Header Ads



அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை


வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்தாவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தியமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துள்ளார்.


குறித்த விசாரணை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் மேல் மாகாணம் தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பன ஆகியோரை அமைச்சர் டிரான் அலஸ் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயந்த மாரப்பன, சம்பவம் தொடர்பில் அமைச்சர் டிரான் அலஸிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்தாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளருக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


சந்தேகநபர் தற்போது கொழும்புக்கு வெளியில் உள்ள மற்றுமொரு சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஏனைய 6 சந்தேகநபர்களும் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.