Header Ads



ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மற்றும் 10 போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்துள்ளனர்.


இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.


தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்தில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து இது குறித்து தெரிவித்தனர்.


மீண்டும் எரிபொருள் வரிசை ஏற்படுவதைத் தாம் விரும்பவில்லை என சுட்டிக்காட்டிய போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதிகள், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாமல் தாம் எதிர்கொண்ட இன்னல்களை மறக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.


வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்க இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தைப் பாராட்டிய போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள், நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும்  சுட்டிக்காட்டினர்.


இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் உரிமையாளர் சங்கம், பொதுஜன பெரமுன பஸ் சங்கம், கொள்கலன் சங்கம், அலுவலக போக்குவரத்துச் சங்கம், அகில இலங்கை சாரதிகள் தொழிற்சங்கம், அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம், அகில இலங்கை பாடசாலை பஸ் சங்கம், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், தேசிய டெக்சி முச்சக்கரவண்டி தொழில் துறையினர் ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர்.


வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் ஆராய்ந்து விரைவான தீர்வுகளை வழங்குவதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் போக்குவரத்துத் துறைக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும், இந்நாட்டின் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த உள்ளக போக்குவரத்து முறையை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போக்குவரத்துத் துறையுடன் தற்போதுள்ள நிறுவனக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 


அதற்காக ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.


ஊடகப் பிரிவு

1 comment:

  1. මේවා ඔළු ගණන් කිරීම මිස අන් කිසිවක් නොවේ, මහජන මතය ඵ්කට සම්පූර්ණයෙන්ම වෙනස් ය.

    ReplyDelete

Powered by Blogger.