Header Ads



தேர்தலுக்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளும், அடக்குமுறைகளும், கொலைகளும் அதிகரிப்பு


இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் கொடுமைகளும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜமியத்துல் உலமாயே ஹிந்த் ஆகிய இயக்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.


“இத்தகையக் கொடூரங்களைத் தடுத்து நிறுத்துவதற்குச் சிறப்புச் சட்டங்கள் தாமதமின்றி உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்” என்றும் அந்த இயக்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.


இந்த இயக்கங்கள் சார்பாக ஜஇஹி டெல்லி தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


“2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வகுப்புக் கலவரங்களும், ஆள்கூட்டக் கொலைகளும், கட்டட இடிப்புகளும், கட்டாய வெளியேற்றங்களும் அஞ்சத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன” என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் துணைத் தலைவர் பொறியாளர் முஹம்மத் சலீம் கூறினார்.


“சண்டிகர், உபி, குஜராத்,மேற்கு வங்கம், தெலங்கானா,ஒடிஸா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகம் நடைபெறுவதாக”  ஜஇஹி வெளியிட்ட பத்திரிகை  அறிக்கை கூறுகிறது.


“ஜூன் 7 முதல் ஜூலை 5 வரையிலான இடைப்பட்ட காலத்தில் மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் பத்துக்கும் மேற்பட்ட  ஆள்கூட்டக் கொலைகளும், புல்டோசர் நடவடிக்கைகளும், அவற்றைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்து மக்களைக் கட்டாயமாக வெளியேற்றுவதும் நடந்திருக்கின்றன” என்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ‘அசோசியேஷன் ஃபார் புரடக்ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸ் (APCR)’ அமைப்பின் அறிக்கையையும் தலைவர்கள் வெளிப்படுத்தினர்.


“இப்படிப்பட்ட அநீதிகளைத் தடுத்துநிறுத்தும் வகையில் சட்டம் கொண்டுவர அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும், கொடுக்கப்பட வேண்டும்” என்று ஜமியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி குறிப்பிட்டார்.


“எதிர்க்கட்சித் தலைவர் எனும் முறையில் ராகுல் காந்தி மக்களவையில் தம் முதல் உரையிலேயே வெறுப்பு அரசியலுக்கும்  அக்கிரமங்களுக்கும் எதிராகக் குரல் எழுப்பியதில் மகிழ்ச்சி. மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இதுபோல் குரல் எழுப்ப வேண்டும்” என்றும் மௌலானா கேட்டுக்கொண்டார்.


-சிராஜுல்ஹஸன்

No comments

Powered by Blogger.