Header Ads



40 வருட ஏக்கம் - யார் இந்த அர்ஷத் நதீம்..?


பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், ஈட்டி எறிதலுக்கான இறுதிப் போட்டியில் பங்கேற்ற நாடுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம் பெற்றிருந்தது.


ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா இந்த முறை தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து, இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியை உறுதி செய்தார்.


2016ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார் அர்ஷத் நதீம். ஆனால் 2019ம் ஆண்டில் இருந்து இவரின் ஆட்டம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.


தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2016ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றார் அவர். அந்த போட்டி இந்தியாவின் குவாஹாட்டியில் நடைபெற்றது.


2018ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் வெண்கலம் வென்றார். அந்த ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் எட்டாவது இடம்தான் பிடித்தார்.


ஆனால் 2019ம் ஆண்டு நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகள் அவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. 86.29 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தகுதிச் சுற்றுக்கும் அவரால் முன்னேற முடிந்தது.


நேரடியாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தான் தடகள வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். சமீப காலங்களில், பாகிஸ்தான் தடகள வீரர்கள் 'வைல்ட் கார்ட் என்ட்ரி' மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.


ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், 84.62 மீட்டருக்கு அப்பால் அவரால் செல்ல இயலவில்லை. அந்த போட்டியில் அவர் ஐந்தாவது இடம்தான் பிடித்தார். ஆனால், தன்னை எதிர்த்து போட்டியிடும் போட்டியாளர்களுக்கு சவாலாக இருப்பதை அவர் உறுதி செய்தார்.


பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று தன்னுடைய கனவை நினைவாக்கியுள்ளார் அவர்.

No comments

Powered by Blogger.