தஞ்சாவூரில் பட்டமளிப்பு விழாவில் ரவூப் ஹக்கீம் பங்கேற்பு
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி ,பாரதிதாசன் பல்கலைக் கழகத்தோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள , தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 18ஆம், 19ஆம், மற்றும் 20ஆம் பட்டமளிப்பு வைபவம், ஞாயிற்றுக்கிழமை (14), கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அதற்கு பிரஸ்தாப கல்லூரியின் கல்வி குழுமத்தின் போஷகர் எம். ஏ. தாவூத் பாட்ஷா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எம். முகமது முகைதீன் வரவேற்புரை ஆற்றினார். அதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே .எம். காதர் முகைதீன், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு 717 மாணவ மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் .
பெண்கள் ஒரு காலத்தில் உயர் கல்வி கற்க தயக்கம் காட்டியதையும், தற்போது பெண்கள் பல்வேறு துறைகளிலும் பட்டங்கள் மற்றும் தங்கப் பதக்கங்கள் பெற்று முதல் நிலைக்கு வந்துள்ளதையும் மையப்படுத்தியதாக அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.
விழாவில் கல்லூரி துணைத் தலைவர் ரபியா பேகம்,நிர்வாக துணை இயக்குனர் டாக்டர் சையத் ஹுசைன் அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் அப்ரோசா சுல்தானா ஆகியோர் பட்டதாரி மாணவிகளைப் பாராட்டிப் பேசினார்கள். துணை முதல்வர் முனைவர் சி. தங்கமலர் உறுதிமொழியை வாசிக்க,பட்டதாரிகள் அந்த பட்டமளிப்பு உறுதிமொழியை ஒப்புவித்தனர்.
விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் கல்வி குழுமத்தின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் , மாணவிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment