Header Ads



பள்ளியகொடல்ல அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை


நாட்டில் பாதி பேர் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். என்றாலும் நாட்டில் வறுமை ஒழிப்புக்கான ஒழுங்கமைந்த திட்டமொன்றை முன்னெடுத்த பாடில்லை. ஜனசவிய மூலம் மக்கள் பலப்படுத்தப்பட்டனர். இது நிரந்தர உதவித்திட்டமாக அல்லாமல், அடைவுகளை மையப்படுத்தி 2 ஆண்டுகளுக்கு மட்டுமே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில், அக்காலத்தை மையமாகக் கொண்டு, ஒரு கால அட்டவணையின் பிரகாரம் வறுமையை ஒழிக்கவும், மக்களை வலுவூட்டவும் இத்திட்டம் முன்னெடுத்து வரப்பட்டது. 


இன்றளவும் வறுமையை ஒழிக்க இத்தகைய திட்டவட்டமான வேலைத்திட்டத்தின் தேவை காணப்படுகிறது. இந்த நேரத்திலும், இவ்வாறானதொரு வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவைப்படுவதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இக்காலத்துக்கு ஏற்ற வகையில் அமைந்த இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 330 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன பொலன்னறுவை, மெதிரிகிரிய, பள்ளியகொடல்ல அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு  வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 17 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.


வங்குரோத்து நிலையால் போராட்டங்களுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்தி வருகின்றனர். வங்குரோத்து நிலையால் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மை நிலையை அடைந்துள்ளனர். ஏழ்மையில் இருந்து வெளிவர பிள்ளைகளுக்கு வழங்கப்பட முடியுமான மிக உயர்ந்த பரிசு சர்வதேச தரத்திலான, சிறந்த தரமான கல்வியாகும் என்பதை நாமனைவரும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். நவீன உலக்கு ஏற்ற கல்வியறிவை பிள்ளைகள் பெறுவார்களானால் சர்வதேச தொழிற்சந்தையில் கூடிய வருமானம் ஈட்டக் கூடிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வார்கள். மனப்பாட முறையிலான கல்விக் கொள்கையால் இந்த இலக்கை எம்மால் அடைய முடியாது. கல்வியில் பாரிய சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


எமது ஆட்சியில் சர்வதேச மட்டத்தை எட்டும் வகையில் பாடத்திட்டத்தை நாம் உருவாக்கித் தருவோம். ஸ்மார்ட் ரீதியான கல்வியை முன்னெடுப்பது போலவே ஸ்மார்ட் விவசாயத் திட்டங்களை உருவாக்கித் தருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.