Header Ads



ஆதரவிற்கு நன்றி 'கவலைப்பட வேண்டாம்' - 100 கூட்டங்களுக்கு தலைமை தாங்கும் பணியும் ஒப்படைப்பு


ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தில் இருந்து நீக்கும் தீர்மானம் சட்டப்படி செல்லுபடியாகும் என, உயர்நீதிமன்றத் தீர்ப்பு வழங்கிய சில நிமிடங்களிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த இருவரையும் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது அவர்கள் இருவரின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து 'கவலைப்பட வேண்டாம்' என வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தநிலையில், சஜித் பிரேமதாசவை விட்டு வெளியேறி நாட்டிற்காக உழைக்க தீர்மானித்த நிலையில், தலை நிமிர்ந்து வெளியேறுவதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.


இருவரும், அமைச்சுக்களில் இருந்து வெளியேறியமை குறித்து வருத்தமடைந்த விக்ரமசிங்க, அவர்களது கடின உழைப்பை பாராட்டுவதாகவும், தம்முடன் தொடர்ந்து இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.


இதனையடுத்து ஜனாதிபதியின் 100 பேரணிகளுக்கு தலைமை தாங்கும் பணியை, ரணில் விக்ரமசிங்க தம்மிடம் வழங்கியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்


ஹரின் மற்றும் மனுஷ ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலா, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.


காணி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், சுற்றுலாப் பருவத்தின் உச்சநிலை காரணமாக சுற்றுலாத்துறைக்கான ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.