Header Ads



மர்ஹூம் றிஸ்மி ஆசானின் பங்களிப்பு மகத்தானது, ஒருநாளும் எங்களால் அவரை மறக்க முடியாது


இன்று மங்கி மறைந்து செல்லும் வாசிப்புப் பழக்கத்தை மக்கள் மத்தியில் மீண்டும் ஊக்குவிப்பதற்காக கிராமங்கள் தோறும் பொது நூல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என தினகரன், தினகரன் வார மஞ்சரி ஆசிரியர் தே. செந்தில் வேலவர் கூறினார்.


பலத்துறை கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த ‘தூண்டில்கள் துடிக்கின்றன’ கவிதை நூல் வெளியீட்டு விழாவில்  விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் கலாபூஷணம் எம். ஜே. எம். தாஜுதீன் தலைமையில் கம்மல்துறை‘அல்-பலாஹ்’ கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ‘றிஸ்மி அரங்கில்’ கடந்த 14.07. 24. ஞாயிற்றுக்கிழமை காலை இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


தேர்தல் திணைக்களத்தின் ஓய்வு நிலை ஆணையாளர் நாயகம் எம். எம். மொகமட் நளீமி இந்த விழாவில். சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.


பெரும் எண்ணிக்கையிலான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில். தொடர்ந்து உரையாற்றிய திரு. செந்தில் வேல் மேலும் கூறியதாவது,


இந்த பலகத்துறைக் கிராமத்தில் இலக்கிய ஆர்வம் நிறைந்தவர்களை காண்கிறேன். நூல்கள் வெளியிட்டு கலை இலக்கியப் பணி செய்யும் அவர்களது முயற்சி பாராட்டத்தக்கது.


வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த ஊரில் ஒரு பொது நூல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைக்கப்பட்டால் அதற்காக நான் 100 நூல்களை தருவதற்கு தயாராக இருக்கிறேன்.


நீர்கொழும்புப் பிரதேசத்துக்கும் தினகரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்த விழாவின் தலைவர் கலாபூஷணம் எம். ஜே. எம். தாஜுதீன் தினகரனின் உதவி ஆசிரியராக நீண்ட காலம் சிறப்பாக பணியாற்றியவர்.


இங்கு அமர்ந்திருக்கும் இஸ்மத்துல் ரஹ்மான் தினகரன் பதிப்பகப் பிரிவில் தலைமை அதிகாரியாக சிறப்பாக கடமை புரிந்தவர்.


பலகத்துறையைச் சேர்ந்து ரியாஸ் ரபீக்  தினகரன் பக்க வடிவமைப்பு பிரிவில் உயர் அதிகாரியாக இப்போதும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.


தினகரனின் வளர்ச்சிக்கு முஸ்லிம் மக்களிடமிருந்து தான் பேராதரவு கிடைக்கிறது. அதற்காக நான் முஸ்லிம் சமூகத்துக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.


இவ்விழாவில் நூல் அய்வுரை நிகழ்த்திய கவிஞரும் பன்னூலாசிரியரும் ஒலிபரப்பாளருமான  கலாபூஷணம் அஷ்ரஃப் சிகாப்தீன்  உரையாற்றுகையில்,


ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு இவ்வாறு மண்டபம் நிறைந்த சனக்கூட்டம் வந்திருப்பதை கண்டு நான் ஆச்சரியமடைகிறேன்.


பொதுவாக நூல் வெளியீடுகள் ஒரு தலைப்பிரசவம் போன்று கடினமானவை. எனினும் நூல் வெளியீட்டு விழாக்களுக்கு இப்போது மக்கள் மிகவும் குறைவாகவே வருகை தருகின்றனர்.

முன்னர் 300 பேர் அளவில் வந்தார்கள். ஆனால் இப்போது  50 பேர் அளவில் தான் வருகிறார்கள்.


கம்மல்துறை மக்கள் மத்தியில் கவிதை ஆற்றல் மிகுந்திருப்பதை காண நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வெளியிடப்படும் இந்தக் கவிதை நூல் அதற்கு தகுந்த ஆதாரமாகும்.அதிலே தரமான கவிதைகள் நிறைய உள்ளன.


இங்கு ஒரு பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டால் அதற்கு நானும் 100 நூல்களை வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.


வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கலாபூஷணம் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் இங்கு வாழ்த்துரை வழங்குகையில், 


இக்கவிதை நூலில் அடங்கியுள்ள கவிதைகள் அனைத்தையும் நான் வாசித்துவிட்டேன். அவை மிகவும் சிறப்பாக இருக்கின்றன. 


இக்கிராமத்து மக்களின் கவிதை ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். இப்பிரதேசத்தில் இலக்கியத்தை வளர்க்க எம்முடன் கைகோர்த்து நின்ற மர்ஹூம்  றிஸ்மி ஆசானின் பங்களிப்பு மகத்தானது. அவரை ஒரு நாளும் எங்களால் மறந்து விட முடியாது என்றார்.


இந்த விழாவில் மர்ஹூம் றிஸ்மி ஆசானின் மனைவி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். பரிசில்களும் வழங்கப்பட்டன.


இவ்விழாவில் கம்மல்துறை இக்பால் தலைமையில் கவியரங்கு ஒன்றும் நடைபெற்றது.


பலகத்துறை இளம் கவிஞர்கள் கவிதாயினிகள் இதில் கலந்து கொண்டனர்.


கவிஞர்களுக்கு ‘தமிழ் ஆசான் ஜெலீல் அதிபர் விருது’ வழங்கும் நிகழ்வு அவரது புதல்வரான எம். ஜே.எம். சாதிக் தலைமையில் நடைபெற்றது.


பலத்துறை கலை இலக்கிய வட்ட உப தலைவரும் தோப்பு ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய அதிபருமான. எம். எம். இர்ஷாத் நூல் அறிமுக உரை வழங்கி இக்கவிதை நூலை பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் றிஸ்மி அவர்களுக்கு சமர்ப்பணம் செய்தார்.


பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் பொருளாளர் கவிஞர் கம்மல் துறை எம் றிஸ்வான் சிறப்புக் கவிதை வாசித்தார்.


போருதொட்ட  ‘அல்-பலாஹ்’ கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


கவிஞர்களுக்கு விருதுகளும்  விழா அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.


பலத்துறை கலை இலக்கிய வட்டத்தின் செயலாளர். அபூசஊத் சைலாஸ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க, ஏ. எல். எம். சல்மான். மற்றும் சப்ரான் சலாகுதீன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.





No comments

Powered by Blogger.