன்ன வார்த்தை
கடந்த சனிக்கிழமை (17) மாலை ஏழு மணியளவில் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை வீதி பனிச்சங்கேணி பாலத்தடியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும் சப்றாஸ் மஹ்தி எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.
மஹ்தியின் தாயும், தந்தையும் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வறுமை காரணமாக மஹ்தியின் தாயார் மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்று பணிபுரிந்து விட்டு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே நாட்டுக்கு வந்துள்ளார்.
மஹ்திக்கு ஒரேயொரு சகோதரி. அவர் ஐந்தாம் தரத்தில் மஹ்தி கல்வி கற்கும் ஹிஜ்றா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
சிறுவயதில் இருந்து தாய், தந்தை அரவணைப்பின்றி பல்வேறு ஏக்கத்துடன் மஹ்தியும் அவரது சகோதரியும் தனது மூத்தம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.
மூத்தம்மா மிகுந்த கவனிப்புடன் மஹ்தியை வளர்த்து வந்தாலும் அந்த பிஞ்சு மனசுக்கு தாய், தந்தையரின் அரவணைப்பு தேவைப்பாடக இருந்துள்ளது.
தனது தாய் வெளிநாட்டில் வசிக்கும் போது மஹ்தி தாயுடன் தொலைபேசியில் உரையாடும் போது, ‘‘உம்மா நீங்க ஊருக்கு வாங்க, உம்மா நாங்க அநாதையாக கிடக்கம். சந்தோசமாக எங்கும் போக ஏலா, நீங்க ஊருக்கு வந்து எங்க கூட இருங்க’’ என அடிக்கடி கூறுவதாக குடும்பத்தார் கண்ணீருடன் தெரிவித்தனர்.
தனது பிள்ளைகளுடன் நாட்டுக்கு வந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் மஹ்தியின் தாயும் வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து விட்டு நாட்டுக்கு வந்துள்ளார்.
தொழுகை கடமை இல்லாத வயதாக இருந்தாலும் மஹ்தி பள்ளிவாசலோடு மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், தொழுகையை தவறாமல் பேணி வந்தவர் என்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மஹ்திக்கு சிறு காய்ச்சல் வந்தாலும் அவர் அல்லாஹ்வின் பக்கம் தனது நெருக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுவனாக வாழ்ந்து வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு சிறுவயதில் நல்லொழுக்கம் கொண்ட பேணுதலான ஒரு சிறுவனாகத்தான் மஹ்தி வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (16) பாடசாலைக்குச் சென்ற மஹ்தி அவரது வகுப்பாசிரியையிடம் ‘‘இனி நாம எப்பதான் சந்திக்கப் போகிறோமோ?’’ என்று கூறியுள்ளார்.
‘‘ஏன் சந்திக்கலாம் தானே’’ என்று ஆசிரியை சொன்னதற்கு ‘‘இல்லை டீச்சர் திங்கட்கிழமையும் ஸ்கூல் லீவு. இனி நாம சந்திப்பமோ தெரியா?’’ என்று தனது மரணத்தை அறிந்து வைத்தால் போல் அந்த பிஞ்சு மனசு சொன்ன வார்த்தையை அவரது ஆசிரியை நினைவுகூறியமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் நடந்த அன்று மஹ்தி தனது தாயாருடன் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ பனிச்சங்கேணி பிரதான வீதியில் பழுதடைந்து நின்றுள்ளது.
ஆட்டோ சாரதி ஆட்டோவை சரிபார்த்துக் கொண்டிருந்த போது ஆட்டோவில் பயணித்த அனைவரும் வீதியில் இறங்கி நின்றுள்ளனர்.
அந்த சமயம் மஹ்தியின் தாயார் வீதியின் மறுபக்கம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருக்கும் போது சிறுவன் மஹ்தி தனது தாயார் நின்ற பக்கம் வீதியை குறுக்கறுத்து ஓடிச் சென்றுள்ளார். அப்போதுதான் அவ் வீதியால் வேகமாக பயணித்த வேன் மஹ்தியை மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளது.
விபத்தில் மஹ்தியின் பின்பக்க தலைப்பகுதியில் அடிபட்டதில் சிறுவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த சிறுவன் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடலை நீண்ட நேரம் வைப்பதற்கு குளிரூட்டி இல்லாத காரணத்தால் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒரு நாள் முழுவதுமாக உடல் வைக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைகளின் பின்னர் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை (18) மாலை ஆறு மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரணமடைந்த மஹ்தியின் ஜனாஸா ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின்னர் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய வேனை அடையாளம் காண்பதற்காக பொலிஸாருடன் அகீல் எமர்ஜன்ஸி, அனர்த்த அவசர சேவைப் பிரிவு ஆகியவை இணைந்து கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய சாரதி வேனுடன் தலைமறைவாகியிருந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் திங்கட்கிழமை இரவு வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த சாரதியை பொலிஸார் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (20) ஆஜர்படுத்தினர்.
வாழைச்சேனை நீதிவான் சாரதியை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிறுவன் மஹ்தியின் திடீர் மரணம் அப்பிரதேசத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வீதிகளை கடக்கும்போது அவதானமாக இருக்க வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பாகும். குறிப்பாக சிறுவர்களை தமது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது பெரியவர்களின் பொறுப்பாகும்.
- Vidivelli -
- எச்.எம்.எம்.பர்ஸான் -
Post a Comment