Header Ads



முஸ்லிம்களின் தரப்பிலிருந்து செந்திலிடம் சில கேள்விகள்


தொண்டமானுக்கு கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தலையீடு தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு


- Dr Y.L.M.Yoosuff, Attorney at Law -


வடகிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்து இனவாத அரசியலைச் செய்யும் தமிழ் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் இணைகிறாரா?


கடந்த சில தசாப்தங்களாக வடகிழக்கு முஸ்லிம் பிரதேச செயலகங்களுக்கு என்று பதிவு செய்யப்பட்ட நிலங்களை அபகரிப்பு செய்து தமிழ் பிரதேச செயலகங்களுக்குள் அந்த நிலங்களின் ஆட்சியைக் கொண்டு வருவதற்காக பல தில்லு முல்லு களை வடகிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் செய்தார்கள் என்பது வரலாறு.


1. கோறளைப்பற்று மத்தியிலிருந்து பறித்த காணிகளை மீள இன்னும் ஒப்படைக்காமை


2. கல்முனையில் ஆயுத முனையில் சட்ட விரோதமாக உபபிரதேச செயலகத்தை உருவாக்க முன் கல்முனையில் இருக்கும் 30%, 70% ஆன தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு தலா 29 கிராம சேவகர் பிரிவுகளை திட்டமிட்டே உருவாக்கியமை. 30% தமிழ் மக்களுக்கு 29 கிராம சேவகர் பிரிவுகள் வழங்கப் பட்டால் 70% முஸ்லிம்களுக்கு 68 கிராம சேவகர் பிரிவுகள் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கும் 29 கிராம சேவகர் பிரிவுகளே வழங்கப்பட்டது. ஏன் இந்த அநீதி ஆளுநரே?. இப்போது அதிகாரம் உங்கள் கையில். அநீதியை உங்களுக்கு திருத்த முடியாதா?


3. அம்பாறை மாவட்டத்தில் மொத்த பிரதேச செயலகங்கள் 19+1=20 ஆகும். 17% ஆன தமிழ் மக்களுக்கு எத்தனை செயலகங்கள் இருக்க வேண்டும் என்று கணக்கு பார்க்கத் தெரியாதவர்களா உங்களிடம் உள்ள அதிகாரிகள்? அதாவது 100/20=5, 17/5= 3.4. ஆக, 3 செயலகங்களுக்கு தகுதி பெறும் தமிழ் சமூகத்திற்கு எப்படி 4+1=5 செயலகம் வந்தது என்று சிந்திக்க முடியவில்லையா? இதுதான் தமிழ் தலைவர்களின் மோசடி, நேர்மையின்மை. இப்போது இப்போது 3 செயல்கள் இருக்க வேண்டிய சமூகத்திற்கு 5 செயல்களைப் பெற்று காணி அபகரிப்பு மட்டும் செய்யாமல் அரசவள ஒதுக்கீடுகளையும் அதிகளவில் பெறுவதற்கு தந்திரம் பண்ணுகிறார்கள். அதற்கு ஆளுநராகிய நீங்கள் சமாதானம் எனும் பெயரில் அவர்களின் மோசடித் திட்டத்திற்கு உதவ வந்திருக்கிறீர்கள், இல்லையா?


4. அம்பாறை மாவட்டத்தில் முதற் பெரும்பான்மையாக 48% வாழும் முஸ்லிம்கள் அரசாங்க அதிபராக வர முடியாது போனாலும் மேலதிக அரசாங்க அதிபராகவாவது வரலாமென்றால் அதையும் 17% தமிழ் தரப்பினருக்கு கொடுத்தது என்ன நியாயமோ ஆளுநரே? உங்கள் அரசாங்கம் தானே ஆட்சியில் இருக்கிறது. நீதி பெற்று கொடுக்க முடியாதா உங்களுக்கு?


5. முஸ்லிம்கள் (85%) பெரும்பான்மையாக வாழும் வடக்கு முசலி பிரதேச செயலகத்திற்கு இன்று வரை ஓரு முஸ்லிம் பிரதேச செயலாளரை நியமிக்க தமிழ் தலைவர்கள் அனுமதிக்கிறார்கள் இல்லையே ஆளுநரே! இது அவர்களின் இனவாத மனநிலைக்கு சான்று பகர வில்லையா ஆளுநரே?


6. இதேபோல் மன்னாரில் பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு தனி பிரதேச செயலகம் வழங்க தமிழ் தலைவர்கள் தடையாக இருக்கிறார்களே ஆளுநரே!


7. மேலும் அம்பாறையில் காரைதீவு, நாவிதன்வெளி பிரதேச செயலகங்களிலும் 40% ஆனவர்கள் முஸ்லிம்கள். 30% ஆக வாழும் தமிழ் மக்களுக்கு இனரீதியாக பிரதேச செயலகம் கல்முனையில் பிரிக்கப்பட முடியுமானால் ஏன் காரைதீவு நாவிதன்வெளிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு தனித்தனி பிரதேச செயலகம் பிரிக்கப்பட முடியாது ஆளுநரே? 


8. ஆளுநரே இந்த அநீதிகள் வடகிழக்கு தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் சமத்துவமின்மையை ஏற்படுத்தி நிரந்தர பகைமையை உருவாக்குமல்லவா? இதையா நீங்கள் விரும்புகிறீர்கள்? எனவே உண்மைகளை பொது மேடையில் விவாதித்து விட்டு நியாயத்தையும் சமத்துவத்தையும் அதனை அடுத்து பேசுவோமா?

No comments

Powered by Blogger.