முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை, ஒப்பந்தமாக எழுதி கைச்சாத்திட போகிறோம்
தமிழ்- முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் பிரதேசங்களில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இனத்துவ சமநிலை பேணப்பட வேண்டும். தமிழ் சகோதரர்கள் பிரதேச செயலாளர்களாக இருந்தால், முஸ்லிம் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும். அதுபோல முஸ்லிம் சகோதரர் ஒருவர் பிரதேச செயலாளராக இருந்தால் தமிழ் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும்.
இன்னும் கதைத்து கதைத்து காலத்தை கழிக்க முடியாது. உடனடியாக செயலில் இறங்க வேண்டிய நேரத்தில் இருக்கிறோம். மக்களினுடைய உரிமை சார்ந்த விஷயங்களில் நாங்கள் எப்போதும் கரிசனையுடனையே தான் இருக்கிறோம் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் டி- 100 திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள் நாவிதன்வெளி அமீரலி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை கோலாகலமாக நடைபெற்றது. அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
எங்கள் மண்ணின் வளங்களை பயன்படுத்தி எத்தனை தொழிற்பேட்டைகளை உருவாக்க போகிறீர்கள் என ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேட்போம். அவர்களை ஆதரிக்க முன்னர் அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகள் எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கப்போகிறீர்கள் என்று கேட்போம். எங்களின் மூதாதையர்கள், தாய் தந்தைகள் தந்த நிலங்களுக்கு உரிமை கேட்க பிரதேச செயலகங்களில் பிச்சை பாத்திரம் சுமக்கும் சமூகமாக நாம் இருக்க முடியாது. ஸ்
ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது ஒருவர் அமைச்சராகவும், நால்வர் பிரதி அமைச்சராகவும் உருவாகும் இயக்கமல்ல. எங்களின் பலம் ஜனாதிபதியை தீர்மானிக்கும், பாராளுமன்ற ஆட்சியை தீர்மானிக்கும் பலமாக இருக்கும் போது ஆறு பேர்ச் நிலத்தின் உறுதியை பெற முடியாதவாறு தடுக்கும் சக்திகளுக்கு எதிராக போராட திராணியற்ற சமூகமாகவும், இயக்கமாகவும் நாங்கள் இருக்க முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளோ, முஸ்லிம் சமூகத்தினரோ தளர்ந்து விடக்கூடாது. தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் எமது பிரதேசங்களின் செயலாளர்கள், உதவி செயலாளர்களில் இனத்துவ சமநிலை பேணப்பட வேண்டும். தமிழ் சகோதர்கள் பிரதேச செயலாளர்களாக இருந்தால் முஸ்லிம் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும். அதுபோல முஸ்லிம் சகோதரர் ஒருவர் பிரதேச செயலாளராக இருந்தால் தமிழ் சகோதரர் ஒருவர் உதவி பிரதேச செயலாளராக இருக்க வேண்டும் எனும் நிலை உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இன்னும் கதைத்து கதைத்து காலத்தை கழிக்க முடியாது. உடனடியாக செயலில் இறங்கவேண்டிய நேரத்தில் இருக்கிறோம். நாவிதன்வெளி மக்களினுடைய உரிமை சார்ந்த விடயங்களில் நாங்கள் கரிசனையுடனையே தான் இருக்கிறோம்.
இன்னும் நம்முடைய மண்ணில் நாம் உரிமைகளை வென்றவர்களாக கௌரவத்துடன் வாழ வேண்டிய கட்டத்திற்கு வரவில்லை. தேர்தலொன்றை எதிர்நோக்கி இருக்கும் நாம் இருக்கின்ற மூன்று மாத கால அவகாசத்தில் மட்டுமல்லாது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு வருகின்ற காலத்திலும் தனிமனித கௌரவம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையை உறுதிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு எங்களுடைய ஆதரவை வழங்குவதாக இருந்தால் எமது பிரதேசங்களின் பிரச்சினைகள், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை பற்றி எழுத்துமூல ஒப்பந்தமொன்றை செய்யவேண்டும். அதில் நாவிதன்வெளி பிரதேச பிரச்சினைகள், காணி உரிமைகள், கல்முனை மாநகர மக்களின் பிரச்சனைகள், அம்பாறை மாவட்ட முஸ்லிங்களின் பிரச்சினைகள், கிழக்கு முஸ்லிங்களின் பிரச்சினைகள், தேசிய ரீதியாக முஸ்லிங்கள் எதிநோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஒப்பந்தம் பண்ணுவது காலத்தின் தேவையாக உள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் நடந்த போதும் சரி, ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடந்த போதும் சரி தமிழ் கட்சிகள் வட-கிழக்கு இணைப்பு, சமஸ்டி என்றெல்லாம் கேட்பார்கள். பிறகு பார்த்தால் இரண்டாவது விடயமாக கல்முனை மாநகர பிரச்சினைக்கு தீர்வு தரவேண்டும் என்றும் கல்முனையை நீதியற்ற, நியாயமற்ற விதத்தில் துண்டாடவும் கேட்பார்கள். மரணித்த சம்பந்தன் ஐயா கடந்த ஜனாதிபதி வாக்கெடுப்பின் போது இதுவிடயமாக டலஸ் - சஜீத் அவர்களுடன் ஒப்பந்தம் பண்ணினார். இவர்களின் ஒப்பந்தம் என்னவென்று காலையில் பார்த்தால் கல்முனையை பலியிட ஒப்பந்தம் கையொப்பமிடபட்டிருந்தது.
இவைகளையெல்லாம் அவதானித்துக்கொண்டு இவ்வாறான சதிகளை முறியடிக்க பலவகைகளிலும் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நம் சமூகத்திற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றார்.
எனவே எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் ஊடாக நாங்கள் யாருடன் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் பேசப்போகின்றோமோ அவர்களுடன் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை ஒப்பந்தமாக எழுதி கைச்சாத்திட போகிறோம். அது 50-100 பக்கங்கள் கொண்ட ஒப்பந்தங்களாக இருந்தாலும் சரி அதனூடாக இலங்கை முஸ்லிங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணவேண்டும் என்றார்.
Post a Comment