செல்போனால் பறிபோன உயிர்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (36). இவர் தனியார் வங்கி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்தார்.
பரமக்குடியைச் சேர்ந்த இவரது நண்பரான பாண்டியை அழைத்துக் கொண்டு கடந்த ஜூலை 21-ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு புத்தாடைகள் வாங்க சென்றுள்ளார். அன்று பிற்பகல் ஆடைகளை வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
''மதுரையில் இருந்து பரமக்குடியை நோக்கி, கமுதக்குடி அருகே சென்று கொண்டு இருந்தபோது, ரஜினி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ரஜினியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்'' என பரமக்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வண்டியில் அவர் பின்னால் அமர்ந்து பயணித்து வந்த பாண்டியின் தலையில் காயம் ஏற்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ரஜினியின் சகோதரர் பி. பாலா,"எனது அண்ணன் 10 மாதங்களுக்கு முன்பாக 9,500 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கினார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது செல்போன் வெடித்த அதிர்ச்சியில், சாலை தடுப்பில் மோதி உயிரிழந்தார். செல்போன் எப்படி வெடித்தது என்று தெரியவில்லை," என்று கூறினார்.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த முதியவர் ப்ளுடூத் ஹெட்போன் அணிந்து பாட்டு கேட்ட போது, ஹெட்போன் வெடித்ததில் அவர் காதில் பலத்த காயம் ஏற்பட்டது. BBC
Post a Comment