Header Ads



நபிகளாரின் காலத்தில் அக்கிரபோதி மன்னன், மதீனாவுக்கு அனுப்பிய குழு - இளவரசருக்கு கூறிய இலங்கைத் தூதுவர்


சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வத், அரேபியாவுக்கான தூதுவராகப் பதவியேற்ற பின்னரான தனது முதலாவது உத்தியோகபூர்வ  விஜயத்தை புனித மதினா முனவ்வரா நகருக்கு மேற்கொண்டார்.


இந்த விஜயத்தின் போது தூதுவர் அமீர் அஜ்வத், மதீனா பிராந்திய ஆளுநர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுடன் சினேக பூர்வமான ஒரு  உரையாடலை மேற்கொண்டார். 


அதன்போது தூதுவர் அவர்களை மதீனா பிராந்தியத்திற்கு வரவேற்ற கவர்னர் புதிய தூதுவர்  அமீர் அஜ்வத் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு சகல விதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.


இதற்குப் பதில் அளித்த தூதுவர் 


ஆளுநர்  வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததுடன், இவ்வாண்டுடன் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதையும் கோடிட்டுக் காட்டினார். சவுதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவுகளைத் தொட்டுக்காட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான நவீன ராஜதந்திர உறவுகள் 1974 ஆம் ஆண்டு கட்டியெழுப்பப்பட்டதையும் நினைவு படுத்தினார். 


இரு நாடுகளுக்கும் இடையிலான புராதன கால ராஜதந்திர உறவுகள் கி.பி. 7ம் நூற்றாண்டு வரை நீண்டு செல்கின்றது. அதாவது கி.பி. 7ம் நூற்றாண்டுகளில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த மூன்றாம் அக்கிரபோதி மன்னன் (கி.பி. 623 - 640) இலங்கையில் வாழ்ந்து வந்த அரேபியர்களின் வேண்டுகோளின் பேரில் மதீனாவை நோக்கி நபி முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு  தூதுக்குழுவை அனுப்பி வைத்தது வரை நீண்டு செல்கிறது எனக் குறிப்பிட்டார். அக்காலத்தில் அரேபியர்களால் இலங்கை 'செரண்டிப்' என அழைக்கப்பட்டது.


இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் கட்டி எழுப்பப்பட்டதன் பின்னரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தனது இவ்விஜயம் உணர்வுபூர்வமான பெறுமானங்களைக் கொண்டிருப்பதாகவும் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் சுட்டிக் காட்டினார்.


முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வை சுட்டிக்காட்டு முகமாக தூதுவர் அமீர் அஜ்வத், மதீனா நகரில் நடுவதற்காக இலங்கையின் 'போகன்விளா' செடிகளை ஆளுநர் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்ததன் மூலம் சவுதி அரேபியாவில் 10 பில்லியன் மரங்களை நடுவதற்கான பசுமை சார் இலக்குகளை அடையச் செய்வதற்கான தனது ஆதரவினையும் வெளிப்படுத்தினார்.


மேலும் தூதுவர் அமீர் அஜ்வாத் தனது விஜயத்தின் போது மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி ஸாலிஹ் பின் அலி அல் அக்லா அவர்களையும் சந்தித்தார். இச்சந்திப்பின் போது தூதுவர் அவர்கள் சவுதி அரேபியா மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையில் பல்வேறு துறைகளில் கல்விசார் ஒத்துழைப்புகளைப் பரிமாறிக் கொள்வது தொடர்பான பயனுறுதி வாய்ந்த ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.  


மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்விசார் புலமைப் பரிசில்களைப் பெற்று அதிகமான இலங்கை மாணவர்கள் பல்வேறு பீடங்களில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பயணத்தின் போது தூதுவர் தற்போது இப்ப பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருக்கின்ற இலங்கை வாழ் மாணவர் சமூகப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார்.


மேலும் இந்த விஜயத்தின் போது தூதுவர் அமீர் அஜ்வத் மதினா வர்த்தக சம்மேளனத்திற்கும் பிரசன்னமளித்தார். அங்கு சம்மேளனத்தின் பணிப்பாளர்கள் சபையின் முதலாவது பிரதித் தலைவர்  நாயிப் அல் ஸாயிதீ அவர்கள்  சம்மேளனத்தின்  பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து தூதுவர் அவர்களுக்கு மகத்தான வரவேற்பளித்ததுடன் வர்த்தக சம்மேளன வளாகத்தில் விசேட சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.


இச்சந்திப்பின் போது பணிப்பாளர்கள் சபையில் Power Point Presentation ஒன்றை முன்வைத்து உரையாற்றிய தூதுவர், இரு நாடுகளினதும் தனியார்துறையினருக்கு சிறப்பாக இணைந்து செயல்பட முடிந்த  வர்த்தகம், முதலீடு, உல்லாசப் பயணத்துறை, விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் தொடர்பிலும் கோடிட்டுக் காட்டினார்.


மேலும் இவ்விஜயத்தின் போது தூதுவர் அவர்கள் மதீனா நகரில் அமைந்துள்ள கலாசார மற்றும் வரலாற்று நூதனசாலை, புனித மஸ்ஜிதந் நபவி மற்றும் புனித அல்குர்ஆனை அச்சிடும் மன்னர் பஹ்த் அச்சகம் போன்றவற்றையும் தரிசித்தார்.


இலங்கைத் தூதுவராலயம்

ரியாத்



No comments

Powered by Blogger.