உங்கள் வாட்சப் குரூப், என்ன குரூப்...??
- அய்யாஷ் -
சைத்தான்கள் தமது Duty களை ஆரம்பிக்கும் நேரத்தில் வீடுகளுக்குள் வந்து தமது shift களை ஆரம்பித்து விடலாம் என்கிற பயத்தில்தான் மஹரிப் நேரத்தில் வீட்டின் ஜன்னல்கள் கதவுகளை மூடுக்கிறோம். அதே போலத்தான் மொபைல் போன்களையும் மஹ்ரிப் நேரத்தில் unlock பண்ணி நோண்டிகொண்டு இருந்தால் எல்லா வகையான சைத்தான்களும் உங்கள் மொபைல் போன் 4G, 5G ஊடாக duty களை ஆரம்பிக்கும். அதன் விளைவு- குடும்பத்துக்குள் லடாய்!
இந்த லடாய்களில் வாட்ஸாப் குரூப்புகளின் பங்களிப்பு மகத்தானது.
ஒன்றாக படித்த குரூப், ஒன்றாக இருந்த குருப், ஒரே ஊர் குரூப்,அமைப்புகளின் குரூப், நியூஸ் குரூப், சமையல் குருப், சிஸ்டர் குரூப், சிங்கிள் மாம் குருப், பள்ளி குருப், எள்ளி நகையாட குரூப், ஒன்றாக ஊர் சுத்த ஒரு குரூப், ஒன்றாக காட்ஸ் விளையாட ஒரு குருப் , கரம் போர்ட் விளையாட ஒரு குருப், மையத்துக்கு ஒரு குருப், உதவி செய்ய ஒரு குரூப் என்று குரூப்புகளின் பரிணாம வளர்ச்சியை அடுக்கிக்கொண்டே போகலாம்..
இப்படி குரூப்புகளை உருவாக்கிய அட்மின்களின் ஆட்சி முறை அடிப்படைகள் பலவாறு பிரிக்கலாம் அவற்றில் ஒரு சில இதோ,
சர்வாதீகார ஆட்சி
இதில் அட்மின் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பார். யாருக்கும் பேசவோ எழுதவே அதிகாரம் இல்லை. மக்காவில் இமாம் பேச முன்னர் மன்னர் பிரதிநிதியின் அனுமதி பெறுவது போல அட்மின் மூலமாகத்தான் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும். அவர் இதற்கு பயன்படுத்தும் ஆயுதம் ' Admin only ' இதற்கு அவர் சொல்லும் நியாயம், ' இங்குள்ள பீக்காளிப்பயல்களுக்கு பேசத்தெரியாது எனக்கு மட்டும்தான் பேச தெரியும் . பிரச்சினை இல்லாமல் குருப் இருக்கும் '
முதலாளிதத்துவ ஆட்சி
இங்கே சில அட்மின்கள் இருப்பார்கள். அட்மின்களுக்கு அதிக வேலை வெட்டி இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் மூக்கை நுழைக்க மாட்டார்கள் . 'பேசரிந்தவன் பேசு பேச தெரியாதவன் காது கொடுத்து கேள்' என்பதுதான் அவர்களின் பாலிஸி. எதையும் ஷெயார் பண்ணுங்கள் என்பது அவர்களின் பாலிஷி.. பிரிச்சினை முற்றி அடிபிடி வருகிற வேளை மட்டும்தான் அட்மின்கள் தலை காட்டுவார்கள்.
சோஷலிஸ ஆட்சி
இந்த குரூப்புகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அட்மின்கள் இருப்பார்கள். குரூப்பில் ஷெயார் பண்ண வேண்டிய விஷயங்களை அவர்கள் வரையறுப்பார்கள். ஷெயார் கான்கள் கண்டது எல்லாம் ஷெயார் பண்ணினால், அட்மின் கையால் அம்பாணைக்கு வாங்கி காட்டுவார்கள். அத்து மீறினால் ஆள் அவுட். சில வார நாடு கடத்தல் தண்டனையின் பின்னர் மீண்டும் குரூப்புக்குள் போடப்படுவார். அட்மின்கள் இந்த குரூப்பில் அல்ஷேஸன் நாய்கள் போல மோப்பம் இட்டுக்கொண்டே இருப்பார்கள்.
ஜனநாயக ஆட்சி
நம்ம நாடு போல வாட்சப் குரூப்புகள் ஊழல் நிறைந்ததாக இருக்கும். பேரில் மட்டும் சனநாயகம் இருக்கும் உள்ளே இருப்பது எல்லாம் பிரிவும், அடிபுடியும், கருத்து வேறுபாடுகளும் தான்.. அட்மின் தனக்கு வேண்டியவர்களின் போஸ்ட்களுக்கு சிவப்பு இதயம் போட்டு சபாஸ் போடுவார்.. வேண்டப்படாதவர்களுக்கு 'out of context ' என்ற வார்த்தை போட்டு ஊமை குத்து குத்துவார்.
அடிக்கடி யாப்பு மாறும், விசாரணை கமிஷன்கள் என்கிற பேரில்மேலும் பல குரூப்புகள் ஒரே குடையின் கீழ் அமைக்கப்படும். அட்மின் மட்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக இருப்பார்.
இப்போ உங்கள் வாட்சப் குரூப் என்ன குரூப் என்று ஊகித்து கொள்ளுங்கள்..
-அய்யாஷ்-
Post a Comment