ரணிலை போல அரசியலமைப்பினை மீறிய, தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை
நிகழ்கால அரசாங்கம் அரசிலமைப்பினை அடிப்படையாகக்கொண்டு சமூகத்தில் ஐயப்பாட்டினை உருவாக்க முனைந்து வருகின்றது. இந்த ஐயப்பாட்டின் மூலாரம்பம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா, ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல். இந்த ஐந்தா, ஆறா என்கின்ற உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட உரையாடலாகும். அதனை மீண்டும் களத்திற்கு கொண்டுவந்தவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். எந்நேரமும் ஐயப்பாட்டுடன் வாழ்கின்ற ரணில் விக்கிரமசிங்க அதனை சமூகமயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.
ஐந்து வருடங்களா ஆறு வருடங்களா என்கின்ற உரையாடல் முதன்முதலில் 19 ஆவது திருத்தம் உயர்நீதிமன்றத்திற்கு வந்தவேளையிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அந்த உரையாடல் உயர்நீதிமன்றத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனை மீண்டும் மைத்திரிபால சிறிசேன கிளப்பினார். அவருடைய பதவிக்காலம் நிறைவடைய அண்மித்துக்கொண்டு இருக்கையில் தன்னால் ஆறு வருடங்கள் இருக்க முடியுமா என்பது பற்றிய அபிப்பிராயத்தை உயர்நீதிமன்றத்திடம் வினவினார். உயர்நீதிமன்றம் அந்த பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என வெளிப்படுத்தியது. அதன் பின்னர் லெனவ என்பவர் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சேபனை தெரிவித்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே உயர்நீதிமன்றம் ஐந்து வருடங்களென தீர்ப்பளித்து ஒரு இலட்சம் ரூபா வழக்குக்கட்டணத்தை செலுத்துமாறு கட்டளையிட்டது. அதன் பின்னர் ஒரு சட்டத்தரணியைக்கொண்டு இந்த கேள்வியை மீண்டும் கேட்டார்கள். அவர்மீது ஐந்து இலட்சம் ரூபா வழக்குக் கட்டணம் விதிக்கப்பட்டு ஐந்து வருடங்களே என தெளிவுபடுத்தப்பட்டது. இன்றளவில் ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்பின் 30 (2) உறுப்புரையின்படியும் உப பிரிவுகளின்படியும் ஐந்து வருடங்களே என்பது எமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில் நீதியமைச்சர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். அவரே, "இதனை நாங்கள் ஜனாதிபதி தேர்தலுக்குள் கொண்டுவர மாட்டோம், அதனை முன்னெடுத்துச் செல்லவேண்டாம்" என அவருடைய செயலாளருக்கு அறிவித்ததாகக் கூறினார். அவ்வாறு கூறியிருக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் தனிக்கடதாசியில் வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். மக்கள் தீர்ப்பிற்குச் செல்வதா, அதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு தடையேதும் ஏற்படுமா என்ற விடயத்தின் அடிப்படையில் தற்போது சமூகத்தில் மீண்டும் ஓர் ஐயப்பாட்டினை உருவாக்கி வருகிறார்கள். இந்த வர்த்தமானியில் இருப்பது இரண்டு பதங்களுக்கிடையிலான போட்டியாகும். ஒரு பிரிவில் கூறப்படுகின்றது "ஆறு வருடங்களை விஞ்சியதாக" எனப்படுகின்ற பதங்களை "ஐந்து வருடங்கள் வரை" என்பதாக மாற்றப்படுவதாகும். இந்த இரண்டு பதங்களுக்காக 1000 கோடி ரூபா பணத்தைச் செலவிட ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்க்கிறார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பணமில்லை எனக்கூறி ரணில் விக்கிரமசிங்க முழுமையாகவே சுருக்கிக்கொண்டது எமக்கு ஞாபகம் இருக்கிறது. இன்று வெளிநாடு சென்றுள்ள உழைப்பாளிகளினதும் ஏற்றுமதி வருமானத்தையும் அடிப்படையாகக்கொண்டு கடன் மறுசீரமைப்பிற்குள்ளே சிரமத்துடன் பேணி வருகிறார். இது ஜனாதிபதித் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ள தருணமாகும். தயவுசெய்து சீக்கிரமாக இந்த சிக்கலைத் தீர்த்துவைக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறுகிறோம். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்ற தினத்தையும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற திகதியையும் உடனடியாக வெளிப்படுத்துங்கள். இனிமேலும் காலம்தாழ்த்தாமல் இந்த திகதியை அறிவிப்பதன் மூலமாக இந்த நிலைவமையை ஓரளவிற்கு தணிக்கலாம். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதை ரணில் விக்கிரமசிங்கவின் தில்லுமுல்லுகளால் நிறுத்திவிட முடியாது. இந்த வர்த்தமானப் பத்திகை சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதன் பின்னர் பொதுமக்களுக்கு மனுக்களை சமர்ப்பிக்க இரண்டுவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். உயர்நீதிமன்றம் மனுவினை ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க மேலுமொரு வாரம் தேவை. பாராளுமன்றத்தில் விவாதத்திற்கான திகதியைக் குறிக்க மேலும் ஒரு வாரம் வரை எடுக்கும். அந்த விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்று ஜனாதிபதி தன்னுடைய கையொப்பத்தை இடவேண்டும். இது மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டுமென உயர்நீமன்றம் தீர்மானித்தால் அதற்கு ஜனாதிபதி கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்டு ஒரு மாதத்திற்குள் மக்கள் தீர்ப்பிற்கான அழைப்பு விடுக்கவேண்டும்.
இந்த செயற்பாங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாங்கு நின்றுவிட மாட்டாது. இந்த நாடு சிரமத்துடன் கழித்துவருகின்ற காலமே இது. தமது அசிங்கமான அயோக்கியத்தனமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்காகவே உயர்நீதிமன்றம் தீர்த்துவைத்த விடயமொன்று மீண்டும் களமிறக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப்போல் அரசியலமைப்பினை மீறிய தலைவரொருவர் இலங்கை வரலாற்றில் இல்லை. உண்மையைக் கூறுவதானால் ரணில் விக்கிரமசிங்க இந்த தேர்தலில் போட்டியிடுகிறாரா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. அவர் போட்டியிடுவதற்கு ஒரு கட்சி கிடையாது. அவருக்கு ஏற்பட்டுள்ள ஐயப்பாட்டினை அரசியலமைப்பு மூலமாக நாட்டின் ஐயப்பாடாக மாற்ற முனைகிறார். இது உயர்நீதிமன்றத்திற்கு வந்தால் நாங்கள் வாதாட எதிர்பார்த்திருக்கிறோம். ஆறு வருடங்களை விஞ்சுவதாயின் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியது அவசியமென்றே இந்த பிரிவில் இருக்கின்றது. காலத்தைக் குறைப்பதாயின் உண்மையாகவே அத்தகைய ஒன்று அவசியமா என வாதம்செய்ய எதிர்பார்க்கிறோம். இது உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சினையாகும். அப்படியானால் இதனை பாராளுமன்றத்தில் 2/3 மூலமாக எம்மால் தீர்த்துக்கொள்ள முடியுமா என பார்க்கவேண்டும். முடியுமானால் மக்கள் தீர்ப்பிற்குச் செல்லவேண்டியதில்லை. இயலுமானால் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் 2/3 ஐ எடுத்துக் காட்டட்டும்.
இன்று இந்த அரசாங்கம் ஒட்டுமொத்த சமூகத்தையுமே சந்தேகத்திற்கு ஐயப்பாட்டுக்கு இலக்காக்கி இருக்கின்றது. பயப்படவேண்டாமென மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி சரியாக விளங்கிக்கொண்டுள்ளது. இந்த தந்திரோபாயங்களுக்கு மாட்டிக்கொள்ள வேண்டாம். ஜனாதிபதி தேர்தலை எவராலும் தடுக்க இயலாது. இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் இயலுமானவரை சீக்கிரமாக வேட்பு மனுத் திகதியையும் தேர்தல் திகதியையும அறிவிக்குமாறு நாங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு விடுக்கிறோம். அப்போது இந்த பிரச்சினையில் அரைவாசி தீர்ந்துவிடும். தேசிய மக்கள் சக்தியின் வலிமையைக்கண்டு அஞ்சி ரணில் விக்கிரமசிங்க என்னதான் நாடகம் ஆடினாலும் இந்தப் பயணத்தை திசைதிருப்ப முடியாது. ரணில் விக்கிரமசிங்க இந்த சமூகத்தை ஐயப்பாட்டுடன் கொண்டுசெல்வதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதற்கான தீர்வினை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
Post a Comment