பரீட்சைத் திணைக்களமே, மாணவர் உரிமைகளை மீறலாமா..?
கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)
இலங்கையில் வாழும் மூவின மக்களில் பெரும்பான்மையினர் புரிதலுடனும், விட்டுக் கொடுப்புடனும் ஒவ்வொருவரினதும் சமயம், மொழி, கலாசாரம் என்பனவற்றை அங்கீகரித்தும் வாழ்ந்து வந்துள்ளமைதான் வரலாறாகும்.
இடைக்கிடையே சில சலசலப்புக்கள் அடிப்படைவாதிகளாலும், கடும் போக்குடையவர்களாலும், காழ்ப்புணர்வு கொண்டோர்களாலும் ஏற்படுத்தப்பட்டாலும் காலவோட்டத்தில் அவை மறக்கப்பட்டு சுமுகமான நிலைக்குத் திரும்பிவிடுவர். இதுவே மூன்று இனங்களையும் சேர்ந்த பெரும்பான்மையோரின் நிலைப்பாடாகும்.
இதற்கப்பால் வேறு சிலர் தங்களின் சுய இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு சமூகத்தின் மேல் மற்றொரு சமூகத்தின் காழ்ப்புணர்வை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான ஒரு நிகழ்வுதான் அண்மையில் திருமலை ஸாஹிறாக் கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையின்போது பரீட்சை மண்டபத்தின் மேற்பார்வையாளர் தான் ஒரு இனவாதி என்பதை முத்திரை குத்தி பதிவு செய்துள்ளார்.
பரீட்சை எழுத வரும் மாணவர்கள் பிஞ்சு மனம் கொண்டவர்கள். மட்டுமன்றி இந்தப் பரீட்சையை நான் எழுதி முடிப்பேனா? வினாத்தாள்கள் எப்படி வருமோ? எனது வாழ்வின் உயர் கல்வியின் முதற்படியில் காலடி எடுத்து வைக்கும் எனக்கு இறைவன் அருள் புரிய வேண்டும் என்ற பதற்றமான மனநிலையில் அச்சமும், பயமும் கலந்த ஒருவித மனோபாவத்தில்தான் அவர்கள் அந்த மண்டபத்துள் அமர்ந்திருப்பர்.
இந்நிலையில் மேற்பார்வையாளர்கள் பரீட்சை விதிமுறைகளை மாணவர்கள் கடைப்பிடிக்கின்றார்களா? என்பதை அவதானித்துக் கொண்டிருப்பர். மாணவர்களில் யாரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லையெனில் அவ்விடத்திலேயே அவர்களை அணுகி அவர்களின் விதிமுறை மீறலை அவர்களிடம் சுட்டிக்காட்டி அவர்களை நெறிப்படுத்துவதே மேற்பார்வையாளர்களின் கடமையாகும்.
இந்த ஒழுக்க விழுமியங்களை ஸாஹிறாக் கல்லூரி பரீட்சை மேற்பார்வையாளர் மீறியுள்ளார் என்பதே எமக்குக் கிடைக்கும் தகவலாகும்.
இந்த அடிப்படையில் திருமலை ஸாஹிறாக் கல்லூரி மாணவர்களின் பரீட்சை மண்டபத்தில் என்ன நடைபெற்றுள்ளது என்பதை நாம் ஊடகங்கள் மூலம் அறிந்து மிகுந்த மன வேதனை அடைகிறோம்.
மாணவிகள் அவர்களின் கலாசார விழுமியங்களின் அடிப்படையில் தலையையும், காதுகளையும் மறைத்து பர்தா அணிந்து வந்துள்ளனர். இது பரீட்சை மேற்பார்வையாளருக்கு பிடிக்கவில்லையாயின் ஒரு பெண் நோக்குனரை அழைத்து பர்தா அணிந்துள்ள மாணவிகளின் மூடப்பட்டுள்ள காதுகளில் ஏதாவது கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதைப் பரிசோதித்துப் பார்த்ததன் பின் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கவில்லை என அவரது உதவிப் பரிசோதகர் திருப்தியடைந்து பிரதம பரிசோதகரிடம் விடயத்தைக் கூறினால் காதோடு காதாக இவ்விடயம் மண்டபத்திற்குள்ளேயே முடிவடைந்திருக்கும்.
இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு அந்த மாணவிகளையும் பரீட்சை எழுத அனுமதி அளித்துவிட்டு இறுதியில் அம்மாணவியர் பற்றிய பிழையான தகவல்களை பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவித்து அவர்களின் பெறுபேறுகளைத் தடுத்து வைக்க உதவியமை இவரது திறமையற்ற நிர்வாக முறையையும், இவரின் அடிமனதில் ஆழப்பதிந்துள்ள காழ்ப்புணர்வையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்தச்செய்தி பாராளுமன்றம் வரை சென்று விவாதப் பொருளாக மாற்றம் பெற்று ஒரு சில ஊடகங்களும் இதனைப் பெரிதுபடுத்தி முஸ்லிம் சமூகத்தின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் செய்திகள் வெளியிடவும், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வில் விரிசலை ஏற்படுத்தவும் இவரது செயல்கள் காரணமாக மாறியுள்ளது.
இவர் ஒரு நீதியான, திறமைவாய்ந்த மேற்பார்வையாளராகவிருந்தால் தனக்கு இவ்விடயத்தில் தீர்வுகாண முடியவில்லையெனில் தனது மேலதிகாரிகளிடம் அல்லது அனுபவம் வாய்ந்தவர்களிடம் இது சம்பந்தமாக ஆலோசனைகளைப் பெற்று இம்மாணவிகளின் மன உளைச்சலை நீக்கியிருக்கலாம்.
இதனை விடுத்து இவர் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவே அறிக்கை விடும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் “மாணவிகளின் மத சுதந்திரத்தை மீறும் வகையில் இச்செயல் உள்ளது என்றும் அம்மாணவிகளின் கல்விக்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கையைப் பொறுத்தவரை அண்மைய வருடங்களில் சிறுபான்மையின முஸ்லிம்களை ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன” என்றும் கூறப்பட்டுள்ளது. (04.07.2024 விடிவெள்ளி)
நமது அரசு நாட்டு மக்களுக்கிடையே புரிந்துணர்வையும், சுமுக வாழ்வையும் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவரது செயற்பாடுகள் அரசின் கோட்பாடுகளுக்கு சவாலாக அமைவதுடன் அரசுக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இவரது செயற்பாடுகள் பரீட்சைத் திணைக்களத்திற்கும் மேலதிக வேலைப்பளுவையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான காழ்ப்புணர்வுள்ள வக்கிரபுத்தி கொண்ட பொருத்தமற்ற தகுதியற்றவர்களை பரீட்சை மேற்பார்வையாளர்களாக அல்லது பிரதம பரீட்சகராக நியமிப்பதில் பரீட்சைத் திணைக்களம் ஆய்வு செய்து பொருத்தமானவர்களை எதிர்வரும் காலங்களில் நியமிக்குமாறும் இந்த அபகீர்த்தியை ஏற்படுத்திய மேற்பார்வையாளருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைப்பதே பொருத்தமாகும். அத்துடன் இவ்வாறானவர்களை வைத்தியப் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பது நன்று என்ற பொது மக்களின் ஆதங்கத்தை சமூக ஆர்வலன் என்ற வகையில் தங்களுக்கு அறிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் பரீட்சைத் திணைக்களத்திற்குள்ளேயும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக மக்களின் அதிருப்தியைப் பெற்றுக் கொடுக்க ஒரு சிலர் திட்டமிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்த உதவி செய்து கொண்டிருக்கிறார்களோ? என்று எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கு ஹிஜாப் அணிந்து தோற்றிய 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பது பொது மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இவ்விடயம் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு பரீட்சைத் திணைக்கள அதிகாரிகளை விசாரணைக்கு அழைத்தபோதும் அவர்கள் சமூகமளிக்காது இதனை அலட்சியப்படுத்துகிறார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு பக்கம் மாணவர்கள் ஹிஜாப் அணிவதால் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தப்படுகிறது. மறுபுறம் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குச் சென்ற 13 அதிபர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படுகின்றன.
இவ்வாறான அதிகாரிகளுக்கு பெறுபேறுகளை இடைநிறுத்தம் செய்வது ஒரு பொழுதுபோக்கான செயல்களாக உள்ளதா? பரீட்சை ஆணையாளர் அவர்களே! இது ஒரு சமூகப் பிரச்சினை மாத்திரமின்றி மனித உரிமைகள் மீறப்படும் செயல்களுமாகும்.
எனவே, தாங்கள் இதில் நேரடியாக தலையிட்டு இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு செல்லாதிருக்க சம்பந்தப்பட்டவர்களை அழைத்து தீர விசாரித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென்பதே பொது மக்களின் வேண்டுகோளாகும்.- Vidivelli
Post a Comment