ஜனாஸாவுக்கு வழங்கும் பரிசு
அப்பொழுது அங்கே ஜனாஸாவுக்கான இறுதி உரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.
அதிலே அந்த ஜனாஸாவிடம், வாழும் போதிருந்த பல நல்ல விடயங்களை மௌலவி அழகாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து.. இந்த ஜனாஸாவானது அதன் மறுமை வாழ்வை துவங்கப் போகிறது. மீண்டும் திரும்பி வர முடியாத ஒரு பயணத்தை துவங்கப் போகிறது...
இந்த ஜனாஸாவின் பிரியாவிடையின் போது, ஒரு அன்பளிப்பை கொடுத்தனுப்ப நாம் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று அந்த மௌலவி குறிப்பிட்டார்.
அந்த அன்பளிப்பு என்னவென்று உடனே குறிப்பிடாது, சில உதாரணங்களை விளக்கத் தொடங்கினார்..
அந்த அன்பளிப்புதான் என்னவாக இருக்கும்?! என்று நான் சிந்திக்க தொடங்கினேன்..
அது அந்த ஜனாஸாவுக்கான பிரார்த்தனைகளாக தான் இருக்கும் என்று மனம் கூறியது..
ஆனால் எனது கணிப்பு தவறு என்பதை மௌலவியின் தொடர்ந்த விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டேன்..
ஆம்! எம்முடன் வாழ்ந்து விட்டு பிரியாவிடை பெறும் நபருக்காக நாம் வழங்கும் மிகச் சிறந்த பிரியாவிடை பரிசு தான்
மன்னிப்பு!!!
பெற்றோர்- பிள்ளைகளுக்கு இடையில், கணவன்- மனைவிக்கு இடையில், சகோதரர்களுக்கிடையில் உறவினர்களுக்கு இடையில், நாம் தினம்தினம் எமது அன்புக்குரியவர்களை ஜனாஸாவாக வழியனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
அவர்களால் எமக்கு பல்வேறு விதங்களில் அநீதம் இழைக்கப்பட்டிருக்கும், அவற்றை நாம் மன்னிக்காமல் இறைவன் மன்னிப்பதில்லை..
அவற்றை நாம் மன்னிக்காமல் வெறுமனே அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதிலும் பயனில்லை.
சில போது அந்த ஜனாஸாவால் நாம், தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாகி யிருப்போம்..
அவர்களுக்கான மன்னிப்பை நாம் பரிசாக கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தால், எம்முடைய மறுமை வாழ்க்கையும் ஈடேற்றம் பெறுமல்லவா!
✍🏻 Fahima Farook
21.07.2024
Post a Comment