முந்திரிக் கொட்டை ரணில், போட்டுத் தாக்கும் பசில் - (யானை - மொட்டு எப்படி சிதைந்தது..?)
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று குழு அக்கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடியது.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை களமிறக்குதல் தொடர்பிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராக களமிறக்குவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், கட்சியின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று பிறிதொரு தரப்பினரும் தமது நிலைப்பாட்டை குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ,
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அவர் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளமை முற்றிலும் தவறானது.
2022 ஆம் ஆண்டு எவ்வித நிபந்தனைகளுமின்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினோம். ஆனால் கடந்த 2 ஆண்டுகாலமாக அவர் பொதுஜன பெரமுனவின் கட்சிக்கு முன்னுரிமை வழங்கவில்லை.
மாறாக வீழ்ச்சியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியை எமது ஆதரவை கொண்டு பலப்படுத்தி பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தவே முயற்சிக்கிறார். இதற்கு இடமளிக்க முடியாது.
காபந்து அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அவர் சாதகமான பதிலை வழங்கவில்லை.அத்துடன் பொருளாதார மீட்சிக்காக அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க முடியாது. அவரது கொள்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கினால் கட்சி முழுமையாக இல்லாதொழியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளார்கள்.ஆகவே பெரும்பான்மையான நிலைப்பாட்டுக்கு அமையவே தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
- தமிழ் மிரர் -
Post a Comment