Header Ads



ரணில் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நாங்கள் உள்ளோம் - ஹக்கீம்


திருச்சியிலிருந்து எம். கே. ஷாகுல் ஹமீது


ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே நாங்கள் உள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என திருச்சி விமான நிலையத்தில் வைத்து  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவரும் கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தார்.


 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  உயர் கல்விக் கல்லூரியொன்றின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து விமானம் மூலமாக ஞாயிறு காலை 11.30 மணி அளவில் அவர் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.  அவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் மாநில எம். எஸ். எப். தலைவர் அன்சார் அலி மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றனர்.


பின்னர் திருச்சி விமான நிலையத்தில்  ரவூப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,


 பாபநாசம் ஆர்.டி.பி. தாவூத் பாட்ஷா கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அதிதியாகக் கலந்து கொள்வதற்காக அழைப்பையேற்று நான் தமிழ்நாடு வந்திருக்கிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நாளை குற்றாலம் சென்று விட்டு, நாளை மறுநாள் சென்னை செல்லவுள்ளேன். 


அண்மையில் நடைபெற்று முடிந்துள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்  வெற்றிபெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் நவாஸ் கனி  உட்பட சிலரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டியி ருக்கிறது. இவற்றையெல்லாம் பயணத் திட்டத்தில் உள்ளடக்கியே  மரியாதை நிமித்தமான பயணமாக  நான் இதனை அமைத்துக் கொண்டுள்ளேன்.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க ஏதும் பிரச்சினை இல்லை.மத்திய அரசும் தமிழக அரசும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர், காலநிலை காரணமாக தனியார் கப்பல் நிறுவனத்தின் தரப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது . மீண்டும் அதனை தொடங்குவதற்கான ஆர்வம் காட்டப்படுகின்றது. அதேநேரம் கப்பலின் தொழில்நுட்ப காரணம் தான் கப்பல் சேவை தொடங்குவதற்கு தாமதம் எனவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா - இலங்கை இடையே தரைவழியான சேவை தொடங்குவதற்கு முன்னர் ராமர் பாலத்தில் வழியே அந்த சேவை தொடங்க பல குறுக்கீடுகள் உள்ளதுடன், இந்தியா இலங்கை இருதரப்பினருக்கும் இடையே ஆர்வம் இருந்தாலும் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்று மீண்டுவரும்  இச்சமயத்தில் இலங்கைஅரசு இதில் தாமதம் காட்டிவருகிறது. ஆனால் இந்திய அரசு இதில் முனைப்புக் காட்டிவருகிறது.


மேலும் இலங்கையில் குழாய் வழியே இலங்கைக்கு எண்ணெய் கொண்டுசெல்வதற்கும், காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி தொடங்குவதற்கு முதலீடு செய்யப்பட்டு ஒப்பந்தங்களும் முடிவாகியுள்ளன.


இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்கள் உள்ளோம், ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில்  அறிவிக்கப்பட்டதும் எங்களது முடிவு என்ன என்பதை நாம் ஒன்றாகக் கூடி கலந்ததா லோசித்து அறிவிப்போம்.


தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையிலா ன பிரச்சினை என்பது தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு மீன்பிடிப்பது தொடர்பிலும் ஏற்பட்டுள்ளது, இதனால் மீன்களின் இனப்பெருக்கம்  குறைகிறது மேலும் கடலுக்கு அடியில் உள்ள வளங்களை சுரண்டி எடுத்துக்கொண்டு செல்வதால் தான் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்கள் இருதரப்பினரிடையேயான பிரச்சினைக்கு, சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


மேலும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் இடையே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது,  அதேபோன்று கச்சத்தீவு விவகாரத்திலும் ஒரு கருத்து ஒருமைப்பாடு ஏற்பட வேண்டும் என்பதுவே எங்களது நிலைப்பாடு.


தமிழக மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் நாங்கள் இருக்கிறோம், ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடி வாழ்வாதாரத்திற்கு ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபட்சத்திலும் மக்கள் நன்மைக்காக பல விஷயங்களை செய்கிறோம், மேலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழக மக்களுக்காக நாங்கள் ஆட்சிக்கு வரும்போது பல செயல்திட்டங்களைச் செய்யக் காத்திருக்கின்றோம். மேலும்  ஒரிலட்சம் வீட்டுதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இந்திய அரசு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது.


போருக்கு பின்னரான இலங்கையில் வளர்ச்சி ஏற்பட்டாலும் கடன் சுமை காரணமாக உலக நாடுகளுக்கு அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையிருக்கத்தக்கதாக, இந்திய மத்திய அரசு 4,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இலங்கைக்கு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் போன்ற பல்வேறு வகையான உதவிகளை  அளித்ததன்பேரில் தற்போது கடன்சுமையிலிருந்து ஓரளவு மீண்டுவருகின்றோம்.அதற்கு இந்திய அரசுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.


யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதனால் இலங்கை மீது சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் ஏற்பட்டதன் காரணமாக, புதிய சட்டமூலங்களை நிறைவேற்றி யிருக்கிறார்கள். உள்ளூர் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் காணாமல் போனவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது உட்பட பாதிப்புகளுக்கானவர்கள் விஷயத்தில் பல பரிகாரங்களை செய்வதற்காக ஒரு சர்வதேசக் கடப்பாடு இலங்கையின் மீது இருக்கின்றது. அதை நிறைவேற்றும் செயல்திட்டங்களில் இலங்கையின் தற்போதைய அரசு போதிய கரிசனை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.


 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எங்களது தரப்பு வெற்றி பெறுமேயானால், நிச்சயமாக இதில் கூடிய கரிசனையை நாங்கள் காண்பிப்போம். அதற்கான உத்தரவாதங்களை தமிழ் மக்களுக்கு நாங்கள் ஏற்கனவே கொடுத்திருக்கிறோம்.


உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆக கூடுதல் மக்கள் வாக்களிக்கும் தேர்தல் இந்திய பாராளுமன்றத் தேர்தல். அந்த வகையில், யார் ஆட்சிக்கு வந்தார் என்பதை விடவும், பாரிய அசம்பாவிதங்கள் நிகழாமல் இந்திய ஜனநாயகம் வெற்றியடைந்திருக்கிறது என்பதைத்தான் இங்கே நான் சொல்லியாக வேண்டும். 


மூன்றாவது முறையாக மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார் என்பது ஒரு புறம் இருந்தாலும், எதிர்க்கட்சிகள் பலமான நிலையில் இருக்கின்றன என்பது ஜனநாயகத்திற்கு உகந்த விஷயம். அந்த வகையில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் போதிய ஆசனங்களையும் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கின்றன என்பது ஒரு மிகப்பெரிய சாதனை என்றே நாங்கள் கருதுகிறோம். எனவே ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் .இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.