நாங்கள் சேற்றுக்குழியை சுத்தம் செய்வோம், பல்டியடித்தால் பதவி பறிபோகும்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, அகில இலங்கை தாதியர் சங்கம் தேசிய மாநாட்டில் ஆற்றிய உரை
ஜனாதிபதித் தோ்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்படுகின்ற முதலாவது மாநாடு தான் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் மாநாடு. நீங்கள் எங்களுக்கு பாரிய நம்பிக்கையையும் தெம்பினையையும் வெற்றி பற்றிய உறுதிப்பாட்டினையும் கொடுத்திருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் பொதுவில் எல்லா விதத்திலும் நோய்வாய்ப்பட்டே இருக்கிறோம். எங்களுடைய பொருளாதாரம் எல்லா விதத்திலும் நோய்வாய்பட்டே இருக்கிறது. எங்களுடைய பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கிறதா? பொருளாதார சீரழிவு எல்லாத்துறைக்கும் பாய்ந்து சென்றுள்ளது. பொருளாதாரம் மாத்திரமன்றி தேசமும் நோயுற்ற தேசமாகவே மாறியிருக்கிறது. கடந்த வருடத்தில் ஒரு இலட்சத்து முப்பத்தேழாயிரமாக அமைந்த இறப்புகளின் எண்ணிக்கையில் அதாவது 80 வீதம் தொற்றா நோய்களாலேயே ஏற்பட்டிருக்கிறது. முப்பத்தைந்து வயதினைவிட குறைந்தவர்களில் 15 வீதமானவர்கள் நீரிழிவு நோயினாலும் 35 வீதத்திற்கு கிட்டிய எண்ணிக்கையுடையோர் இதய நோய்களினாலும் பீடிக்கப்பட்டுள்ளார்கள். அதாவது எங்களுடைய நாடு நோயுற்றுள்ளது. இளைஞர் தலைமுறையினர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். எல்லா விதத்திலும் நோய்வாய்ப்பட்ட நாடு, நோய்வாய்ப்பட்ட தேசம், நோய்வாய்ப்பட்ட பொருளாதாரமே இருக்கின்றது. இந்த நோயை குணப்படுத்த நீண்ட காலமாக பல்வேறு பரீட்சித்துப் பார்த்தல் வேலைகளை செய்து எமது நாட்டின் மக்கள் முயற்சிகளை செய்திருக்கிறார்கள். 76 வருடங்களாக இந்த நாடு அடைந்திருந்த நோய் நிலைமைக்கான மருந்தாக கெஹெலியவின் மருந்தே தெரிவு செய்யப்பட்டுள்ளது. குணமாவதற்கு பதிலாக நோயை அதிகரிக்கின்ற மருந்தாகும். கண்ணில் ஏதாவது கோளாறு இருக்குமானால் அதற்காக அனுமதிக்கப்படுகின்ற ஒருவர் மருந்து அடிக்கப்பட்ட பின்னர் முழுமையாக பார்வையை இழக்கிறார். அதுதான் கெஹெலியவின் மருந்து. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக புதிய மருந்தொன்று எங்கள் நாட்டுக்கு அவசியமாகின்றது. உங்களுக்கு தெரியும் ஒரே மருந்தை நீண்ட காலமாக பாவித்தால் நோய் குணமாக மாட்டாது. அந்த மருந்து நோய்க்கு பழக்கப்பட்டதாக அமைந்து விடுகிறது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான புதிய மருந்தொன்று எமது நாட்டுக்கு அவசியமாகிறது. அதனால் புதிய திசையை நோக்கி இந்த நாட்டை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. அந்த பாதையில் பயணிப்போம் என்ற முன்மொழிவினை செய்யவே நாங்கள் உங்களை அழைத்திருக்கிறோம்.
எங்களுக்கு நல்ல மருந்துகள் இருந்தாலும் தீயமருந்தினை ஏன் தெரிவு செய்ய நேரிட்டது? அது தான் அந்தத்தருணத்தின் நிலைமை. எங்களுக்கு விருப்பமிருந்தாலும் எவ்வளவுதான் தேவை இருந்தாலும் அவ்வாறான வெற்றிக்கு அவசியமான சமூக சுற்றுச்சுழல் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. எங்களுடைய விருப்பத்திற்காக இவ்வாறான மாற்றம் ஏற்படப்போவதில்லை. சமூக மாற்றத்திற்காக மேலே இருக்கின்ற நெருக்கடியும் கீழேயிருக்கின்ற நெருக்கடியும் முதிர்ச்சியடைய வேண்டும். மேலே உள்ள நெருக்கடி என்பது ஆட்சிக்குழுக்கள் தொடர்ந்தும் வழமையான வகையில் தமது ஆட்சியதிகாரத்தை பேணிவர முடியாமல் போனதேயாகும். தோ்தல் வரலாற்றில் இன்றளவிலே ஐக்கிய தேசிய கட்சி வாக்குச் சீட்டில் கிடையாது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கீழே உருவாகியுள்ள நெருக்கடி என்னவென்றால் மக்களால் தொடர்ந்தும் வழமைபோல் தமது வாழ்க்கையை தொடர முடியாமையாகும். அவர்களுக்கு வழமைபோல் உணவைப் பெற்றுக்கொள்ள, மருந்தினை கொள்வனவு செய்ய முடியாது. பிள்ளைக்கு கல்வியை வழங்க முடியாதுள்ளது. அதாவது சமூக புரட்சியொன்றுக்கு யுகமாற்றமொன்றுக்கு அவசியமான சுற்றுச்சூழல் உருவாகியிருக்கிறது.
அந்தச் சுற்றுச்சூழலை மிகவும் சிறப்பாக முகாமை செய்து எம்மால் அதிகாரத்தை கையிலெடுக்க முடியுமா? முடியாதா? என்கின்ற பிரச்சினை தோன்றியுள்ளது. நோயுற்ற இந்த தேசத்தை நோயுற்ற இந்த நாட்டை நாங்கள் மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும். இவ்வாறான கவலைக்கிடமான நிலைமைக்கு தள்ளிவிட்டதற்கும், எமது பொருளாதாரத்தை நோய்க் கட்டிலில் தள்ளிவிட்டதற்கும், எமது தேசத்தை குற்றச் செயல்களும் போதைப்பொருட்களும் மலிந்து போயுள்ள நாடாக மாறியதற்கும் சட்டத்தின் ஆட்சி சீரழிந்த நாடாக மாறியதற்கும் பொருளாதாரம் சீரழிந்தற்கும் காரணமாக அமைந்தது ஒரு வைரஸ் ஆகும். எங்களுடைய அரசியல் மீது பரவிய அழிவுமிக்க அரசியல் வைரஸ் ஒன்று இருக்கிறது. ஊழல், மோசடி, விரயம், குற்றச் செயல்கள் சட்டத்திற்கு மேலாக இருத்தல் போன்ற விடயங்களால் நிரம்பிய அரசியல் வைரஸ் ஒன்று இருக்கிறது. இந்த அரசியல் வைரஸை முற்றாகவே ஒழித்துக் கட்டக்கூடிய மருந்தினைக் கொடுக்க வேண்டும். அதைபோலவே பொருளாதாரத்துறையில் பரவியுள்ள ஒரு விதமான வைரசும் இருக்கிறது. கடன் எடுத்தல், விற்பனை செய்தல், தூரநோக்குடனான பொருளாதாரத்தை நெறிப்படுத்த தவறியமை முதலியவை காரணமாக பொருளாதாரம் நோய்வாய்ப்பட்டுள்ளது. இவை இரண்டையும் குணப்படுத்தக்கூடிய மருந்தினை நாங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
தமது கைக்கு கிடைக்கின்ற அதிகாரத்தை செல்வத்தை திரட்டுவதற்கான ஒரே குறிக்கோளாக மாற்றிக் கொண்ட கலாச்சாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இந்த அரசியல் கலாச்சாரத்திற்கு பதிலாக புதிய அரசியல் கலாச்சாரமொன்றை உருவாக்கி அரசியல் துறையை முற்றாகவே குணப்படுத்துவோம் என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறோம். சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள் எனில் குற்றச் செயல் புரிந்து தூக்குத்தண்டனைக்கு இலக்காக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்தில் அமைச்சர் பதவியை வகிக்க முடியாது. அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது. எமது நாட்டில் பணமும் பலமும் படைத்தவருக்கு ஒரு சட்டமும் வறிய பலவீனமானவர்களுக்கு இன்னுமொரு சட்டமும் அமுலில் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியை சோ்ந்த நாங்கள் சட்டத்திற்கு மேலாக இருப்பவர்களல்ல. நாங்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்களே. அதைபோலவே எமது முன்னிலையில் இருப்பது பிளவுபட்ட ஒரு நாடாகும். முரண்பாடுகள் ஏற்பட்ட ஒரு நாடாகும். அதற்கு பதிலாக இலங்கையில் தேசிய ஒற்றுமையின் தேசமொன்றை உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியல் பணியாகும். தேசிய மக்கள் சக்தி அந்தப் பணியை செய்யும். அரசியல் அதிகாரத்தை நெறிப்படுத்துகின்ற கேந்திர நிலையம்தான் பாராளுமன்றம். சட்டத்தையும் சம்பிரதாயத்தையும் தனது நோக்கங்களுக்காக பாவிக்கின்ற சபாநாயகர் ஒருவர். ஆபாசமான வார்த்தைகளை கூறி மகிழ்ச்சியடைகின்ற சிறுப்பிள்ளைத்தனமான மனநிலையைக் கொண்ட பாராளுமன்றமாகும். நாங்கள் இந்த சேற்றுக்குழியை சுத்தம் செய்வோம். கட்சி தாவினால் உறுப்பினர் பதவி பறிபோகின்ற நெறிமுறைகளுக்கு கட்டுப்படுகின்ற சட்டங்களை உருவாக்குவோம். எமது பொருளாதாரத்தில் எமக்கு புலப்படுகின்ற நோய் அறிகுறிகள் வைத்தியசாலைகளில் மருந்து கிடையாது, அவசியமான பணியாளர்கள் இல்லை, தொழில்வாண்மையாளர்கள் நாட்டை விட்டு வெளியே போகிறார்கள். இது நாங்கள் நோயைக் காண்கின்ற விதம். நோய்க்கான காரணம் தான் உலகில் ஏற்படுகின்ற நிலைமைக்கு நேரொத்ததாக அமையத்தக்க பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள நாங்கள் தவறியமையாகும்.
நாங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றில் உலகில் ஏற்படுகின்ற மாற்றங்களை நன்கு உறிஞ்சி எடுத்து முன்னேற்றமடைந்த பண்டங்கள் மற்றும் சேவை உற்பத்திகளால் உலக சந்தையில் ஒரு பங்கினை அடைந்து கொள்வதற்கான திட்டமொன்றை வகுத்திருக்கிறோம். எங்களுக்கு பல துறைகள் இருக்கின்றன. அதற்கு மிகவும் அவசியமான விடயம் தான் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினை முன்னேற்றுவது. எதிர்காலத்தில் உலகத்தை ஆளப்போவது மிக அதிகமான தொழில்நுட்பத்தின் சொந்தக்காராவார். ஒரு காலத்திலே மிக அதிகமான கப்பற்துறை அதிகாரத்தை கொண்டிருந்தவர் உலகத்தை ஆட்சி செய்தார். அவர்தான் யுத்த பலம் கொண்டிருந்தவர். மற்றுமொரு காலத்தில் அதிக பண பலம் படைத்தவர் ஆட்சி செய்தார்கள். இன்று உலகத்தை ஆட்சி செய்பவர்கள் அதிக தொழில்நுட்ப பலத்தை கொண்டவர்களாவர்.
இதன் இறுதி விளைவாக அமைய வேண்டியது என்ன? பிரஜைக்கு நல்லதொரு வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதாகும். ஒவ்வொரு பிரஜைக்கும் அறிவினைக் கொண்ட கல்வி, ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்ட சுகாதாரம், மனநிம்மதி, கலையும் இலக்கியமும், தாக்குப்பிடிக்கக்கூடிய பலத்தை பெற்றுக்கொடுக்கின்ற விளையாட்டுத்துறையை கொண்ட புதிய மானிட பரம்பரையொன்று எமக்கு அவசியமாகும். அதைபோலவே எந்தவொரு தொழிலிலும் ஈடுபடுபவர்களுக்கு தான் புரிகின்ற தொழிலுக்கு உரிய பெறுமதியை வழங்கி தொழில் புரிபவருக்கு புதிய வாழ்க்கையொன்றை வழங்கி அனுபவிப்பதற்கான இடவசதியை பெற்றுக்கொடுப்போம். எமது நாட்டின் பெருந்தொகையானோர் மன அழுத்தத்தினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு நாடு என்ற வகையில் முன்னேறிச் செல்வதற்கான தொழில்வாண்மையாளர்கள் அவசியமாகின்றனர். அவர்களின் கல்வி மட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டும். உலகின் மிகவும் உயர்ந்த மட்டத்தில் நிலவிய ஆரம்ப பட்டப்படிப்பு இன்று சாதாரண கல்வி மட்டம்வரை வந்து விட்டது. இன்று கல்வியின் அதியுயர் மட்டத்திலிருந்திருப்பது பட்டப்பின்படிப்பாகும். புதிய ஆராய்ச்சிகள் பட்டப்பின்படிப்புக்குள்ளே இடம்பெறுகின்றன. ஆரம்ப பட்டம் என்பது அடிப்படை கோட்பாடுகளாகும். அந்த கோட்பாடுகளை பாவனைக்கு எடுக்கும்போது புதிய திசைக்கு ஆற்றுப்படுத்தப்படுவது பட்டப்பின்னிலை மட்டத்திலாகும். எமது நாட்டில் கல்வி மட்டம் ஆரம்ப பட்டப்படிப்பு மட்டத்திலிருந்து பட்டப்பின் படிப்பு மட்டம்வரை விருத்தி செய்யப்பட வேண்டும். தாதியர் சேவைக்கு ஆரம்ப பட்டமொன்றுக்கூட இல்லாத நிலைக்குள் நாங்கள் அதற்கு அப்பால் உயர் கல்விக்கு வழிப்படுத்துகின்ற புதிய தாதியர் சேவையை ஆரம்பிப்போம். உலகம் புதிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவை எல்லாமே பட்டப்பின்படிப்பு நிறுவனங்களிலேயே இடம்பெறுகிறது. அப்படியில்லாமல் ஆரம்ப பட்டப்படிப்பில் புதியவை இடம்பெறுவதில்லை. எங்களுடைய நாட்டில் முழு நேர பட்டப்பின்படிப்பு நிறுவனமொன்று கிடையாது. தேசிய மக்கள் சக்தியைச் சோ்ந்த நாங்கள் இந்த கல்வி அடுக்கினை மேலும் உயர்வான மட்டத்திற்கு கொண்டுவரவேண்டுமானால் முழுநேர பட்டப்பின்படிப்பு நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கிறோம்.
அதைப்போலவே பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய வணிக வளங்கள் எம்மிடம் கிடையாது. எனினும் எமக்கு மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியில் மிகப்பெரிய தோற்றுவாய் இருக்கிறது. 2030 அளவில் உலகில் எண்ணெய்க்கான கேள்வி உச்சகட்டத்தை அடையுமென புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2030 இன் பின்னர் கேள்வி குறையத்தொடங்கும். 2050 அளவில் உலகின் வலுச்சக்திகளின் வழங்கலில் 65 வீதம் தொடக்கம் 85 வீதம் மீளப்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி துறையிலிருந்து வழங்கப்படும். எங்களுக்கு அந்த இடத்தில் சாத்திய வளமொன்று நிலவுகின்றது. எமது நாட்டின் இடஅமைவு, வளங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்ட பொருளாதாரத் திட்டமொன்று எம்மிடம் இருக்கவேண்டும். அதைப்போலவே எமது நாட்டில் பாரிய சனத்தொகை அடர்த்தி நிலவுகிறது. ஒரு சதுர கிலோ மீற்றரில் அண்ணளவாக 343 போ் இருக்கிறார்கள். எமது மனித வளத்தை நாட்டின் வளமாக மாற்றிக்கொள்ள வேண்டும். உலகில் இரண்டு விதமான சந்தைகள் இருக்கின்றன. ஒன்று பண்டங்கள் சந்தை. இரண்டாவது உழைப்புச் சந்தை. நாங்கள் உலகின் உழைப்புச் சந்தையில் மிகவும் ஆரம்ப மட்ட உழைப்புச் சந்தையையே கைப்பற்றியிருக்கிறோம். 2017 இல் 303,000 போ் வெளிநாட்டுத் தொழில்களுக்காக சென்றுள்ளபோதிலும் தொழில்சார் வேலைகளுக்காக 6000 போ் மாத்திரமே சென்றிருக்கிறார்கள். நாங்கள் உலகில் முன்னேறிச் செல்லவேண்டுமானால் முன்னேற்றமடைந்த உழைப்புச் சந்தையில் ஒரு பங்கினை கைப்பற்றிக் கொள்ள வேண்டும். அதன்போது தாதியர் தொழிற்துறையானது உலகில் மிகவும் முன்னேற்றமடைந்த சந்தையில் ஒரு பங்கினை கைப்பற்றிக்கொள்ளக்கூடிய துறையாகும். அது எங்களுடைய பொருளாதார வளர்ச்சியின் பாதையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழில்வாண்மையாளர்களின் சிறப்புரிமை, தொழில்களின் பாதுகாப்பு பற்றி சிந்திக்கவேண்டும். இன்று உலகில் 10,000 பேருக்கு 37 தாதியர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் 10,000 பேருக்கு 17 தாதியர்தான் இருக்கிறார்கள். நாங்கள் மேலும் முன்னேற வேண்டியிருக்கிறது. தற்போது 32,000 போ் வரை வேலை செய்கிறார்கள். பெருந்தொகையான வெற்றிடங்கள் நிலவுகின்றன. எங்களுடைய கல்வித்துறையிலும் சுகாதாரத்துறையின் வெற்றிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யவும் புதிய பதவியணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். புதிய நிலமைகளுக்கு ஒத்துவரக்கூடிய வகையில் பதவியணியை சீராக்கவேண்டும். எந்தவொரு தொழிலும் ஈடுபடுபவருக்கு தொழிலில் மனநிறைவு இருக்க வேண்டும். ஒன்று சட்டபூர்வமாகவும் மற்றையது வேலை செய்வதாகவும் அமையவேண்டும். சட்டரீதியான மனநிறைவு சேவை பிரமாணத்திலிருந்தே கிடைக்கின்றது. நாங்கள் உங்களுடன் கலந்து பேசி சேவைப்பிரமாணக் குறிப்பில் உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்போம். கிடைக்கின்ற சம்பளம் தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த போதுமானதாக அமையவேண்டும். 2021 உடன் ஒப்பிடுகையில் இன்றைய சம்பளம் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது. அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கிணங்க சம்பளம் சீராக்கப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமொன்றின் கீழ் நாங்கள் அதனை ஈடேற்றுவோம். சுகாதார சேவை அல்லது தாதியர் சேவை இருக்கின்றதென்பதால் மாத்திரம் சுகாதாரத்துறை வெற்றிகரமானதாக அமைய மாட்டாது. ஏனைய எல்லாத்துறையையும் விட சுகாதாரத்துறை கூட்டு முயற்சியை வேண்டி நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஈடுபட்டுள்ள தொழில் புரிவோருக்கு மக்களை குணப்படுத்துகின்ற பணியே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எமது நாட்டை ஆரோக்கியமான தேசமாக மாற்றுவதற்கு கூட்டு மனப்பான்மையுடன் ஒன்று சோ்ந்து உழைப்போம்.
வரலாற்றில் நாடு தவறிழைத்த பல இடங்கள் இருக்கின்றன. அந்த இடங்களை நன்றாக கற்றாராய்ந்து வெகுவேகமாக மாற்றியமைத்து இந்த நாட்டை புதிய மாற்றத்தை நோக்கி வழிப்படுத்துவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்று சோ்வோம்.
Post a Comment